மனிதர்களை ஏமாற்றலாம்! கடவுளை ஏமாற்ற முடியாது! ரவி மோகன் ஸ்டுடியோ திறந்தநாளில் ஆர்த்தியின் போஸ்ட்
சென்னை: ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "மனிதர்களை ஏமாற்றலாம், கடவுளை ஏமாற்ற முடியாது" எனப் பதிவிட்டிருப்பது, ஜெயம் ரவியை மறைமுகமாகத் தாக்குவதுபோல் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ரவி மோகன் குடும்பப் பிரச்சினை, வழக்குகள், வீடு ஜப்தி எனப் பல சிக்கல்களில் இருந்தாலும், தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஒரு படத்தை யோகி பாபுவை ஹீரோவாகக் கொண்டு எடுக்கப் போவதாகவும், அந்தப் படத்தை தானே இயக்கப்போவதாகவும் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தத் தயாரிப்பு நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரவி மோகனும் கெனிஷாவும் நேற்று திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வந்தனர். இவர்கள் திருப்பதிக்குச் சென்று வந்த புகைப்படங்கள் நேற்று வெளியானது. அதுபோல், தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவுக்கு வருமாறு ரவியும் கெனிஷாவும் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படமும் வெளியானது.
திருப்பதியில் கெனிஷாவுடன் ரவி மோகன்
இந்த நிலையில், நேற்று திருப்பதிக்குச் சென்று வந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நீங்கள் பிறரை முட்டாளாக்கலாம். உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் கடவுளை முட்டாளாக்க முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை பதிவு
இந்தப் பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையிலிருந்து தான் விலகுவதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். இதற்கு ஆர்த்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் கண்டனம்
இருவரும் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் திட்டிக்கொண்டனர். மேலும், ரவி மோகன் விவாகரத்து வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது இருவரும் குடும்பச் சண்டையைப் பொதுவெளிக்குக் கொண்டுவரக் கூடாது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆர்த்தி போட்ட பதிவு
இந்த நிலையில், தற்போது ரவி மோகன் கெனிஷாவுடன் கோயிலுக்குச் சென்று வந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், ஆர்த்தி இப்படி ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதுபோல், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ரவி மோகன் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கியிருந்தார்.

ஜப்திக்கு வரும் பங்களா
அந்த பங்களாவில் ஆர்த்தி, தனது இரு மகன்களுடன் ரவி மோகன் வசித்து வந்தார். திடீரென தன்னை அந்த வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் என ஆர்த்தி மீது ரவி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், அந்த வீட்டிற்கு 10 மாதங்களாகப் போக முடியாத நிலையில், அதற்கான தவணையையும் ரவி மோகன் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால், எச்.டி.எஃப்.சி நிறுவனம் அந்த வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நோட்டீஸை ரவி மோகன் தரப்பு வாங்கவில்லை; வங்கிக்கு வந்து வாங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டனராம்.
விதி வலியது!
காதலித்துத் திருமணம் செய்த மனைவியைப் பிரிந்து, ஆசை மகன்களையும் பிரிந்து, ஆர்த்திக்கு அவருடன் வாழ விருப்பம் என்று சொல்லியும் ரவி மோகன் மறுப்பது உள்ளிட்ட விஷயங்களை வைத்து, வீடு ஜப்தியை விமர்சித்துத்தான் ஆர்த்தி ரவி இப்படிப் பதிவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
ஒரே நிற ஆடை
இந்த நிலையில், இன்றைய தினம் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் ரவி மோகன், கெனிஷா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, ரவி மோகனின் சகோதரர் ராஜா மோகன், அவருடைய தாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கெனிஷாவும் ரவியும் ஒரே நிறத்திலான ஆடையை அணிந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications