திருப்பதியில் வாய் பேசமுடியாத ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய அஜித்! செல்பி கேட்டவருக்கு கிடைத்த மகிழ்ச்சி
சென்னை: நடிகர் அஜித்குமார், திரையுலகில் ஒருபக்கம் தனது AK64 படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் பிசியாக இருக்கும்போதே, மற்றொரு பக்கம் கார் ரேஸ் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் எனத் தனது தனிப்பட்ட ஆர்வங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, ஒரு ரசிகருக்காக அவர் செய்தச் செயல், இணையத்தில் வைரலாகி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

பேச முடியாத ரசிகரின் ஆசை
இன்று (அக்டோபர் 28), நடிகர் அஜித்குமார் திருப்பதி கோயிலுக்குச் சென்று, அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின்போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள், "தல, தல" என்று சத்தமாக எழுப்பிக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். உடனே, கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.
வைரல் வீடியோ
சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அஜித்குமார், அங்கிருந்த ரசிகர்களைக் கடந்து செல்லும்போது ஒரு ரசிகர் தன் கையில் இருந்த செல்போனை அஜித்திடம் காட்டியவாறு, தனக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது என்றும், அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். அதனைக் கண்ட அஜித்குமார், மற்றவர்கள் யாரையும் போட்டோ எடுக்க அனுமதிக்காத நிலையில், உடனே அந்த ரசிகரின் செல்போனை வாங்கி, அவர்களுடன் செல்பி எடுத்துக்கொடுத்திருக்கிறார். இந்தக் காட்சி வீடியோவாக வெளியாகி, பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அடுத்த சிவக்குமார்
நடிகர் அஜித்குமார் பொதுவாகப் பொது இடங்களில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார். அவரிடம் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்தால், உடனே செல்போனைப் பிடுங்கி வைத்துக் கொள்வது அல்லது தட்டிவிட்டுச் சென்று விடுவது போன்றச் சம்பவங்கள் முன்னர் நடந்திருக்கின்றன. அதனால், சில விமர்சகர்கள், "இவர் அடுத்த சிவக்குமார் கூட" என்று விமர்சித்திருந்த நிலையில், தற்போது வாய் பேச முடியாத ரசிகரின் ஆசையை நிறைவேற்றியது, அஜித்தின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
AK64, AK65 இரட்டை அறிவிப்பு
AK64 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு, அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள தன்னுடைய குலதெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். நவம்பர் 2ஆம் வாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் AK64 அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் பரவி கொண்டிருக்கிறது. அதேசமயம், AK65 படத்தின் டைரக்டரைத் தேர்வு செய்துவிட்டதாக மற்றொரு தகவல் பரவி வருகிறது.
இயக்குநர்
விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி அல்லது பிரஷாந்த் நீல் ஆகியோரில் யாராவது ஒருவர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் தான் AK65 படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளிலும் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனால், அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறாரா என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
ரேஸும், ஷூட்டிங்கும்
சினிமாப் படங்களுக்கு மத்தியிலும், கார் பந்தயத்தை விடாதவர் நடிகர் அஜித் குமார். சமீபத்தில் கூடச் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேரக் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்தார். தொடர்ந்து ஜெர்மனி, மலேசியா மற்றும் அபுதாபியிலும் நடைபெறும் கார் பந்தயப் போட்டிகளிலும் அஜித் குமாரின் ரேசிங் அணி கலந்துகொள்கிறது.
கார் ரேஸ் மட்டுமின்றி, துப்பாக்கி சுடும் போட்டியிலும் அஜித்துக்கு ஆர்வம் அதிகம். கடந்த 2022ல் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, 6 பதக்கங்களை வென்று அசத்தினார். நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு வருகை தந்து பயிற்சி மேற்கொண்டது, அவரது பன்முக ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
திருப்பதியில் அஜித் காட்டிய அன்பு, ஒரு நடிகராக அவர் அடைந்த புகழை விட, ஒரு மனிதராக உயர்ந்து நிற்பதையே காட்டுகிறது.












Click it and Unblock the Notifications