ருத்ராட்சத்தின் மகிமையை என்னால் விளக்க முடியாது! பார்வதியிடம் சொன்ன சிவப்பெருமான்!
சென்னை: சிவன் அருள் இருந்தால்தான் சிவன் சொத்தான ருத்ராட்சத்தை அணிய முடியும் என்றும் ருத்ராட்சம் அணிவது குறித்து சிவ ஆகமங்களில் தெய்வ ரகசியம் சொல்லப்பட்டுள்ளது என்றும் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குவோராவில் நானறிந்த ஆன்மீகம் என்ற ஐடியில் வெளியான பதிவில் கூறியிருப்பதாது: சிவன் அருள் இருந்தால்தான் சிவன் சொத்தான ருத்ராட்சத்தை கூட அணிய முடியும். ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம், சிவ மகா புராணம், மிகப் பழமையான சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட தெய்வ ரகசியம்.

எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்சம் மணிகளை வெறுமனே தொடுவதன் மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.
ருத்ராட்சத்தை அணிபவனும், வழிபடுபவனும் சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, தொடர இருக்கும் அநேக கோடி பிறப்புகளில் இருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும், உடையும் தருபவனும் ,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களை கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக் கொள்பவனும் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு, சிவலோகத்தை அடைகிறான்.
நம்பிக்கையோடும், நம்பிக்கை இல்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவன் ருத்ர அம்சத்தை பெறுகிறான்.
'ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கி கூற முடியாது' என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவி பாகவதம் கூறுகிறது. அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதின் மூலமும், விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை, ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.
ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில், அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு, ருத்ரலோகத்தை அடைவார்கள். சண்டாளனாகப் பிறந்தவனும், ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வான் ஆயின், அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும் .
கள் குடிப்பவனும், மாமிசம் உண்பவனும் ஆகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால், அவரது பாவங்கள் அனைத்தும் விலகும்.
ருத்ராட்ச மாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடதங்களையும் கற்று அறிந்தவனை விட சிறப்புப் பெறுவான். அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன. பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனை விட அதிக பலனைப் பெறுகிறான். ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்து கொண்டிருப்பான் ஆகில் அவன் இறந்தபின் ருத்ரலோகத்தை அடைகிறான்.
பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ , உண்ணக் கூடாததை உண்பவனோ யாராகிலும், அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், அவன் ருத்ரனுக்கு இணையாகிறான். ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.
காதுகளில் அணிபவன் 10 கோடிப் புண்ணியங்களை பெறுகிறான்.
கழுத்தில் அணிபவன் 100 கோடிப் புண்ணியங்களை பெறுகிறான். பூணூலில் அணிபவன் 1000 கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். கைகளில் அணிபவன் லட்சம் கோடி புண்ணியங்களைப் பெறுகிறான். இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான். ருத்ராட்சத்தை அணிந்தவாறு, வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில், அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது.
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத் தளைகளிலிருந்து விடுபடுகிறான். ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும், அதை பூசிப்பவன் சிவலோகம் சென்றடைந்து, சிவனைப் போலவே வணங்கப்படுகிறான். ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்து முக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தை தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில் ,ருத்ராட்சத்தை தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின், அது கங்கையில் நீராடியதை விட அதிக புண்ணிய பலன்களைத் தரும்.
மனிதன் மட்டுமல்ல; ஓர் அறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவு உள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால் அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும். பல்வேறு யுகங்களில் நாயும், கழுதையும் ,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால், அவை சிவலோகம் சென்றடைந்தன. மறு ஜென்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாக பிறந்தன.
பல நூறு பிறவிகளில் பல கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே ,இந்தப் பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்.
ருத்ராட்சத்தை தானம் செய்பவர்களுக்கும் ,அணிய வைப்பனுக்கும் இன்னொரு பிறவி இந்த பூமியில் இனி கிடையாது. இந்த வரிகள் அனைத்தும் சிவ மகா புராணத்தில் பார்வதி தேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரனே கூறுகிறார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications