Rajakumaran: கமல், மகேந்திரனை பற்றி நான் அப்படி சொல்லல! இதைத்தான் சொன்னேன்! இயக்குனர் ராஜகுமாரன் விளக்கம்
சென்னை: நடிகை தேவயானியின் கணவர் மற்றும் இயக்குநருமான ராஜகுமாரன் சமீபத்தில் கொடுத்த பேட்டிகள் திரைத்துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் பற்றி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. இதனால், அவர் மீண்டும் தனது பேச்சுக்கு புதியதொரு விளக்கம் அளித்துள்ளார்.
'நீ வருவாய் என', 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். திருமணத்துக்கு பின் தனது மனைவி தேவயானியை வைத்து 'காதலுடன்', பின்பு திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கினார். 'திருமதி தமிழில்' அவரே நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த இரண்டு படங்களிலும் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.

நடிப்பு பயணம்
இயக்கத்தை தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தியவர், சந்தானம் நாயகனாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்தார். அதன்பின், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய 'கடுகு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டையும் பெற்றார்.
சமீபகாலமாக சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும், ஊடகங்களில் பேட்டி கொடுப்பதன் மூலம் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கிறார் ராஜகுமாரன். சமீபத்தில் அவர் வெளியிட்ட சில கருத்துகள் கடும் விவாதத்தை உருவாக்கின:
"கமல்ஹாசன் ஒரு பெரிய நடிகர் இல்லை. அவரது ஆறு அல்லது ஏழு படங்கள்தான் நன்றாக இருக்கும்" என்று கூறியிருந்தார். அதேபோல அதிகப் படங்களை இயக்கிய இராமநாராயணனை விட்டுவிட்டு, 'உதிரிப்பூக்கள்' போன்ற சிலவே படங்களை இயக்கிய மகேந்திரனைப் பெருமையாகப் பேசுகிறார்கள். 'உதிரிப்பூக்கள்' படத்தில் கதையென ஒன்றுமில்லை" என்று பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு பின்பு, சமூக வலைதளங்களில் பலரும் ராஜகுமாரனை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். "இவர் எடுத்ததெல்லாம் மோசமான படம், இவர் கமலையும், மகேந்திரனையும் பேசுகிறாரா?" என்று பலரும் அவரை கிண்டல் செய்துப் பதிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் திருமதி தமிழ் படத்தில் தேவயானியோடு இவர் பேசும் காட்சிகளும் இணையத்தில் ரோடு செய்யப்பட்டு வருகிறது.
விளக்கமளித்த ராஜகுமாரன்
விமர்சனங்கள் அதிகரித்ததால், தற்போது தொலைக்காட்சி ஒன்றில் விளக்கமளித்த ராஜகுமாரன், தான் பேசியதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று 'அந்தர் பல்டி' அடித்துள்ளார். அவரது விளக்கம் பின்வருமாறு: "கமல்ஹாசனை சரியாக பயன்படுத்தியது சில இயக்குநர்கள் மட்டுமே - அதாவது 'பதினாறு வயதினிலே', 'சலங்கை ஒலி', 'நாயகன்' போல சில படங்களை மட்டுமே சொல்லலாம்.
மற்ற படங்களெல்லாம் கமல் தனக்காக உருவாக்கிக் கொண்டது. பாரதிராஜா, கே.விஸ்வநாத் போல வேறு இயக்குநர்கள் அவரை பயன்படுத்தவில்லை என்றுதான் நான் சொன்னேன்" என்றார். "அதேபோல், இயக்குனர் மகேந்திரன் சில படங்கள் இயக்கியிருந்தாலும், அந்தப் படங்களை இயக்கிய விதத்தில் மகேந்திரன் தனிப்பட்டு நிற்கிறார் என்று தான் நான் சொன்னேன்" என்றும், சரியாகப் புரிந்துகொள்ளாமல் தன்னைத் திட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இயக்குநர் ராஜகுமாரன் பேசிய விதம் மற்றும் அளித்த விளக்கத்தால், சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தச் சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications