குடும்பத்துடன் கோடி கோடியாக சொத்துக்களை குவிக்காத அரசு வேண்டும்! வாக்களித்த பிறகு நடிகர் சிவகுமார் ஆதங்கம்
சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்களித்த பின்னர் நடிகர் சிவகுமார் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் சிவகுமார் பேட்டி
செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார், "என்னைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. ஆனால் TASMAC கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகாரர்களாக மாற்றியது போதும். தன் குடும்பத்தோடு கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றனும் இதுதான் என்னுடைய வேண்டுகோள் என்று கூறியிருக்கிறார்.
அவரது இந்த கருத்து உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
கேள்விக்கு கோபமாக பதில்
செய்தியாளர்கள் தொடர்ந்து, "டாஸ்மாக் காரணமாக உண்மையில் பாதிப்பு இருக்கிறதா?" என கேட்டபோது, சிவகுமார் சற்று கோபத்துடன் பதிலளித்தார்.
"பாதிப்பா என்று கேட்கிறீர்களே! குடிமக்களை குடிகாரர்களாக ஆக்கிட்டாங்க. நான் வேதனையில பேசுறேன். உங்க வீட்டில் யாரும் குடிக்கலன்னு நம்புறேன். கிட்டத்தட்ட 40% மக்கள் குடியால் பாதிக்கப்படுகிறார்கள்," என அவர் உணர்ச்சியுடன் கூறினார்.
இலவச சலுகைகள் குறித்து கருத்து
இலவச திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அது கொஞ்சம் தவறு இல்லை என அவர் தெரிவித்தார். ஆனால் டாஸ்மாக் மூடுவது குறித்து யாரும் வாக்குறுதி அளிக்காததை சுட்டிக்காட்டியபோது, "நான் டாஸ்மாக்குக்கு எதிராக இப்போ பேசல. கலைஞர் கருணாநிதி தொடங்கிய காலத்திலிருந்தே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன்," என்று கூறினார்.
சிவகுமார்
சிவகுமார் எப்போதும் மனதில் பட்டதை நேரடியாக வெளிப்படையாக பேசி விடுவார். இந்த முறை டாஸ்மாக் மற்றும் லஞ்சம் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக அவர் வெளிப்படையாக குரல் கொடுத்தது, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தேர்தல் களம்
இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை முக்கோணப் போட்டியில் உள்ளன. பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருவதால், வாக்குப்பதிவு சதவீதமும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபலங்களின் வாக்குப்பதிவு
இந்த தேர்தலில் பல திரை பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அஜித் குமார், விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்குச்சாவடிகளில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இது பொதுமக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக விழாவாக மாறிய தேர்தல்
காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதுடன், பல இடங்களில் முதியவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன
மொத்தத்தில், 2026 தேர்தல் வெறும் அரசியல் போட்டி மட்டுமல்ல; சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் மேடையாகவும் மாறியுள்ளது. அதில் நடிகர் சிவகுமார் கூறிய "டாஸ்மாக் மூட வேண்டும்" என்ற கோரிக்கை, அடுத்த அரசின் முக்கிய விவாதமாக மாறுமா என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.













Click it and Unblock the Notifications