மகன் இறப்புக்கு பிறகு பாரதிராஜா மலேசியா போயிட்டாரு! அங்க அவருடைய நிலைமை! கண் கலங்க பேசிய சகோதரர்
சென்னை: தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜா. 16 வயதினிலே தொடங்கி கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா வரை கிராமத்து மண்ணின் வாசனையைத் திரையில் கொண்டு வந்தவர். அவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட்தான். ஆனால், ஒரு மகனை இழந்த தந்தையின் துயரம், அவர் தந்த வெற்றிப் படங்களைவிட ஆழமானது. கடந்த ஏப்ரல் மாதம், அவரது அருந்தவப்புதல்வன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணம், யாராலும் தாங்க முடியாத ஒரு புத்திர சோகமாக அவரை வாட்டி வருகிறது. ஐந்து மாதங்களுக்கு மேல் ஆன போதும், அந்தத் துயரத்தில் இருந்து அவர் மீளவில்லை என்று அவரது சகோதரர் ஜெயராஜ் கண்ணீர் மல்க ஒரு பேட்டி அளித்துள்ளார்.

தாங்க முடியாத துயரம்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், தாஜ் மஹால் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் என பல படங்களில் நடித்தவர். தந்தையைப் போலவே ஒரு இயக்குநராக வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்தது. இறுதியாக, விருமன் படத்தில் நடித்திருந்த மனோஜ், கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இந்தச் செய்தி தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
அப்பா பாரதிராஜாவின் மீளாத சோகம்
மனோஜின் இறப்பை பாரதிராஜாவால் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் அந்த இறப்பிலிருந்து அவர் மீளவில்லை. இதை மறப்பதற்காக, என்னுடைய மகள் அவரை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்பட்டு கொஞ்ச நாள் அங்கே இருந்துவிட்டு வந்தார். மலேசியா சென்றபோதும் அவருக்கு மனோஜின் நினைப்பாகத்தான் இருந்தது என ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பெயர் இருக்கு, புகழ் இருக்கு, பணம் இருக்கு... ஆனால், மகன் இல்லையே! என்ற வருத்தம் அவரை வாட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வேதனை அவர் சாகும் வரையில் இருக்கும். மகன் இறந்ததிலிருந்து, அவர் எப்பொழுதுமே மனோஜின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு, ஏதோ யோசித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று எதுவும் தெரியவில்லை. ஞாபக சக்தியே இல்லை.
என் மகன் இன்னும் இறக்கவில்லை என்று நினைத்துக்கொண்டுதான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். எங்கே பார்த்தாலும் அவன் நிற்பது போலவும், அவனுடன் நான் பேசிக்கொண்டே இருப்பது போலவும் என் மனம் நினைக்கிறது என்று ஜெயராஜ் உருக்கமாகப் பேசியுள்ளார்.
நிறைவேறாத ஆசை
பாரதிராஜாவுக்கு இன்னும் ஒரு ஆசை இருப்பதாக அவருடைய சகோதரர் கூறியுள்ளார். டேய், அடுத்து ஒரு படத்தை எடுக்கிறேன். உன்னை நடிக்க வைக்கிறேன். இதுவரைக்கும் உன்னை நடிக்க வைக்கலன்னு என்று பாரதிராஜா வருத்தப்பட்டாராம். 15 வருஷத்துக்கு முன்னாடி, ஜெயராஜ் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்தாராம். நீயும் சம்பாதிச்சிருப்பே, உனக்கும் ஒரு பேர் கிடைச்சிருக்கும் என்று அவர் தன்னையே நொந்துகொண்டார். ஒரு தந்தையின் நிறைவேறாத ஆசையும், தன் மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த முடியவில்லையே என்ற வருத்தமும், அந்தச் சோகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
குடும்பத்தின் கூட்டு துயரம்
பாரதிராஜா மட்டும் இல்லை, மனைவி, மகன் மனோஜின் மனைவி வந்தனா மற்றும் குழந்தைகள் என அனைவருமே மனோஜின் இறப்பை நினைத்து இன்னும் துயரத்தில் இருக்கிறார்கள். என் மருமகள் வந்தனாவின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை, எப்பொழுதும் ஏதோ ஒரு சோகத்திலேயே அவள் இருக்கிறாள். மருமகளை பார்க்கும்போதெல்லாம் மனது கஷ்டமாக இருக்கிறது என்று ஜெயராஜ் கண்ணீர்மல்க கூறினார்.
யாருமே நினைத்துப் பார்க்க முடியாத திடீர் இழப்பால் அவர்கள் அனைவரும் உடைந்து போய் இருக்கிறார்கள். இறைவன் அருளால் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மகனை இழந்த ஒரு தந்தையின் வேதனையை யாராலும் அளவிட முடியாது. அந்தத் துயரத்திலிருந்து பாரதிராஜா சீக்கிரம் மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்.












Click it and Unblock the Notifications