நடிகர் மோகன் முகமெல்லாம் மகிழ்ச்சி.. மைக்கை பிடித்து பேச மலைத்த ஜனம்.. நெஞ்சத்தை கிள்ளிய மகேந்திரன்
சென்னை: பாலுமகேந்திரா சார் மூலமாக நான் அறிமுகமாகி, மகேந்திரன், பாபு சார், சிங்கீதம் சீனிவாச ராவ் என மிகப்பெரிய ஜாம்பவான்களிடம் பணியாற்றியிருக்கிறேன். இதற்கு இறைவனுக்கு நான் நன்றியை சொல்கிறன்.. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான படம் ஓடும். ஆனால், மகேந்திரன் படங்களின் தரம் மட்டும், 90கள் வரை குறையவே இல்லை என்று டைரக்டர் மகேந்திரனுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் நடிகர் மோகன்.
தமிழ் சினிமாவின் கலைப்பிதாமகன் எனக் கொண்டாடப்பட்ட இயக்குநர் மகேந்திரன் நினைவாக, திரைத்துறை மீது காதல் கொண்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில், இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

மகேந்திரன் நினைவுநாள்
கிராமத்தில் இருந்து வந்து, சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த இயக்குநர் மகேந்திரன் நினைவாக, இந்த அகடாமி சார்பில், தமிழகத்தில் சினிமா ஆசை கொண்ட மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், மிகக்குறைந்த கட்டணத்தில், மாணவர்களுக்கு திரைத்துறை பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அதேபோல, திரைத்துறை தொடர்பான கருத்தரங்கம், நூலகம், பயிற்சிப்பட்டறை, விவாத அரங்கம் முதலான அனைத்தும் இந்த பட்டறையில் நடத்தப்படவுள்ளது. இயக்குநர் யார் கண்ணன் அவர்களின் கனவுப்பட்டறையாக துவக்கப்பட்டுள்ள இந்த அகாடமியின் துவக்க விழா தற்போது நடந்துள்ளது.. இதில், திரைத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.. அப்போது நடிகர் மோகன், மேடையில் மகேந்திரன் பற்றி சொன்னதாவது:
நெஞ்சத்தை கிள்ளியவர்
"எல்லாருடைய நெஞ்சத்தையும் கிள்ளியவர் டைரக்டர் மகேந்திரன் சார். பிரம்மாதமான இயக்குனர்.. எழுத்து ஆளுமை மிக்கவர்.. அவர் ஏன் எல்லாருக்கும் ஸ்பெஷல் என்றால், எந்த சப்ஜெக்ட்டாக இருந்தாலும் அதில் ஜொலிக்கக்கூடியவர். பொதுவாக டைரக்டர்கள், எழுத்து திறமை உள்ளிட்டவற்றில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.. ஆனால், மகேந்திரன் சார் அப்படியில்லை. மோகன் முப்பது வருஷம், தங்கப்பதக்கம், பூட்டாத பூட்டுக்கள், ஜானி என அவரது எந்த படமாக இருந்தாலும் சரி, கருப்பு வெள்ளை, கலர் படமாக இருந்தாலும் சரி, எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் சரி, அதற்கு ஜீவன் தந்துவிடுவார். அதனால்தான், உதிரிப்பூக்கள் என்ற மிகப்பெரிய காவியத்தை அவரால் தரமுடிந்தது. அப்படியொரு படம் மீண்டும் வருவதற்கு பல காலம் பிடிக்கும்..
பெருமையும், கர்வமும்
உதிரிப்பூக்கள் விஜயன் சாரின் கேரக்டர், அஸ்வினியின் கேரக்டர், பூட்டாத பூட்டக்களில் ஜெயந்தின் கேரக்டர் எல்லாமே மாறுபட்டவை.. ரஜினி சாரையே ஜானியில் வித்தியாசமாக காட்டியிருப்பார்.. அதிலே அவரது திறமை தெரியும்.. ரொம்ப யோசனை செய்து, அதை சிம்பிளாக திரைக்கதையில் எழுதி, அதை அனைவர் நெஞ்சத்தையும் தொடுவது போல காட்சியாக எடுக்கக்கூடியவர் மகேந்திரன். மகேந்திரன் சாரை பற்றி பேசுவதே எங்களுக்கெல்லாம் பெருமையாக மட்டுமல்ல, கர்வமாகவும் உள்ளது..
ஜாம்பவான்கள்
பாலுமகேந்திரா சார் மூலமாக நான் அறிமுகமாகி, மகேந்திரன், பாபு சார், சிங்கீதம் சீனிவாச ராவ் என மிகப்பெரிய ஜாம்பவான்களிடம் பணியாற்றியிருக்கிறேன். இதற்கு இறைவனுக்கு நான் நன்றியை சொல்கிறேன்.. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான படம் ஓடும். ஆனால், பாலுமகேந்திரா படங்களின் தரம் மட்டும், 90கள் வரை குறையவே இல்லை..
தங்கப்பதக்கம் ஸ்டைல் ஒரு மாதிரியாகவும், உதிரிப்பூக்கள் ஸ்டைல் வேறுவிதமாகவும் இருக்கும். கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வந்த படங்களாக இருந்தாலும், அவைகளுக்குள் வித்தியாசங்கள் தாறுமாறாக இருக்கும்.. அப்படியொரு கதாசிரியர்தான் மகேந்திரன்" என்று மோகன் புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications