மரணத்துடன் போராடும் வயதான உறவுகளை 'மோட்ச'த்துக்கு அனுப்பும் கசவனம்பட்டி மல்லீஸ்வரர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மரணத்தை தர வேண்டும் என்பதற்காக வழிபாடு நடக்கக் கூடிய ஒரு கோவில் இருக்கிறது என்பது ஆச்சரியமானது அல்லவா?
"மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்"
ஒருவன் சாகாமலே மரணத்தை அணு அணுவாக அனுபவிக்க முடியும் என்பதை மேலே குறிப்பிட்ட தமது எழுத்துகளால் திணித்திருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து.

மரணம் என்பது புறக்கணிப்புக்குரியது. ஆனால் புறக்கணிக்கவே முடியாதது!
மரணங்களைக் கூட மனித குலம் இயற்கை மரணம், துர் மரணம் என வகைப்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த இரண்டுக்கும் இடைப்படாத அல்லது இரண்டிலும் பொருந்தாத "மரண"ங்களும் உண்டு.
பெண் பிள்ளை என்பதற்காகவே கள்ளிப்பால் கொடுத்து சிசுவிலேயே உயிரை காவு எடுக்கிற கோரக் கொலை அதில் ஒன்று.
ஆண், பெண் என பேதமின்றி முதுமையில் உழல்கிறவர்களை நோகாமல் உலகைவிட்டு அனுப்பி வைக்கிற தலைக்கூத்தல் அல்லது தலைக்கு ஊத்திவிடுவதல் உள்ளிட்ட கருணைக் கொலைகள் இன்னொரு வகை.
கோரக் கொலை, கருணைக் கொலைக்கும் அப்பால்
"வலிக்காமலேயே வலிய சாவு ஏற்படுத்துதல்" நடைமுறை நாம் அதிகம் அறியாத ஒன்று.

ஆம்.. வீட்டில் உயிருக்கு போராடுகிற ஒரு ஜீவன்.. படுத்த படுக்கையாக மரணம் எந்த நிமிடமும் நிகழும் என்பதற்காக உற்றார் உறவினர்கள் போட்டதை போட்டபடியே அத்தனையையும் விட்டுவிட்டு அந்த ஜீவனை அழைக்கப் போகும் மரணத்துக்காக கட்டில் முன்னே காத்திருக்கும் அந்த துயரம் தோய்ந்த தொண்டையை அடைக்கும் பொழுதுகளை விரைவாக முடித்து வைக்க - அந்த பாடாய்படும் ஜீவனின் உயிர் மூச்சை நிறுத்துவதற்கான ஒரு நடைமுறைதான்
"சாமீ சீக்கிரம் கூப்பிட்டுக்க" எனும் பிரார்த்தனை. இது என்ன பிரமாதம்? பொதுவாக இப்படியான வேண்டுதல்கள் அனைத்து இடங்களிலும்தானே இருக்கும். இதில் என்ன புதியது என்கிறீர்களா?
ஆம்..
"சாமீ சீக்கிரம் கூப்பிட்டுக்க என பிரார்த்தனை செய்வதற்காகவே ஒரு கோவில்!"
"சாமீ சீக்கிரம் கூப்பிட்டுக்க என்பதை நிறைவேற்றித் தரும் ஒரு கோவில்!"
"சாமீ சீக்கிரம் கூப்பிட்டுக் கொண்டால் மோட்சத்துக்கு செல்வதற்காக தீபம் ஏற்றும் ஒரு கோவில்"

ஆடு கிடாய் வெட்டாமல் வேண்டியபடி உறவுகளுக்கு மரணத்தை அருளித்தரக் கூடிய இப்படியான ஒரு கோவில் இருக்கிறதா?
மெய்யாலுமா? நெஜமாலுமா? நிஜம்தானா?
அதுவும் சுகப் பிரசவம் நடக்க வேண்டி பெண்களும் குடும்பமும் கூட்டம் கூட்டமாய் வந்து செல்லும் ஊரிலேயே
மரணத்துக்கா மன்றாடுகிற கோவிலும் இருக்கிறதா?
ஆம் நிஜம்தான்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கசவனம்பட்டி எனும் சிற்றூரில் இருக்கிறது சாமீ சீக்கிரம் கூப்பிட்டுக்க என மரணத்துக்கான பிரார்த்தனை நடக்கும் கோவில்! இங்கேதான் சுக பிரசவத்துக்காக வழிபடுகிற கோவில் மவுன குரு நிர்வாண சுவாமிகள் ஆலயம்!
கன்னிவாடி: கன்னிவாடி ஜமீன்.. நாயக்கர் காலத்தில் கோலோச்சிய குறுநில மன்னர்கள்! திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னிவாடி ஜமீன், நிலக்கோட்டை ஜமீன், சுக்காம்பட்டி ஜமீன் எனும் பாளையக்காரர்களின் பராக்கிரமங்கள் அன்றும் இன்றும் காலத்தால் அழிக்க முடியாதவையாக இருக்கின்றன. விருப்பாட்சி பாளையம் ஆண்ட கோபால் நாயக்கரும் எரியோடு பாளையம் ஆண்ட கவுடரும் போர்களில் செய்த தீரங்களை வெள்ளையர்கள் தங்களது வாழ்வியல் வரலாற்றில் எழுதி வைத்திருக்கின்றனர். கொடைக்கானல் மலைத்தொடரின் கீழ் பகுதியில் இருக்கிறது கன்னிவாடி எனும் பேரூராட்சி. இந்த கன்னிவாடியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது கசவனம்பட்டி.
கசவனம்பட்டி: கசவனம்பட்டி.. இந்த பெயரை உச்சரிக்கும் போது " மகான் ஶ்ரீ ஜோதி மவுன குரு நிர்வாண சுவாமிகள்" பெயரும் வந்து விழும். கசவனம்பட்டி சுற்று வட்டார கிராம மக்களின் யாத்திரை தலங்களில் ஒன்றாக இருக்கிறது மகான் ஶ்ரீ ஜோதி மவுன குரு நிர்வாண சுவாமிகள்" ஆலயம்.

கசவனம்பட்டி மவுன குரு நிர்வாண சாமிக்குதான் எத்தனை எத்தனை கதைகள்! எத்தனை எத்தனை வாய்வழி சம்பவங்கள்!
சிகரெட் துகள்தான் திருநீறாய் தந்தார்!
சாக்கடை நீரைத்தான் தீர்த்தமாய் தந்தார்!
எச்சிலைத்தான் பிரசாதமாய் தந்தார்!
உதைத்தே ஆசீர்வாதம் தந்தார்!
மவுனமாய் இருந்தே மனிதர்களை ஆசீர்வதித்தார்!
இத்தகைய மகாத்மியங்களுக்கு சொந்தக்காரர் சித்தி அடைந்த தலம்தான் கசவனம்பட்டி.
மல்லீஸ்வரர் ஆலயம்: கசவனம்பட்டி மவுன குரு நிர்வாண சாமி ஆலயத்தின் தென்பகுதியில் கிழக்கில் கோனூர் வழியாக திண்டுக்கல் செல்லும் சாலையை பார்க்க முடியும். இந்த சாலையில் கூப்பிடு தொலைவில் குளத்தின் கரையில் சலனமும் ஜனமும் இல்லாத நிலையில் இருக்கிறது ஒரு சிவாலயம். இதன் பெயர் மல்லீஸ்வரர் ஆலயம். சிவாலயத்தை வெளிப்படுத்தும் நந்தி முதலில் நம்மை வரவேற்கும். இதன் உள்ளே சிவலிங்கமே மல்லீஸ்வரர் தெய்வமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு பவுணர்மி நாளிலும் ஜனத்திரள் கூடும்! சிவாலயம் பொலிவு பெறும்! அப்படி ஒரு ஜோதி மயமாக இருக்கும் மல்லீஸ்வரர் ஆலயம்!
இத்தகைய சிவாலயத்தில்தான், உயிருக்குப் போராடும் உறவுக்கு மரணத்தை கொடு சாமீ! என கனத்த கல் மனதுடன் மண்டியிட்டு மன்றாடும் வழக்கம் உள்ளது. இப்படி மண்டியிட்டு மன்றாடிவிட்டு சென்றால் அடுத்த சில நாட்களிலேயே அத்தகைய மரணங்கள் வீடுகளில் நிகழ்ந்துவிடுகிறது...
அப்படி மரணங்கள் நிகழ்ந்த உடன் மீண்டும் மல்லீஸ்வரர் ஆலயத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மரணித்த உடல் எரியூட்டப்படும் முன்பாக மல்லீஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றப்படும்.
ஆம்
மல்லீஸ்வர் புண்ணியத்தால்
மல்லீஸ்வர் அருளிய வரத்தால் மரணித்துப் போன ஆத்மா
மல்லீஸ்வரர் ஆசீர்வாதத்துடன் மோட்சம் செல்லும் என்பதும் ஒரு நம்பிக்கை!
மரணம் தரும் கசவனம்பட்டி மல்லீஸ்வரர் ஆலயம் செல்லும் வழி:
திண்டுக்கல் நகரில் இருந்து பழனி செல்லும் வழக்கமான நெடுஞ்சாலையில் முத்தனம்பட்டி என்ற இடத்திலேயே கசவனம்பட்டி செல்லும் சாலை வழிப்பலகை வைக்கப்பட்டிருக்கும்.
திண்டுக்கல் நகரில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் பித்தளைப்பட்டி பிரிவில் இருந்து கோனூர் வழியாக கன்னிவாடி செல்லும் சாலையில் கசவனம்பட்டியை சென்றடையலாம்
மதுரை- செம்பட்டி- பழனி பைபாஸில் கன்னிவாடியில் இறங்கினால் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கசவனம்பட்டியை அடைய முடியும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications