நடிகர் விஷால் நிறைய கஷ்டப்பட்டாரு! அவருக்கு என்ன ஆச்சுன்னா...? மனம் திறந்த வரலட்சுமி
சென்னை: நடிகர் விஷாலுக்கு என்ன ஆனது என்பது குறித்து நடிகை வரலட்சுமி பகிர்ந்துள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை வரலட்சுமி கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மதகஜராஜா திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. முதலில் பொங்கலுக்கு ரிலீஸ் என போஸ்டர் வந்த போது கூட நான் யாரோ வதந்தி பரப்புகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் என்னை ப்ரமோஷனுக்கு அழைத்தார்கள். பிறகுதான் உண்மை என்பதை தெரிந்து கொண்டேன். தெலுங்கில் எனக்கு நிறைய நல்ல ரோல்களை தருகிறார்கள். நான் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். இப்போதில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் வருவேனா என சொல்ல முடியாது.
சினிமாவில் சில படங்களை இயக்க ஆசை இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு அரசியலுக்கு வருவேன். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். சினிமா நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வரக் கூடாது என்பதெல்லாம் கிடையாது.
நடிகர் , நடிகைகள் குறித்து சமூகவலைதளங்களில் மோசமாக கருத்து கூறுகிறார்கள். நாங்கள் இந்த நிலைக்கு வர எத்தனை கஷ்டப்படுகிறோம் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது.
மதகஜராஜா திரைப்படத்தின் பிரஸ்மீட்டிற்கு வந்த விஷாலுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. அவர் விரைவில் நலம் பெற வேண்டும். இந்த படத்திற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். பொதுவாக எல்லாருக்கே ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கும். அதன் பிறகு அவர்கள் மீண்டு வந்துவிடுவார்கள். அது போல் விஷாலும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு வரலட்சுமி தெரிவித்தார்.
நடிகர் விஷாலை பார்த்தாலே எல்லாருக்கும் நம் வீட்டு பக்கத்து வீட்டு பையன் போல் தோன்றும். எப்போதும் துருதுருவென இருப்பார். எல்லாவற்றிலும் அதிரடியாக இறங்குவார். திருட்டு விசிடிக்களை எத்தனை அதிரடியாக தடுக்க முயற்சித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போட்டியிட விரும்பினார், ஆனால் ஒரு சில காரணங்களால் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. கடந்த 2024 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்று அதகளப்படுத்தினார்.
அப்படிப்பட்ட விஷால், மதகஜராஜா படத்தின் ப்ரமோஷன் விழாவிற்கு வந்த போது கைகள் நடுக்கத்துடன், பெரிய கண்ணாடி அணிந்து கொண்டும், பேசும்போது வாய் குழறியும் காணப்பட்டார். அவரது அந்த நிலையை பார்த்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அன்று முதல் விஷாலுக்கு என்ன ஆனது என கேட்டு பலரும் வேதனையில் உள்ளனர். மதகஜராஜா படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் 6 பேக் வருவதற்காக விஷால் கடுமையாக உழைத்ததாகவும் அதற்காக உணவு அருந்தாமல் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்ததாகவும் இயக்குநர் சுந்தர் சி தெரிவித்திருந்தார். மேலும் அப்போது நடந்த சண்டைக் காட்சியில் குதிக்கும் போது விஷாலின் தலை குப்புற விழுந்து அடிப்பட்டது. ஒரு நிமிஷம் நான் மிகவும் பயந்துவிட்டேன். பிறகு அவர் நார்மலாகிவிட்டார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் மணிவண்ணன், மனோபாலா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications