’தமிழ் செம்மொழி’ முதலில் உரத்து முழங்கிய ’திராவிட சாஸ்திரி’- 33 வயதில் சரித்திரமான பரிதிமாற் கலைஞர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மண்ணுலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்தான்.. ஆனால் தமிழும் தமிழரும் வாழும் அத்தனை நூற்றாண்டுகளிலும் நினைவுகூர்ந்து போற்றப்பட்டுக் கொண்டே இருப்பவர்தான் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் Parithimar Kalaignar எனும் திராவிட சாஸ்திரி.

கி.பி.1870-ம் ஆண்டு இதே ஜூலை 6-ந் தேதி மதுரை அருகே விளாச்சேரியில் கோவிந்த சாஸ்திரி- லட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. இளம்பிராயத்தில் கற்றது தமிழ், கணிதம், வடமொழி. தமிழ் இலக்கணம், இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக கற்று தேர்ந்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்ட படிப்பு.. மாணவர் காலத்திலேயே விவேக சிந்தாமணி பத்திரிகையில் கட்டுரைகள்.. 22 வயதில் பி.ஏ.வில் முதல் மாணவராக தேர்வு என கல்வியில் உயர் சிகரம் தொட்டவர்.

 Tamil Classical Language: A life history of Dravida Sastri Parithimar Kalaignar!

திராவிட சாஸ்திரி: சூரிய நாராயண சாஸ்திரி சென்னையில் படித்த காலத்தில் ஈழத்து தமிழறிஞரான சி.வை. தாமோதரம் பிள்ளையும் சென்னையில்தான் இருந்தார். தமிழில் பெரும் புலமையுடன் திகழ்ந்த இளைஞர் சூரிய நாராயண சாஸ்திரியை அழைத்துப் பாராட்டியதுடன் அவரது செந்தமிழ்ப் புலமையை பாராட்டும் வகையில் கொடுத்தது பட்டம்தான் 'திராவிட சாஸ்திரி'.

பெயர் மாற்றம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்த போது டாக்டர் மில்லர், சூரிய நாராயண சாஸ்திரி என உச்சரிப்பதில் தொடர்ந்து தடுமாற அப்பெயரை அப்படியே தமிழில் பரிதிமாற் கலைஞர் (சூரிய- பரிதி; மால்- நாராயணன்'; சாஸ்திரி- கலைஞர்) என மாற்றிக் கொண்டார். ஆனால் பொதுவாக சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெயரையே பெரும்பாலான இடங்களிலும் நூல்களிலும் பயன்படுத்தி இருக்கிறார் என்கிறார் தமிழாய்வாளர் முனைவர் ம.இராசேந்திரன்.

 Tamil Classical Language: A life history of Dravida Sastri Parithimar Kalaignar!

செம்மொழி: தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் சிறப்பான புலமை கொண்டவர். சென்னை செந்தமிழுரை சங்கம் என்பதையும் நிறுவினார். 1901-ல் மதுரையில் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அத்தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் இதழில் உயர்தனிச் செம்மொழி எனும் தலைப்பில் தனித்த கட்டுரை எழுதியவர். ஆம் தமிழ் மொழி, செம்மொழிதான் என முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக மெய்ப்பித்து குரல் கொடுத்தவர் சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் எனும் திராவிட சாஸ்திரி. திருந்திய பண்புஞ், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே, செம்மொழியாம்- இத்தகு இலக்கணம் கொண்டது தமிழ் மொழி மட்டுமே என ஆணித்தரமாக முழங்கியவரும் திராவிட சாஸ்திரியார்தான்.

 Tamil Classical Language: A life history of Dravida Sastri Parithimar Kalaignar!

மதிவாணன் (நாவல்) ரூபாவதி' அல்லது காணாமற் போன மகள், கலாவதி (உரைநடை நாடகங்கள்) மானவிஜயம் (செய்யுள் நாடகம்) தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து சித்திரகவி விளக்கம் (கவிதைகள்), தமிழ் மொழியின் வரலாறு (ஆய்வு) என எண்ணற்ற படைப்புகளை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியவர் பரிதிமாற் கலைஞர். அத்துடன் நிற்காமல் 67 தமிழ் நூல்களை பதிப்பித்தும் பெருந்தொண்டாற்றியவர்.

 Tamil Classical Language: A life history of Dravida Sastri Parithimar Kalaignar!

காலம்தான் கொடியது! காலம்தான் கொடிதினும் கொடியது! தமிழ்ப் பேராற்றலுடன் பெருந்தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞரை எலும்புருக்கி நோய் காவு கொண்டு போனது! அந்தோ மறைந்தார் திராவிடத்து சாஸ்திரியார் (1903-ல் காலமானார்). ஆம் 33 வயதிலேயே சரித்திரம் பேசும் தன்னேரில்லா வரலாற்று ஆளுமையாய் வாழ்ந்து மறைந்தார் சூரிய நாராயண சாஸ்திரி!

கருணாநிதியின் நன்றி: அன்று பரிதிமாற் கலைஞர் கண்ட கனவைத்தான் 2004-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று தமிழ் செம்மொழி என பிரகடனம் செய்தது மத்திய அரசு. செம்மொழி தகுதி கிடைத்தது தொடர்பாக நிகழ்வு ஒன்றில் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ் மொழி செம்மொழி என அறிவிக்கப்பட்டதற்காக எனக்கு பாராட்டு விழா என்று குறிப்பிட்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கால்டுவெல், சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர், அவர்களை தொடர்ந்து தமிழ்ச் சங்கங்கள் பல, பேரறிஞர்கள் பலர் பாடுபட்டனர். அவர்களுக்கெல்லாம் பாராட்டுக்களை, நன்றியை என் வாயிலாக வழங்கியிருக்கிறீர்கள் என்றுதான் கருதுகிறேன். நான் ஒரு கருவி. இந்தக் கருவியை புலவர்கள், பேரறிஞர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உளி சிற்பம் செதுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டால், அந்த உளியே அந்தச் சிற்பத்தை செதுக்கியதாக பொருள் கொள்ள முடியுமா? சிற்பிகள் பலர், அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பெருமிதத்துடன் நன்றி தெரிவித்திருந்தார்.

 Tamil Classical Language: A life history of Dravida Sastri Parithimar Kalaignar!

பரிதிமாற் கலைஞர் மரணம் அடைந்த போது,

மாமதுரைப் பெம்மான் மேல்
மாலையெனப் பேர்புனைந்து
காமர் சிலேடை வெண்பாக்
கட்டுரைத்த பாவலனே
பாமணார் கோவே நீ பாரினைவிட் டேகியது
தாமதுரை சாமீ தமியேன் செய்
தீவினையோ... என வருந்தி பாடினார் சி.வை.தாமோதரம் பிள்ளை.

அதேபோல தமிழ்த் தென்றல் திருவிக, 33 ஆண்டுகளே வாழ்ந்த சூரிய நாராயண சாஸ்திரி அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள் என ஏக்கத்தை கொட்டி இருப்பார்.

நினைவு இல்லம்: விளாச்சேரி அக்ரஹாரம் தெருவில் உள்ள பரிதிமாற் கலைஞரின் வீடு அப்படியே பழமை மாற்றப்படாமல் புதுப்பிக்கப்பட்டு நினைவு இல்லமாக போற்றப்பட்டு வருகிறது. இந்த நினைவு இல்லத்தை உருவாக்கி திறந்து வைத்தவரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இந்த நினைவு இல்லத்தில் பரிதிமாற் கலைஞருக்கு வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரிதிமாற் கலைஞரின் நூல்களை நாட்டுடையாக்கி அவரது வாரிசுகளுக்கு ரூ15 லட்சம் பரிவுத் தொகை வழங்கியதும் 'கலைஞர் கருணாநிதி'!

ஆம் வாழ்ந்தது 33 ஆண்டுகள்தான்..
ஆனால் தமிழர் வாழ்வெல்லாம் வரலாறாய் நெடுங்காலம் நிலைத்திருக்கும் பரிதிமாற் கலைஞர் எனும் திராவிட சாஸ்திரியாரின் பெரும்புகழ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+