அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் எம்ஜிஆர் நடிக்க புக்காகி நடிக்காதது ஏன்? பேசப்படாமல் போன "மனசாட்சி"!
சென்னை: அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் எம்ஜிஆர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் நடிக்க மறுத்துவிட்டதால் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடித்தார். இந்த படத்தை இயக்கியவர் ரஜினியின் நெருங்கிய நண்பர் நட்ராஜ்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மனசாட்சி நடராஜ்... பாலச்சந்தர் மூன்று முடிச்சு படத்தில் ரஜினியை மட்டும் பாப்புலராக்கவில்லை. ரஜினியின் மனசாட்சியையும் பாப்புலராக்கினார்.

திரைப்படக் கல்லூரியில் படிக்கும் ரஜினியோடு அவர் கொண்ட நட்பு நீண்ட காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று முடிச்சு படத்தில் மனசாட்சியான அவரை அப்போது பத்திரிக்கைகளில் பாராட்டி எழுதினார்கள். நிறைய படங்களில் வில்லனாக நடித்தார் நடராஜ்..
ரஜினியோடு மட்டும் நான் மகான் அல்ல, பைரவி, ராணுவவீரன் போன்ற படங்களில் நடித்தார். காலப்போக்கில் அவர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் காமிராவுக்கு பின்னால் செயல்பட ஆரம்பித்தார். அவர் தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு அசிஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார்.
நல்ல நாள், அபூர்வ சகோதரிகள் போன்ற படங்களில் டைரக்டர் ஆர்.தியாகராஜனுக்கு அசோசியேட்டாக பணிபுரிந்தார்.. அது தான் அவர் வாழ்க்கையில் நடிகரிலிருந்து இயக்குனராக உயர்த்தியது... Lena canada அப்படிங்கற ஒரு எழுத்தாளர் 'To Elvis, with love' அப்படிங்கற புக் எழுதி இருந்தாங்க. அந்த புக் ஒரு உண்மைக் கதையை பேஸ் பண்ணி எழுதப்பட்டது.
ஸ்வீடன்ல Karenன்னு ஒரு சிறுமி Cerebral palsi நோய் பாதிக்கப்பட்டு வீல் சேர்ல மிச்ச நாட்களை கழிக்கிறாள். பெற்றோரால் கைவிடப்பட்ட அவளை பாத்துக்க வர்ற நர்ஸ் அவள் மனதை அறிய முற்படும் போது அவள் எல்விஸோட டைஹார்ட் ஃபேன்னு தெரியுது. அவள் சந்தோஷத்துக்காக எல்விசுக்கு கடிதம் எழுத வைக்கிறாள். பல முறை முயற்சித்தும் எல்விஸ் கடிதம் வரவில்லை.
பின் நர்ஸ் லெனா எல்விசோட தெரிந்த பெண்மணியை வைத்து எல்விஸ் பதில் கடிதம் எழுத ஏற்பாடு செய்கிறாள். நல்ல சில சம்பவங்களுக்கு பிறகு Karen ஒரு நாள் புன்சிரிப்போடு செத்துப்போறா....அவள் கையில் எல்விசோட லெட்டர்... இந்த கதை 1980ல் Touch of love என்ற பெயரில் படமாக வந்தது.
தூயவன்னு ஒரு சினிமாக் கதாசிரியர் இருந்தார். தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் கதை எழுதுபவர். 'அழகன்' சீரியல் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் தமிழ்மணி...அப்போ ஏதோ பத்திரிக்கைல வேலை செய்தார். அப்போ 'மலையூர் மம்பட்டியான்' எடுத்து அவர் வெற்றி பெற்றிருந்தார். இவங்க ரெண்டு பேரும் டெல்லில ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு போனாங்க. வழக்கமா கதாசிரியர்கள் பார்ப்பது போல இவங்களும் ஒரு ஆங்கிலப்பட ஷோவுக்கு போயிருக்காங்க. படத்தோட பெயர் Love to touch.
இந்தப்படத்தை பார்த்த இருவரும் நெகிழ்ந்து இந்த கதையை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி திரைக்கதை எழுதுறாங்க. ஸ்கிரிப்ட் ரெடியானதும் எம்.ஜி.ஆரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்குது. நீங்க கடைசி ஒரு காட்சியில் வந்தா போதும்னு அவங்க சொல்ல...கதை தலைவருக்கு பிடிக்க ஓ.கே சொல்கிறார்.
படத்தின் பெயர் கேட்க 'அன்புள்ள எம்.ஜி.ஆர்'னு டக்குன்னு சொல்ல தலைவர் கவுந்துடறாரு. அப்போ எம்.ஜி.ஆரோட பழைய படங்களே வசூலை குவிக்கும் நேரம். அதனால இவங்களும் தெம்பா இருந்தாங்க. படம் நடிக்க ஒப்புதல் தந்து அரங்க நாயகத்தை பார்க்க சொல்கிறார் தலைவர். இந்த நிலையில் படத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியை பெற்று எம்ஜிஆர் முதல்வராகிவிடுகிறார்.
இதனால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போகிறது (முதல்வராகியும் சினிமாவில் நடித்தால் ஓட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்பதாலும் எம்ஜிஆர் அந்த படத்தில் நடிக்காமல் தவிர்த்தார் என தகவல்கள் சொல்கின்றன). அப்போ எதேச்சையா ஒரு நாள் 'மனசாட்சி' நடராஜிடம் 'ஒரு கதை இருக்கு. ரஜினி கால்ஷீட் முடியுமா'ன்னு கேட்க தன் நண்பருக்காக ரஜினி கதை கேட்கிறார்.தன் 'மனசாட்சி'யாச்சே ரஜினிக்கு நட்ராஜ். கதை பிடித்துப்போக வெறும் பதினஞ்சாயிரம் முதலோட 1983 மார்ச் ல பூஜை. பேப்பரில் வருகிறது விளம்பரம்.
'அன்புள்ள ரஜினிகாந்த்'. படத்தில் வரும் ஒரு காட்சியில் நமது வீட்டிலேயே எடுக்கலாம்னு லதா ரஜினி சொல்ல ரஜினி வீட்டை நீங்க இந்தப் படத்துல பார்த்திருக்கலாம். ஒரு ஓரங்க நாடகத்துக்கு ரஜினியே பேசி பாக்யராஜை நடிக்க வைக்கிறாரு. படத்துல ரொம்ப சிறப்பான காட்சி. படம் வெளியாகி பெரிய வெற்றி. தமிழ்மணியும் தூயவனும் தனித்தனியா பிரிஞ்சு படம் எடுக்கிறாங்க. தூயவன் இப்போ இல்லை. தமிழ்மணி இப்போதும் இருக்கிறார்.
பெண்கள் ரொம்ப ரசிச்ச படம் இது. மீனாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம். இளையராஜாவோட 'பூந்தேனே தேனே வா', 'முத்துமணி சுடரே' பாட்டுக்கள் ராஜாவோட எக்கால ஹிட்கள்..'கடவுள் உள்ளமே' பாட்டு லதா ரஜினி பாடினது...
படத்துல ரஜினி தன்னோட ஸ்டைலையெல்லாம் பண்ணிக் காட்டுவார். ஒரே ஒரு வாரம் மட்டும் கால்ஷீட் தந்து ரஜினி நடிச்ச படம். அம்பிகா, மணிமாலா, ராஜ்குமார் மெயின் கேரக்டர்கள். மொத்த பட்ஜெட் 23 லட்சம் மட்டுமே....அப்படி நடிக்க வந்த நட்ராஜ் இயக்குனராகிறார்.
