Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சிலையை கவனித்துள்ளீர்களா.. வலது அல்லது இடது பக்கம் தும்பிக்கை இருப்பதன் உட்பொருள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தும்பிக்கையானை நம்பிக்கையோடு வணங்கினால் நலம் பல சேரும். யானை முகத்தான் கணபதியை கையெடுத்து கும்பிட்டால் காரியங்கள் கைகூடி வரும். விநாயகரின் தும்பிக்கை வலஞ்சுழி இருக்கும், சில கோவில்களில் இடஞ்சுழியாக இருக்கும். ஒருசில கணபதியின் தும்பிக்கை நேராகவே இருக்கும். கணபதியின் தும்பிக்கை உணர்த்தும் தத்துவம் என்ன என்று பார்க்கலாம்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. மிகப்பெரிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து அதனை ஆறு குளங்களில் விசர்ஜனம் செய்வார்கள். விநாயகர் உருவங்கள் பல வகைகளில் இருக்கும். சின்ன விநாயகர் முதல் பிரம்மாண்ட விநாயகர் வரை பல உருவங்களில் சிலைகள் வைத்து வழிபடுவார்கள். மிகப்பெரிய நகரங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் 10 நாட்கள் வரை நடைபெறும்.

Vinayagar Chaturthi: Difference Between Ganpati Idols With Thumbikkai On Right, Left, And Straight

பிள்ளையார் அனைவருக்குமே பிடித்தமானவர் எளிமையான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதையும் பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பத்திரங்களாலும் பூக்களாலும் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக் கொள்ள கூடியவர். குளந்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விநாயகர். பிற தெய்வங்களைப் போல அல்லாமல் விநாயகரின் உருவமே இந்த உலகிற்கு மிகப்பெரிய உண்மையை உணர்த்துகிறது.

கணபதியின் தும்பிக்கை பலருக்கும் நம்பிக்கையை தரக்கூடியது. விநாயகர் தனது தும்பிக்கையை வலது, இடது என்ற இரு பக்கமாக வளைத்தவாறு அருள் புரிகின்றார். வலபக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் 'வலம்புரி விநாயகர்' என்றும், இடப்பக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் 'இடம்புரி விநாயகர்' என்றும் அழைக்கின்றனர். சில விநாயகரின் தும்பிக்கை நேராக இருக்கும்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கும் வலம்புரி விநாயகர் வலம்புரி விநாயகர் ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களில் மட்டுமே வழிபட முடியும். வலம்புரி விநாயகருக்கு என்று ஓர் சிறப்பம்சம் உண்டு. இதில், தும்பிக்கையின் வளைவு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பை ஒத்துள்ளது. வாய் பகுதியின் வலது ஓரம் ஆரம்பித்து கன்னம், மத்தாம் தொந்தி வழியாக சுழன்று தும்பிக்கை வளைந்து இருக்கும். இதுவே வலம்புரி விநாயகர் சிறப்பு.

வலம்புரி விநாயகர் கோவில்களில் சில மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு மிக்கவையாக உள்ளன. தமிழகத்தின் பழமையான பிள்ளையார் கோவிலான பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் தான். செவல்பட்டியிலும், செட்டிநாட்டு பகுதிகள் பலவற்றிலும் வலஞ்சுழி விநாயகர் ஆலயம் உள்ளன. பிரான்மலை என்ற ஊரில் உள்ள சிறப்பு மிக்க குடைவரை கோட்டை கோயிலில், வலம்புரி விநாயகர் சங்க நிதி, பதும நிதி ஆகியோருடன் இணைந்து உள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருவலஞ்சுழியிலும் வலம்புரி விநாயகர்களை வழிபடலாம். வலம்புரி விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை பெறலாம்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவிலில் வலம்புரி விநாயகர் சிலை உள்ளது. இது உலக இன்பங்களிலிருந்து விடுதலை மற்றும் மோட்சத்தைப் அடைவதைக் குறிக்கிறது. இது பிங்கல நாடியை குறிக்கிறது, சூரியனின் ஆற்றல், படைப்பு மற்றும் அழிவைக் குறிக்கிறது. பொதுவாக வலம்புரி விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள். இது அரிதாகவே காணப்படும்.

வலம்புரி விநாயகரின் சிறப்பிற்கு மேலும் ஓர் காரணமாய், இரு முறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவபெருமான் எடுத்து சென்று விட்டார். பின் அவர் வந்து கேட்க என்னிடம் இல்லை. என் மகன் விநாயகன் வைத்திருக்கிறான் என்றார். பின் பல முறை அலைந்து திரிந்து விநாயகரிடம் தனது வலம்புரி சங்கை திரும்ப பெற்றார் விஷ்ணு. இப்படி பல நாள் வலம்புரி சங்கை தனது தும்பிக்கையில் வலது பக்கம் வைத்திருந்ததாலும் விநாயகரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கின்றனர். விஷ்ணுவின் சங்கை வைத்திருந்த காரணத்தால் வலம்புரி விநாயகரை வணங்கிட சகல காரியங்களும் சித்தியாகும் என்பதாம். வளமை, வல்லமை, செல்வம் வழங்கும் விநாயகராக வலம்புரி விநாயகர் திகழ்கிறார்.

விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக சுழித்தபடி இருப்பின் இடம்புரி விநாயகர் எனப்படுவார். பொதுவாக சிற்ப சாஸ்திரத்தில் வினை தீர்க்க கூடியவர் என கூறப்படுகிறது. மேலும், இடர்களை தீர்ப்பவர் இடம்புரி விநாயகர் என பேச்சு வழக்கில் கூறுவர். அனைத்து ஆலயங்களிலும் இடம்புரி விநாயகரே அருள் புரிவார். மணக்குள விநாயகர் போன்ற சிறப்பு மிகு பல கோயில்களில் விநாயகர் இடம்புரி விநாயகராகவே காட்சி தருகிறார். இன்னல்களை தீர்க்கும் வகையில் எங்கும் நிறைந்துள்ளார். இது தவிர்த்து இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் இணைந்து அருள்புரியும் கோயில்களும் உள்ளன. பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கல்யாண விநாயகர்கள் என்றவாறு இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் அருள் புரிகின்றனர்.

திருவலாங்காடு கோயிலில் வலம்புரி, இடம்புரி விநாயகர்கள் காட்சி தருகின்றனர். எந்த வடிவ விநாயகராயினும் நம்கை காத்து அருள் புரிவதில் எவ்வித பாகுபாடும் இன்றி அருள்மழை பொழிவர். இடம்புரி விநாயகரின் தும்பிக்கை வடக்கு நோக்கி சுழித்திருக்கும். இந்த நிலை சந்திரனின் குணங்களுடன் ஒத்துப்போகிறது, இது அமைதி மற்றும் பேரின்பத்தை குறிக்கிறது. நம்முடைய வீட்டில் இடம்புரி விநாயகர் சிலையை வைத்து வணங்கினால் அது பொருளாதார வளர்ச்சியையும் செல்வ செழிப்பையும் தருகிறது என்று நம்பப்படுகிறது. குடும்ப ஒற்றுமையை இந்த விநாயகர் அதிகரிப்பார் என்று கூறப்படுகிறது.

எல்லாவற்றிலும் மிகவும் அரிதானது நேரான தும்பிக்கை கொண்ட விநாயகர். இது சூட்சும நாடியின் திறப்பைக் குறிக்கிறது, இது உடல் உணர்வுகளுக்கும் தெய்வீகத்திற்கும் இடையிலான முழுமையான ஒற்றுமையைக் குறிக்கிறது. இந்த சிலைகள் கிடைப்பது அரிதானவை என்றாலும், வலது தும்பிக்கையுடன் ஒப்பிடும்போது நேரான தும்பிக்கை கொண்ட விநாயகரை வழிபடலாம்.

அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் நமது மூளை வலப்பகுதி, இடப்பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது. இடது பக்க மூளை உடலின் வலது பக்கத்தையும், வலது பக்க மூளை உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என அறிவியல் சொல்கிறது. நமது சாஸ்திரத்தில் இதனையே பிங்கலை, இடகலை நாடிகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. உங்களின் வலது பக்க மூளை செயல்படும் போது இடது பக்க நாசியில் சுவாசம் வரும். அதே இடது பக்க மூளை செயல்படும் போது வலது பக்க நாசியில் சுவாசம் வரும்.

இந்த சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்துத்தான் விநாயகருக்கு வலம்புரி, இடம்புரி விநாயகர் என துதிக்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நானே உன்னுள் இருக்கிறேன் என்று சொல்கிறார் விநாயகர். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள இந்த நேரத்தில் கணபதியை வணங்கி நினைத்த காரியங்களில் வெற்றியடையுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+