ஈசான்ய மூலை.. தலைவாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. நெகடிவ் எனர்ஜி அதிகரிக்குமாம்!
சென்னை: நம்முடைய வீடானது நேர்மறை சக்தியை அதிகரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நல்ல சக்தியும் இறை சக்தியும் நேரடியாக நம்முடைய தலைவாசல் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழையும் எனவே நம்முடைய தலைவாசல், மெயின் வாசலில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் வசிக்கும் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதனால்தான் எண்ணம் போல வாழ்வு என்றும் மனம் போல வாழ்வு என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தனர். நெகடிவ் எனர்ஜி அதிகமாக உள்ள வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். எனவேதான் வீட்டில் நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றவும் நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் நாம் சில விசயங்களை வாஸ்துப்படி செய்ய வேண்டும்.

ஒரு சில வீட்டின் வாசலில் கண்ட இடங்களில் செருப்பை போட்டு வைத்திருப்பார்கள். அது தவறான செயல். அதே போல முட்கள் உள்ள செடிகளையும் வீட்டு வாசலில் வைக்கக் கூடாது. அது நல்ல சக்தியை இறை சக்தியை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும். போன்சாய் மரங்கள், கற்றாழை, கள்ளி செடிகளை வீட்டின் தலைவாசல் அருகே வைக்கக்கூடாது.
தலைவாசலில் அமர்ந்து பேன் பார்க்கக்கூடாது. நிறைய பேர் வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து தலையை விரித்துப்போட்டுக்கொண்டுதான் பேன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அது தவறான செயல் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஈசன்ய மூலையில் எப்போதுமே நாம் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மாலை நேரங்களில் விளக்கேற்றி வைத்தால் நேர்மறை சக்தி அதிகரிக்கும்.
நம்முடைய வரவேற்பரையில் விநாயகர் சிலை, புத்தர் சிலைகளை சிறியதாக வைத்தால் வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். எதிர்மறை சக்திகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும். செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமி நம்முடைய தலைவாசல் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைகிறார் எனவே நாம் வீட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வரவேற்பறையில் நாம் இளம் சிவப்பு, மஞ்சள் நிறமுடைய வண்ணங்களை மட்டுமே பூச வேண்டும்.
ஈசான்ய மூலை ஈசன் வசிக்கும் இடம். வடகிழக்கு பகுதிதான் ஈசான்யம் எனப்படுகிறது. இந்த மூலையில் நாம் பொதுவாகவே கனமான பொருட்களை வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ இந்த பகுதியில் கார்ஷெட் அமைத்து விடுவார்கள். பொதுவாகவே தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருக்கும் விதமாக அமைக்க முடியும். தென்மேற்கு என்பது குபேர மூலை. வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை. குபேர மூலை உயரமாகவும் ஈசான்ய மூலை பள்ளமாகவும் இருக்க வேண்டும். இப்படி அமைப்பதுதான் முறையான வாஸ்து.
ஈசன்ய மூலையில் தலைவாசல் வைத்தால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கின் உச்ச ஸ்தானத்தில் வாசற்படி இருக்கும் போது வண்டி கார் நிறுத்துமிடமாக தென்கிழக்கில் அமைப்பது நல்லது. அதே போல கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கில் உச்சஸ்தானத்தில் வீட்டின கேட் இருக்கின்ற போது வண்டி கார் நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கார் பங்களா என்று மகிழ்ச்சியா வாழ்ந்தாலே பலர் கண்படும். கண் திருஷ்டியால் கூட எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழையப்பார்க்கும். அதை தடுப்பதற்காக நாம் மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றி வைப்பது நல்லது. செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வெண் கடுகு தூபம் போட்டு மருதாணி விதைகளை சேர்த்து சாம்பிராணி புகை போட்டால் எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications