10 நிமிடத்தில் வீட்டிற்கே வரும் ஆம்புலன்ஸ்.. ஒரு கிளிக் செய்தாலே போதும்.! பிளிங் இட் அதிரடி அறிவிப்பு
டெல்லி: இந்த காலத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரு சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்து கொடுக்கும் இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பிரபல இன்ஸ்டன்ட் டெலிவரி செயலியான பிளிங் இட் அடுத்தகட்டமாக 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் என்ற திட்டத்தைத் தொடங்குகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை குறைவு, வீட்டிற்கே பொருட்கள் வந்துவிடுவதால் மக்கள் அதிகளவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யத் தொடங்கினர்.

இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள்:
கடந்தாண்டு இதை விட ஒருபடி மேலே சென்று இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமானது. இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளில் நீங்கள் வீட்டிற்குத் தேவையான எந்தவொரு பொருட்களையும் ஆர்டர் செய்யலாம். அது ஒரு சில நிமிடங்களிலேயே வீட்டுக்கு வந்துவிடும். கடந்தாண்டு இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் தான் நாடு முழுக்க ஹிட் அடித்தது.
இப்போது டெலிவரி செயலிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் முக்கியமான நிறுவனமாக ஃபிளிங் இட் இருக்கிறது. தினசரி அத்தியாவசியப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், செல்லப்பிராணிக்கான உணவுகள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் என அதை ஆர்டர் செய்தாலும் ஃபிளிங் இட் மூலம் நீங்கள் அதை 10 நிமிடங்களில் பெறலாம்.
10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்:
இதற்கிடையே இந்நிறுவனம் இப்போது அடுத்த கட்டமாக வேறு ஒரு முக்கியமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் ஆம்புலன்ஸ்.. ஆம், கோரிக்கை விடுத்தால் அடுத்த 10 நிமிடத்தில் நோயாளியின் வீட்டு வாசலுக்கே ஆம்புலன்ஸை அனுப்பும் புதிய திட்டத்தை பிளிங் இட் தளம் அறிமுகப்படுத்துகிறது.
முதற்கட்டமாகத் தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட ஹரியானாவின் குருகிராமில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஆம்புலன்ஸ்களுடன் இதைச் சோதனை முறையில் தொடங்கியுள்ளதாக பிளிங் இட் தளத்தின் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா அறிவித்துள்ளார். நமது நாட்டில் முக்கிய நகரங்களில் விரைவான ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அதைத் தீர்க்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெல்ல விரிவுபடுத்தப்படும்:
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ். நமது நகரங்களில் விரைவான மற்றும் நம்பகமான ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதில் உள்ள சிக்கலைத் தீர்க்க நாங்கள் எங்கள் முதல் படியை எடுத்து வைத்துள்ளோம். ஐந்து ஆம்புலன்ஸ்கள் உடன் முதற்கட்டமாக குருகிராமில் இருந்து இதைத் தொடங்குகிறோம்.
இதை மெல்ல மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்துவோம். உங்கள் ஏரியாவில் ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும் போது, உங்கள் பிளிங் இட் செயலியில் அடிப்படை லைஃப் சப்போர்ட் (BLS) ஆம்புலன்ஸை முன்பதிவு செய்வதற்கான ஆப்ஷன் அதில் தெரியும்" என்று அவர் தெரிவித்துள்ளார். பிளிங்கிட் ஆம்புலன்ஸ்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், AED (தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்), ஸ்ட்ரெச்சர், ஒரு மானிட்டர், அவசர மருந்துகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காக்கும் கருவிகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எப்படி புக் செய்வது.
பிளிங் இட் தளத்தில் ஆம்புலன்ஸ் ஆப்ஷன் தெரியும். அதை கிளிக் செய்து இந்த சேவையைப் பெறலாம். ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வாகனத்திலும் ஒரு பயிற்சி பெற்ற துணை மருத்துவர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு தகுதி வாய்ந்த ஓட்டுநர் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. லாப நோக்கற்ற மாடலில் ஆம்புலன்ஸ் சேவை இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணமே இதற்கு வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆம்புலன்ஸ் சேவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications