ரஜினிக்காக 8 முறை ரத்தம் கொடுத்தேன்.. ஆனால் அவர் சொன்ன வார்த்தை மறக்க முடியாது! சரவணன் எமோஷனல்
சென்னை: நடிகர் சரவணன் தான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்றும், அவருக்காக ரசிகர் மன்றம் எல்லாம் தான் வைத்திருந்தேன் மன்றத்தின் சார்பாக எட்டு முறை ரத்த தானம் செய்து இருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு போன் செய்து சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியாது என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் சரவணன் "வைதேகி வந்தாச்சு" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதிலும் 1991 ஆம் ஆண்டு முதல் 96 ஆம் ஆண்டு வரை அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

அந்த நேரத்தில் தான் இவருக்கு நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படம் பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்த திரைப்படத்தில் சித்தப்பு கேரக்டரில் நடித்திருந்தார். இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் அந்த திரைப்படத்தின் மூலமாக தொடங்கி இருந்தாலும் இப்போது வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் நான் நடிகர் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர். ஆரம்பத்தில் எங்கள் ஊரில் நான் அவருக்கு ரசிகர் மன்றம் வைத்திருந்தேன். சூரமங்கலம் ரஜினி மன்றத்தின் கவுரவ ஆலோசகராக நான் தான் இருந்தேன். எட்டு வருடங்கள் மன்றத்தின் சார்பாக நான் ரத்தம் கொடுத்து இருக்கிறேன். ஆனால் எனக்கு பருத்திவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது ரஜினி போன் செய்தது மறக்க முடியாது.
அந்த திரைப்படம் ரிலீஸ் ஆனதும் ரஜினி சார் பார்த்ததும் நான் அவரிடம் பேச வேண்டும் என்று நின்று கொண்டு இருந்தேன். ஆனால் அவர் சூர்யா மற்றும் கார்த்தியோடு பேசுவதற்காக ரூமுக்குள் சென்று விட்டார். நானும் வெயிட் பண்ணி பார்த்துக் கொண்டிருந்தேன் என்னுடைய மனைவி பசிக்கிறது என்றதும் வீட்டிற்கு போய்விட்டோம். வீட்டிற்கு வந்த பிறகுதான் எனக்கு போன் வந்தது ரஜினி சார் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொன்னார்கள்.
அதுபோல சிறிது நேரத்தில் சொன்னது போலவே ரஜினி எனக்கு போன் பண்ணினார். எதற்காக வந்துட்டீங்க என்று கேட்டார். நான் நீங்க சூர்யா மற்றும் கார்த்தி இடம் பேசிட்டு இருந்தீங்க அரை மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டு இருந்தேன். வீட்டில் என் மனைவி கூப்பிட்டதால் வந்துவிட்டேன் என்று சொன்னேன். அவர் சரி என்று சொல்லிவிட்டு இந்த படத்தில் 13 இடத்தில் நீங்கள் கைதட்டு வாங்குவீர்கள் என்று சொன்னார். இவ்வளவு பெரிய மனுஷன் இவ்வளவு கவனிச்சிருக்கிறாரே என்று நினைத்தேன்.

அவர் அவ்வளவு கவனிச்சதால் தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார் என்பது இன்னொரு விஷயம். அது போல இந்த படத்திற்கு பிறகு உங்க பேரை மாத்துறது கஷ்டம்னு சொன்னாரு. என்னன்னா நான் 16 வயதினிலே என்று ஒரு படம் நடித்தேன். அந்த படத்துல பரட்டை என்ற கேரக்டரில் நடிச்சேன. அந்த கேரக்டரை சொல்லித்தான் பல வருஷமா என்ன எல்லாரும் கூப்பிடுவாங்க. அந்த பேரை மாத்தணும்னு நானும் ரொம்ப போராடுனேன்.
ஆனால் பல வருஷமா அந்த பேர மாத்த முடியல. அதுபோல இந்த படத்துக்கு பிறகு சித்தப்புன்னுதான் உங்களை பலர் கூப்பிடுவாங்க என்று சொன்னார். அதுபோலவே நான் ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன் அங்கு 80 வயசுக்கு மேல இருக்கும் ஒரு நபர் இருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் சித்தப்பு என்று சொன்னார் எனக்கு தூக்கி வாரி போட்டது என்று அந்த பேட்டியில் நடிகர் சரவணன் ஜாலியாக பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