இதைத் தொடர்ந்து தேவர் பிலிம்ஸ் அவருக்கு அடுத்த படம் கொடுக்குது..'செல்வி'..சுரேஷ், ரேவதி நடித்து குறைந்த பட்ஜெட்டில் எடுத்த செல்வி படம் வெற்றி பெற நடராஜ் இயக்குனராக பேசப்படறார். அதே வருடம் இரண்டு மனம் படம். தென்றலே என்னை தொடு ஹிட்டானதும் ஜெயஸ்ரீ நடிச்ச இரண்டாவது படம்..ஆனா ஹிட்டாகலை...
இந்த காலகட்டத்தில் கவுண்டமணி பீக் நடிகராகி விடுகிறார். கவுண்டமணி வந்தா படம் ஹிட்டு... அப்படித்தான் கவுண்டமணி கதா நாயகனாகிடுறாரு...அவர் நேரத்துக்கு அவர் நடிச்ச முதல் நாயகப் படம் ஹிட்டாகுது.. அந்தப் படத்தை எடுத்ததும் தேவர் பிலிம்ஸ் தான்...பிறந்தேன் வளர்ந்தேன் என்கிற அப்படம் ஹிட்டாக கவுண்டமணி நடராஜுக்கு கால்ஷீட் கொடுக்க நடராஜ் இயக்கிய படம் தலையாட்டி பொம்மைகள்.
தூயவனும், பஞ்சுஅருணாசலமும் தயாரிக்க கவுண்டமணி, இளவரசி, கல்பனா நடிக்க தலையாட்டி பொம்மைகள் அவ்வளவாக ஓடவில்லை...மறுபடியும் தேவர் பிலிம்ஸ்... இம்முறை செல்லக்குட்டி என்கிறபடம்... அதுவும் அவரை கவிழ்க்க அதோடு இயக்குனர் பதவியிலிருந்து ஒதுங்கி ரஜினியோடு இருக்கத் தொடங்குகிறார். ராகவேந்திரா மண்டப பொறுப்பாக நடராஜ் இருந்தாரென கேள்வி..
ரஜினி ஒரு நாள் நண்பர்களை அழைத்து நான் நம் நண்பர்களுக்காக ஒரு படம் தயாரிக்கலாம் என நினைக்கிறேன். கதை என்னிடம் இருக்கிறது. நடராஜ் தான் இயக்குனர் என சொல்ல வேலைகள் தொடங்குகிறது. வள்ளி பிறக்கிறது. ரஜினியை கட்டாயப்படுத்தி ஒரு ரோலில் நடிக்க வைக்கிறார் நட்ராஜ். ரஜினியின் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு ரோல் தரப்படுகிறது.
பாரதிராஜா நடிக்க தேர்ந்தெடுத்திருந்த ப்ரியா ராமனை நடிக்க வைக்கிறார் நட்ராஜ். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாக. வள்ளி வெற்றி பெறுகிறது. இப்படத்தில் இவருக்கு அசோசியேட்டாக பணியாற்றியவர்கள் இயக்குனர் ஹரி..மற்றும் இயக்குனர் Manibharathi Kadhirvelu அவர்களும்...
இதற்குப்பின்னால் சின்னத்திரை ஆதிக்கம் தொடங்க நடராஜ் சின்னத்திரைகளில் நடிக்கத் தொடங்குகிறார்... காலம் எவ்வளவு கடுமையானது...? ஒரு மனிதனின் பலவகை முயற்சிகளில் போராடியும் அவருக்கான உண்மையான உழைப்புக்கேற்ற வெற்றி அவனுக்கு கிடைத்துவிடுவதில்லை..நடராஜ் என்கிற நடிகன் இயக்குனரை விட நம் மனதில் நிறைந்து நிற்கிறார்.
இயக்குனர் நடராஜ் ஏனோ வள்ளி, அன்புள்ள ரஜினிகாந்திற்கு அப்புறம் பேசப்படவில்லை... ஆனாலும் நடராஜ் அற்புத இயக்குனர். கிடைத்த வாய்ப்புகளை சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார். இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications