கனவு நனவான சில நாளில் உயிரிழந்த 27 வயது இயக்குனர்.. பல வருட காதல் கை கூடிய ஒரு மாதத்தில் நடந்த துயரம்
சென்னை: சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இளைஞர், கடைசியாக தனது பெயரை இயக்குநராகப் பார்க்கும் வாய்ப்பை பெற்றார். அவருடைய முதல் வெப் சீரிஸும் ஓடிடியில் வெளியாகிவிட்டது. இனி தனது பயணத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை பெறலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், அந்த இளம் இயக்குநரின் வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்திருக்கிறது. மலையாள திரையுலகை சேர்ந்த பெல்ராஜ் கலாரிக்கல் மறைவுதான் இப்போது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெறும் 27 வயதே ஆன பெல்ராஜ், 'காப்பி ஸ்குவாட்' (Kaapi Squad) என்ற வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜியோ ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 15-ம் தேதி இந்த சீரிஸ் வெளியாகியிருந்தது. தனது முதல் இயக்குநர் முயற்சி ரசிகர்களிடம் சென்றடைந்த மகிழ்ச்சியில் இருந்த அவரை, அக்டோபர் 17-ம் தேதி மரணம் தழுவியது. அதுவும் திருமணமாகி ஒரு மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில் அவர் உயிரிழந்திருப்பது குடும்பத்தினரையும் நண்பர்களையும் நிலைகுலைய வைத்திருக்கிறது.

ஹோட்டல் அறையில் உயிரிழந்த பெல்ராஜ்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மணிமலா பகுதியை சேர்ந்தவர் பெல்ராஜ் கலாரிக்கல். திரையுலகில் 'செகு' என்றும் அழைக்கப்பட்டார். கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அவர் தங்கியிருந்தபோது உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் பணியாற்றிய சக ஊழியர் ஸ்ரீகாந்தும் அங்கு தங்கியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 17-ம் தேதி காலையில் அலாரம் தொடர்ந்து அடித்தும் பெல்ராஜ் எழுந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை எழுப்ப முயன்ற நண்பர்கள், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரணத்திற்கு காரணம்
முதற்கட்ட தகவல்களில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பெல்ராஜுக்கு சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் இருந்ததாகவும், இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வந்தாராம். நேரடியாக இயக்குநர் வாய்ப்பு கிடைக்காத நிலையில், பல படங்களில் உதவி இயக்குநராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்த நிழல், மதுரம், டாகினி உள்ளிட்ட படங்களில் அவர் உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் குழுவில் பணியாற்றியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் கிடைத்த அனுபவத்தை தனது இயக்குநர் கனவுக்கான பயிற்சியாகவே எடுத்துக்கொண்டார். இத்தனை ஆண்டுகள் உழைப்புக்கு பிறகு, அவர் இயக்கிய முதல் வெப் சீரிஸான 'காப்பி ஸ்குவாட்' ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் வாய்ப்பு கிடைத்தது. அக்டோபர் 15-ம் தேதி முதல் நான்கு எபிசோடுகள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டன. சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மொத்தம் 36 எபிசோடுகளுக்கான படப்பிடிப்பும் முடிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தனது முதல் படைப்பின் வரவேற்பை பார்க்கும் வாய்ப்பு கூட அவருக்கு நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை.
6 ஆண்டுகள் காதலித்து திருமணம்
பெல்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது மகிழ்ச்சியான காலகட்டமாக இருந்திருக்கிறது. ஆதிரா பிந்து சாபு என்பவரை அவர் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் முன்னிலையில் திருமண வாழ்க்கையை தொடங்கியிருந்தனர். ஆதிரா சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்த காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த தம்பதிக்கு, பெல்ராஜின் திடீர் மறைவு மிகப்பெரிய இழப்பாக மாறிவிட்டது. திருமணமான சில வாரங்களிலேயே கணவரை இழந்த ஆதிராவின் நிலை பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
