தஞ்சை நாச்சியார்கோவில் கல் கருடர்.. ஒரே ஆச்சரியம்.. இதுவரை விலகாத அந்த மர்மம்.. இதுதான் காரணமா?
கும்பகோணம்: நாச்சியார்கோவிலில் கல் கருடன் சிலையில் பல்வேறு மர்மங்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு நாரையூர் நம்பி பெருமாள், வஞ்சுல வள்ளி நாச்சியார் உள்ளனர். இங்குதான் கல் கருடர் இருக்கிறார். நாச்சியார்கோவில் விளக்குகளுக்கு புகழ் பெற்றது.

இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் புவிசார் குறியீடு கொண்டது. இந்த கோயில் கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பாதையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோயிலில் தாயாருக்கு தனி சன்னதி இல்லை, அவர் கல்யாண கோலத்தில் பெருமாளுடன் காட்சியளிப்பார்.
108 வைணவ திருத்தலங்களில் 20 ஆவது தலமாக இது விளங்குகிறது. பங்குனி மாதத்தில் இந்த நம்பி கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற அவருக்கு மகளாக மகாலட்சுமி திரு அவதாரம் எடுத்தார். அவரை மனித உருவில் வந்து சீனிவாசப் பெருமாள் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
பங்குனி மற்றும் மார்கழி மாதம் என இரு முறை மட்டுமே இந்த கல் கருடர் அவரது சன்னதியை விட்டு வெளியே வருவார். அப்போதுதான் அந்த மர்மம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது தெரியவில்லை. இந்த கருடர் ஒரே கல்லால் செய்யப்பட்டது என்பதால் இது கல் கருடர் என அழைக்கப்படுகிறது.
இது போன்று கல்லால் செய்யப்பட்ட கருடர் உலகின் வேறு எங்கும் இல்லை. கருடன் உலோகம் அல்லது மரத்தால்தான் செய்யப்பட்டிருக்கும். ஆனால் உலகிலேயே கல்லால் அதுவும் ஒரே கல்லாலான கருடன் சிலை நாச்சியார்கோவிலில்தான் உள்ளது.
பங்குனி, மார்கழி மாதத்தில் வெளியே கொண்டு வரப்படும் கல் கருடரை முதலில் 4 பேர் மட்டுமே தூக்கி வருவர். பின்னர் வெளியே வர வர அவரது எடை கூடி கொண்டே போதும். ஆரம்பத்தில் 4 பேர் தூக்கி வரும் நிலையில் அந்த எண்ணிக்கை 8, 16, 32, 64, 128 பேர் வரை தூக்கும் அளவுக்கு கருடனின் எடை அதிகரிக்கும்.
இந்த கருடரை சுமார் 1500 பேர் வரை கூட தூக்குவர். கருடரை கொண்டு செல்லும் தூரத்திற்கேற்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அது போல் அவர் கோயிலுக்கு திரும்பும் போது அப்படியே தலைகீழாக தூக்குவோரின் எண்ணிக்கை குறைந்து, 128, 64,32,16,8 என்றாகி, சன்னதிக்கு செல்லும் போது 4 பேர் மட்டுமே தூக்கிவருவார்கள்.
இந்த எடை கூடுதலும் குறைதலும் எப்படி நடக்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கல் அவ்வாறு வடிவமைக்கப்பட்டதா என தெரியவில்லை. அது போல் எடை கூடுவது குறைவது போன்று கல் எப்படி வடிவமைக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. எனினும் இத்தனை ஆண்டுகளாக இந்த மர்மம் விலகாமல் இருக்கிறது.












Click it and Unblock the Notifications