ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023.. ராதிகா முதல் கோபிநாத் வரை..நெகிழ வைத்த வார்த்தை
சென்னை: அனைத்து தமிழ் சேனல்களின் நட்சத்திரங்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முதல்முதலாக ஒரே மேடையில் திரண்ட பிரமாண்ட விழாவாக கோலாகலமாக நடைபெற்றது ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023.
லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்கள் வாக்களித்து தங்கள் ஃபேவரைட் நட்சத்திரங்களை சில பிரிவுகளில் தேர்வு செய்தனர். பிற பிரிவுகளில் விருதுக்குரியவர்களை தமிழகம் முழுக்க இருந்து தொலைக்காட்சி ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை உலகின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்தது. இப்படி மாபெரும் உழைப்பின் முடிவில், நம் இல்லம் தேடி வரும் கலைஞர்களுக்கு கிரீடம் சூட்டிய விழாவாக இது நடைபெற்றது.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 விழா, கடந்த ஜூலை 14-ம் தேதி சென்னையில் தி லீலா பேலஸ் அரங்கில் நடைபெற்றது. எல்லா சேனல்களைச் சார்ந்த சின்னத்திரைக் கலைஞர்கள், டெக்னீஷியன்கள், நெறியாளர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஃபேவரைட் நடிகர், ஃபேவரைட் நடிகை, ஃபேவரைட் குடும்பம், ஃபேவரைட் ரியாலிட்டி ஷோ, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், சிறந்த இயக்குநர், சிறந்த தொடர், சிறந்த தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நெறியாளர், சிறந்த செய்தி வாசிப்பாளர் உள்ளிட்ட 29 பிரிவுகளில் ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது ஆனந்த விகடன்.

விழாவின் ஹைலைட்டாக இருந்த விருது, Face of Tamil Television. இந்த விருதைப் பெறுவதற்கு 'நீயா நானா' கோபிநாத் மேடை ஏறும்போது எழுந்தது பெரும் கரகோஷம். அவருக்கு இந்த விருதை டிஸ்னி ஸ்டார் நிறுவனத்தின் கிளஸ்டர் ஹெட் கிருஷ்ணன் குட்டி, விஜய் டி.வி சேனல் ஹெட் ஆர்.பாலச்சந்திரன் ஆகியோர் வழங்க, உடன் இணைந்தார் மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் குரு சங்கர்.
அதில் கோபிநாத் பேசுகையில் ''என்னுடைய முதல் விருது ஆனந்த விகடன் கொடுத்ததுதான். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் விளையாட்டாய் இருந்தேன். நிகழ்ச்சி ஏற்படுத்தும் மாற்றங்களைக் கண்முன்னே பார்த்தபோது பொறுப்புணர்வு கூடியது. 18 வருடங்கள் ஆனாலும் நாளைக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சியைப் புதிதாகத்தான் பார்க்கிறேன். 'நீயா நானா' நிகழ்ச்சிக்காக உழைக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் முகங்களைச் சுமந்துதான் நான் இங்கு நிற்கிறேன். இது அவர்களுக்கான விருதும்கூட!'' என்று பூரிப்போடு சொல்லிச் சென்றார் கோபிநாத் வழங்கினார்.

கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் ஆளுமையைச் செலுத்தி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக வலம் வரும் ராதிகா சரத்குமாருக்கு எவர்க்ரீன் ஸ்டார் ஆஃப் தமிழ் டெலிவிஷன்' விருதை வழங்கி பெருமைப்படுத்தியது ஆனந்த விகடன். அந்த விருதை தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தம்பதியும், மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் குரு சங்கரும் வழங்கினார்கள்.
அப்போது ராதிகா சரத்குமார் பேசுகையில் ''வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வரும்போது பலர் என்னைத் தடுத்தார்கள். மீண்டும் சினிமாவுக்கு வர முடியாது' என்று எச்சரித்தனர். ஆனால், நான் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மனதையும் குறிக்கோளையும் பின்தொடர்ந்தால் நிச்சயமாக வெல்லலாம்" என்றார். அவரது பேச்சு, சின்னத்திரை நடிகர்கள் பலருக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தது.

வழக்கமான டெம்ப்ளேட்களுக்கு மத்தியில் பெண்களின் மனதில் புதைந்திருக்கும் உணர்வுகளை வெளிப்படையாகப் பேசி, சமூகவலைதளங்களில் பலரையும் அது குறித்து விவாதிக்க வைத்த தொடர் எதிர்நீச்சல்'. அந்தத் தொடருக்கு சிறந்த தொடர்' விருதை வழங்கி கெளரவித்தது விகடன். இந்த விருதை கோலங்கள்' மூலம் மக்கள்மனதில் இடம் பிடித்த நடிகர் அஜய் கபூர் வழங்க, இயக்குநர் திருச்செல்வம் பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை மட்டும் விஜே பிரியங்காவும், விஜே அர்ச்சனாவும் சேர்ந்து தொகுத்து வழங்கினார்கள். அது தொடர்பாக மேடையில் பேசிய இயக்குநர் திருச்செல்வம், "விருது வாங்கும் நாங்கள் சன் டிவி, இந்த விருதுக்கான நிகழ்வைத் தொகுத்து வழங்கும் அர்ச்சனா ஜீ தமிழ், 'பெஸ்ட் ஆங்கர்' விருது பெற்றிருக்கும் பிரியங்கா விஜய் டிவி... இப்படி ஒரு சங்கமிப்பை சாத்தியப்படுத்திய விகடனுக்கு நன்றி" என்று கூற அரங்கத்தில் ஆரவாரம்! 'இப்படியொரு மேடை அமைவது அரிது' என்று பலரும் அதுகுறித்துப் பாராட்டினார்கள்.

அதே தொடரில், 'இந்தா மா ஏய்...' என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு டெலிவிஷன் டாக் ஆஃப் தி இயர்' விருதை இயக்குநர் வசந்த் வழங்க, மாரிமுத்துவின் குடும்பத்தினர் அந்த விருதை நெகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்கள்.
விஜய் டிவி சேனல் ஹெட் ஆர். பாலச்சந்திரன், ஜீ தமிழ் பிசினஸ் ஹெட் ரமணகிரிவாசன் மற்றும் புதிய தலைமுறை செய்தி இயக்குநர் சீனிவாசன் மூவரும் சேர்ந்து புதிய தலைமுறை சேனலின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயனுக்கு பெஸ்ட் நியூஸ் ஆங்கர்' விருதினை வழங்கினார்கள். ''எனது 15 ஆண்டு கால அனுபவத்தில் இது என் முதல் விருது மேடை'' என நெகிழ்ந்து பேசினார் கார்த்திகேயன்.
லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களின் பங்களிப்புடன், நம் இல்லம் தேடி வரும் கலைஞர்களுக்கு கிரீடம் சூட்டிய விழா நிகழ்ச்சிகளைக் காணத் தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications