தாறுமாறாக ரேட்டை ஏற்றும் ஏர்டெல், ஜியோ! 52% கம்மி ரேட்டில் சூப்பர் திட்டத்தை அள்ளி தரும் பிஎஸ்என்எல்
சென்னை: ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்ய அதிகக் கட்டணத்தைக் கேட்கும் நிலையில், பிஎஸ்என்எல் அதிரடியில் இறங்கியுள்ளது. மிகவும் குறைந்த ரேட்டில் மக்களுக்கு உதவும் வகையில் பல அட்டகாசமான திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட 52% வரை குறைவாக இருப்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் இணையம் என்பது கிட்டத்தட்ட அத்தியாவசியமாகிவிட்டது. இதனால் மக்கள் மாதம்தோறும் செல்போன் ரீசார்ஜ்ஜை தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள். இருப்பினும், வருவாய் போதவில்லை எனச் சொல்லி டெலிகாம் நிறுவனங்கள் அவ்வப்போது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

ஜியோ
அப்படித் தான் சமீபத்தில் ஜியோ தனது ₹249 திட்டத்தை ஆகஸ்ட் 18ல் திடீரென நிறுத்தியது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் 28 நாட்களுக்குத் தலா 1 ஜிபி டேட்டா, இலவசக் கால் உள்ளிட்டவை கிடைக்கும். இதைத் திடீரென ஜியோ நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் இப்போது வேறு வழியில்லாமல் அதிக விலை கொண்ட பிளான்களுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.249 பிளான் இல்லாத சூழலில், இப்போது ஜியோவின் குறைந்தபட்சத் தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் ரூ.299க்கு போய்விட்டது. இதில் நமக்கு 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, இலவச கால் கிடைக்கும். இதற்கு அடுத்து ₹349க்கு ஒரு திட்டத்தை ஜியோ வைத்துள்ளது. இந்த ரூ.349 திட்டத்தில் நமக்கு 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா + கால் கிடைக்கும். மேலும், அன்லிமிடட் 5ஜி கிடைக்கும். அதாவது ஜியோவில் உங்களுக்கு தினசரி டேட்டா பிளான் வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.300 கட்ட வேண்டும்.
ரொம்பவே அதிகம்
இப்போது ஜியோவின் குறைந்தபட்ச பிளான் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கு இணையாக இருக்கிறது. ஏர்டெல் ₹299 (ஒரு நாளைக்கு 1 ஜிபி, 28 நாட்கள்) மற்றும் ₹349 (ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, 28 நாட்கள்) திட்டங்கள் தான் குறைந்தபட்சத் திட்டமாக இருக்கிறது. ஆனால், இத்தோடு அதிர்ச்சி நிற்கவில்லை. வருவாயைத் தக்கவைக்க மேலும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டி வரலாம் என்று சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் கூறியிருந்தது. எனவே, ரீசார்ஜ் கட்டணம் மேலும் கூட உயர வாய்ப்பு இருக்கிறது.
பிஎஸ்என்எல்
ஆனாலும், மாதாமாதம் ரூ.300 என்பது பலருக்கும் பெரிய தொகை. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதற்கு மாறாக, அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நமக்கு அட்டகாசமான திட்டங்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ₹141 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கும், ₹148 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கும் வழங்குகிறது. இப்போது இது குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டாலும் கூட விரைவில் இது விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.
அதாவது தினசரி 1.5 டேட்டா திட்டத்தைப் பொறுத்தவரை மற்ற நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் பிளான் 52% மலிவானது. பெரிய தொகையைச் செலவிட முடியாது என நினைப்போருக்கு இது ஏற்றதாக இருக்கும்.
களநிலவரம் என்ன?
இப்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் ஜியோ மற்றும் ஏர்டெல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வோடஃபோன் ஐடியாவின் சந்தாதாரர் தளம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜூன் 2025 மாதம் மட்டும் ஜியோ 19 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. அதேபோல ஏர்டெல் 763,482 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. அதேநேரம் ஜியோ 217,816 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.












Click it and Unblock the Notifications