சபரிமலை ஐயப்பன் கோயிலின் 18 படிகளுக்கு இத்தனை சக்தியா? இருமுடியின்றி படியேற அனுமதி கிடையாது ஏன்?
பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் 18 படிகளுக்கு இத்தனை சக்தியா? இருமுடி கட்டினால் மட்டுமே 18 படிகளில் ஏற முடியும், இது ஏன் தெரியுமா? ஐயனின் கதைகளை கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது.
சபரிமலை ஐயப்பனின் சன்னிதானத்தில் 18 படிகளுக்கும் பூஜை செய்வார்கள். இது போல் எந்த கோயிலிலும் படி பூஜை என்ற ஒரு வழக்கம் இல்லை. அப்படியிருக்கும்போது சபரிமலை கோயிலின் 18 படிகளுக்கும் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து பிரியா லட்சுமணன் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருக்கும் 18 படிகளும் ஆன்மீக சக்தி நிறைய பகுதி, முழுமையான பிராணன் கொண்ட பகுதியாகும். அதனால்தான் இந்த 18 படிகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறைகளில் தலையில் உள்ள சக்தி மையத்தில் நோய்களுக்கான சிகிச்சைகளை அளிப்பார்கள்.
முன்னோர்கள் காலத்தில் எல்லாம் தலையில் சுமை வைத்து தூக்கிச் செல்லும் வழக்கம் இருந்தது. இப்போது அது போன்ற வேலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் கபாலத்தில் உள்ள சக்தி மையங்கள் இயக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.
ஆனால் சபரிமலையில் தலையில் இருமுடிக் கட்டிக் கொண்டு தலையில் அழுத்தம் கொடுத்த வண்ணம் பிராணன் செயல்படும் வகையில் 18 படிகளை அணுகினால் உடலில் முழுமையான சக்தி மாற்றம் ஏற்படும். அதனால்தான் இதையே நியதி ஆக்கினார் அந்த ஐயன். இருமுடி கட்டாமல் சுவாமி ஐயப்பனை கூட தரிசித்துவிடலாம். ஆனால் இருமுடி கட்டாமல் 18 படிகளின் கிட்ட கூட நெருங்க முடியாது. இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இவர்கள் இருமுடியை கொண்டு செல்வார்கள். அந்த இருமுடியில் ஒரு பகுதியில் நெய் தேங்காயும் மறு பகுதியில் அபிஷேக பொருட்களும் இருக்கும்.
ஆண்டுக்கு 5 முறை மட்டுமே சபரிமலையின் நடை திறந்திருக்கும். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்துவிட்டு ஐயப்பன் தவம் செய்த இடமே சபரிமலையாகும். 18 மலைகளுக்கு இடையே இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால். ஐயப்பன் கோயிலின் பிரசாதம் என்றால் அரவணை பாயாசம், அப்பம்தான். இரவு நேரத்தில் ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டதும் கோயில் நடை சாத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications
