10 நாளைக்கு முன்னாடியும் போன் செய்து இப்படி கேக்குறாங்க.. என்னை Ban செய்ய காரணம் இதுதான்! சின்மயி விளக்கம்
சென்னை: பாடகி சின்மயி "தக் லைஃப்" திரைப்படத்தில் இடம் பெற்ற "முத்தமழை" பாடலை இசை வெளியீட்டு விழாவில் பாடி இருந்தார். இந்த பாடல் ட்ரெண்டானதை தொடர்ந்து, சின்மயி பாடுவதற்கு சில வருடங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்ட சம்பவம் குறித்த விவாதம் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தான் எதற்காக தனக்கு பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது என்று பேட்டி ஒன்றில் சின்மயி பேசியிருக்கிறார்.
இன்று கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய பாடல் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சின்மயியின் பழைய கதையை பற்றியும் இப்போது பேசப்பட்டு வருகிறது. சின்மயி தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடி இருக்கிறார். அவருடைய பாடல்களுக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கிறது.

சின்மயி பேட்டி
ஆனாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்மயி பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு பாடகி சின்மயின் பாடல் எந்த திரைப்படத்திலும் இடம் பெறவில்லை. இதனால் சின்மயி பாடுவதற்கு எதற்காக தடை விதிக்கப்பட்டது என்ற கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சின்மயி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பழிவாங்கும் நோக்கம்
சின்மயி பேசுகையில், நான் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேலாக டப்பிங் பேசி இருக்கிறேன். அதற்காக டப்பிங் யூனியனுக்கும் நான் பணம் செலுத்தி இருக்கிறேன். ஆனாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் சொன்ன பாலியல் குற்றச்சாட்டு காரணமாக என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக தான் இந்த தடை உத்தரவு வந்தது என்று நான் சொல்லுவேன். இப்போ கூட பத்து நாட்களுக்கு முன்பு சிலர் என்னிடம் பேசினாங்க. நீங்க மன்னிப்பு கேட்டு ஒரு லெட்டர் கொடுத்துவிட்டு மீண்டும் சங்கத்தில் சேர்ந்துக்கோங்க என்று சொன்னாங்க. நான் முடியாது என்று சொல்லிட்டேன்.
மீண்டும் சர்ச்சை
அந்த சம்பவம் நடந்த சமயத்திலும் இதே போல பேசினார்கள். அப்போ நான் மன்னிப்பு கேட்டால் தப்பு செய்தவர்கள் நியாயவாதியாகி விடுவார்கள். நான் தப்பு செய்தவளாக மாறிவிடுவேன், அதனால் முடியாது என்று சொல்லியிருந்தேன். அதே முடிவில்தான் இப்போதும் இருக்கிறேன். இப்போது மக்கள் எனக்காக கேள்வி கேட்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ராதாரவிக்கு என் மீது கோபம்.
ராதாரவி பற்றி சின்மயி பேட்டி
நான் ராதாரவியை எதிர்த்து பேசியது மட்டுமல்லாமல் அவர் மீது இரண்டு பேர் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள் அது குறித்து அவர்கள் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டிருந்தார்கள் அந்த பதிவை நான் ரீ ஷேர் செய்திருந்தேன். அதனால் அவருக்கு என் மீது கோபம். நான் அந்த போஸ்டை ஷேர் செய்யும் போது என்னை தடை செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் உண்மையை மறைக்க முடியாது அதற்காகத்தான் நான் அவர்களுக்கு ஆதரவாக இருந்தேன்.
டப்பிங் யூனியன் ரூல்ஸ்
டப்பிங் யூனியனில் இருப்பவர்கள் அவர்களாகவே பல ரூல்ஸ் போட்டு இருக்கிறார்கள். அதற்கு உடன்படாமல் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்து விடுவார்கள். டப்பிங் பேசுபவர்களுக்கு சம்பளத்திலிருந்து 10% க்கு மேலே டப்பிங் யூனியன் பணம் வாங்குகிறது. அந்த பணத்தை வைத்து பல விஷயங்கள் செய்யலாம். ஆனால் அந்த பணம் எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது என சின்மயி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications