சிவகார்த்திகேயனும் வந்துட்டாரு.. "50 ஆண்டுகள், ஒரே சிம்மாசனம்".. ரஜினிகாந்தின் கூலி! சம்பவம் இருக்கு
சென்னை: 50 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாளை ஆகஸ்டு 14ம் தேதி கூலி படம் வெளியாகவுள்ளது.. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் 35 வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுடன் கிங் நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நடித்துள்ளனர். அனிருத் இசை மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.. அதேசமயம் இந்த படம் குறித்து பல்வேறு பிரபலங்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
1000 கோடி அள்ளுமா
50 ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.. இந்நிலையில் தற்போது வெளியாக உள்ள கூலி படம், தமிழ்நாட்டில் மட்டுமே 120 கோடி, வெளிநாடுகளில் 75 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 45 கோடி, கர்நாடகாவில் 20 கோடி, கேரளாவில் 15 கோடி, வட இந்தியாவில் 50 கோடிக்கு வியாபாரம் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..

325 கோடியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல், 625 கோடியை கடந்துவிட்டால், படம் லாபம்தான் என்கிறார்கள். அதுமட்டுமல்ல 1000 கோடி வசூலை அள்ளும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது
நன்றியுடன் இருப்பேன் - மறக்க மாட்டேன்
இந்நிலையில் கூலி படம் எப்போதும் என் பயணத்தில் ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் டைரக்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளதாவது:
கூலி படம் எப்போதும் என்னுடைய சினிமா பயணத்தில் ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். இந்த படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம் ரசிகர்கள் தலைவர் மீது வைத்த அன்பே.
இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். இந்தப் படம் மற்றும் படம் தவிர்த்து நாம் பகிர்ந்து கொண்ட உரையாடல்களை எப்போதும் மறக்க மாட்டேன். இவை நான் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றி மறக்க முடியாத தருணங்கள். 50 வருடங்களாக எங்களை தொடர்ந்து ஊக்குவித்து, உங்களை நேசிக்கவும், உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களுடன் வளரவும் செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று லோகேஷ் கனகராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நண்பர் ரஜினிகாந்த்
அதேபோல சினிமா துறையில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்திருப்பதற்கும், கூலி படத்திற்கும் சேர்த்து நடிகர் ரஜினிகாந்திற்கு, நண்பர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் தள பதிவில், "சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், எனது அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு 'கூலி' திரைப்படம் உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவில், "கலை உலகில், தனக்கென ஒரு தனி இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த வரலாற்றுத் தருணத்தில், அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாஸ் என்டர்டெயினர்
நாளை வெளியாகும் அவரது 'கூலி' திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் ஒரு 'மாஸ் என்டர்டெயினர்' ஆக, 'கூலி' திரைப்படம், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
கூலி திரைப்படம், மாபெரும் வெற்றிபெற, ரஜினிகாந்த் சார், சன் பிக்சர்ஸ், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர் கான் சார், சகோதரர் அனிருத், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும், என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தலைவா.. உங்கள் பாதையில் சிவகார்த்திகேயன்
அதேபோல நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பதிவில், "தலைவா...உங்களை பார்த்து தான் வளர்த்தேன், உங்களை மிமிக் செய்தேன், உங்கள் பாதையில் பயணம் செய்தேன். நீங்கள் இருக்கும் அதே துறையில் தற்போது நானும் ஒரு நடிகராக இருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என சொல்லி, ரஜினி ஐம்பது வருடத்தை கடந்ததற்கும் கூலி படத்திற்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகள்.. ஒரே சிம்மாசனம்
அதேபோல கூலி படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால சினிமா பயணத்திற்கும், நாளை வெளியாகவுள்ள கூலி படத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "50 ஆண்டுகள்... ஒரே சிம்மாசனம்... ஒரே மனிதர்...நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகும் 'கூலி' யுடன், தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பொன் விழாவை நாம் அனைவரும் கொண்டாடுவோம். சர்வ வல்லமை கொண்டவர்களின் ஆசீர்வாதங்களுடனும் உங்கள் அனைவரின் அன்புடனும்" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications