தலைவெட்டியான் பாளையம்: பஞ்சாயத்து பிரச்சனை சலித்ததா? ரசித்ததா? ஓடிடி திரை அலசல்
சென்னை: இந்தியில் வெளியான “பஞ்சாயத்” வெப் சீரிஸை தலைவெட்டியான் பாளையம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து இருக்கின்றனர். இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. ரத்தம், வன்முறை, வெட்டு, குத்து என்ற காட்சிகள் இல்லாமல் சமூக சிந்தனை மற்றும் காமெடி கலந்து இந்த சீரிஸ் இருக்கும் நிலையில் இந்தி சீரிஸ் போல இது கவர்ந்ததா? அல்லது சலித்ததா? என்று விரிவாக பார்க்கலாம்.
இந்தியில் "பஞ்சாயத்து" வெப் சீரிஸ் 3 சீசன்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரிஸை டிவிஎஃப் நிறுவனம் தற்போது தமிழில் ரீமேக் செய்துள்ளது. இதில் சித்தார்த் கேரக்டரில் நடிகர் அபிஷேக் குமார் நடித்திருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்த சித்தார்த் (அபிஷேக் குமார்) கவர்மெண்ட் எக்ஸாம் எழுதிருந்த நிலையில் அவருக்கு பஞ்சாயத்து செகரட்டரி வேலை கிடைத்திருக்கிறது.

தனக்கு அரசு வேலை சின்ன கிராமத்தில் கிடைத்திருக்கிறது என்று வேண்டா வெறுப்போடு அந்த கிராமத்திற்கு வேலைக்கு வருகிறார். அதே ஊரில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக மீனாட்சி சுந்தரம் (சேத்தன்) இருக்கிறார். அவர் தன்னுடைய மனைவி தேவி (தேவதர்ஷினி)யை பஞ்சாயத்து தலைவர் ஆக்கி அந்த வேலையை தானே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பல இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தங்களுடைய மனைவிகளை ஜெயிக்க வைத்து கணவர்கள் அங்கு அதிகாரம் செய்வது இந்த வெப் சீரிஸில் அழகாக காட்டியிருக்கிறார்கள். நகர சூழலில் வளர்ந்த சித்தார்த் அந்த கிராமத்தில் படும் கஷ்டங்கள்... அந்த கிராமத்தை விட்டு பெரிய பதவிக்கு போய்விட வேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சிகள் அவருக்கு பலித்ததா இல்லையா என்பதுதான் இந்த சீரிஸின் கதை கரு.
பொதுவாக ரீமேக் என்று வரும்போது இது ஒரிஜினல் போல இருக்கிறதா? இல்லையா? என்ற ஒப்பீடு எல்லோருக்கும் இருக்கும். அதே போல இந்த சீரியஸை எடுத்துக் கொண்டால் ஒரிஜினலான ஹிந்தி சீரியஸில் இருக்கும் இயல்பான தன்மை தமிழில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த சீரிஸை பார்த்தவர்களுக்கு தமிழ் சீரிஸ் பார்க்கும்போது சலிப்பு தட்ட வாய்ப்பு இருக்கிறது.
இந்த சீரிஸ் எட்டு எபிசோடுகள் இருக்கிறது. முதல் எபிசோடில் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தான் காட்சிகள் இருந்தது. கதாநாயகன் (செக்கரட்டரி சித்தார்த்) ஊருக்கு வரும்போது அங்கு பஞ்சாயத்து தலைவரின் கணவர் பஞ்சாயத்து ஆபீஸ் சாவியை தொலைத்து விடுவது, பிறகு திறந்தவெளியில் மலம் கழிக்கும் இடத்திற்கு செக்ரெட்டியை கூட்டிக்கொண்டு செல்வது போன்ற காட்சிகள் ஐயோ என்று சொல்லும் அளவிற்கு இருந்தது.
அதற்கு பிறகு அடுத்தடுத்த எபிசோடுகளில் சில சுவாரசியங்கள் இருந்தது. ஆனால் இந்த காமெடி சீரிஸில் காமெடி எங்கே இருக்கிறது என்று தான் தேட வேண்டும். எப்போதும் கதாநாயகன் ஒருவித இறுக்கத்தோடு இருக்கிறார். அதுபோல பஞ்சாயத்து ஆபீஸ்க்குள் நடக்கும் அரசியல், கிராமத்திற்குள் மாதவிலக்கை இயல்பாக ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சிக்கல் போன்றவற்றை சில இடங்களில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
வழக்கம்போல சேத்தன் மற்றும் தேவதர்ஷினி இந்த சீரியஸில் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள். அதுபோல பஞ்சாயத்து ஆபீஸ் உதவியாளர், ராணுவ வீரரின் அப்பா போன்றவர்களும் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ஆனால் பஞ்சாயத்து வெப் சீரிஸின் பலம் அந்த கிராமத்து அழகுதான். ஆனால் தலை வெட்டியான் பாளையத்தில் திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கதை தொடங்குவது போன்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
கிராமத்தின் அழகு அருமையாக இருந்தாலும் அது திருநெல்வேலி என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்கு தான் கதை போய்க் கொண்டிருக்கிறது. பொதுவாக பல திரைப்படங்களிலும் திருநெல்வேலி பாஷை என்றால் “ஏல” என்று சேர்த்து விட்டால் போதும் என்று நினைப்பது போலத்தான் இந்த சீரியஸிலும் உருட்டி இருக்கிறார்கள். ஆனால் அது அந்த ஊர் வழக்கத்தை கண் முன் கொண்டு வர வில்லை.
ஆனால் மூடநம்பிக்கையை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பலர் நம்பிக்கொண்டிருப்பதை கடைசியில் அதெல்லாம் பொய் என்று ஒரு காட்சியில் காட்டி இருப்பது அருமை. இந்த சீரிஸின் ஒரிஜினலை பார்க்காதவர்களுக்கு கடைசி சில எபிசோடுகள் பிடிக்கும்.












Click it and Unblock the Notifications