வாலிப வயதில் சைக்கிள் செயினை சுழற்றிய ரஜினி! சத்யநாராயணாவால் முடியாததை நடத்தி காட்டிய லதா !
சென்னை: ரஜினிகாந்த் வாலிப வயதில் ஒரு பெண்ணை கிண்டல் செய்துவிட்டு சைக்கிள் செயினை சுழற்றி ரவுடியை ஓட ஓட விரட்டினார். இவரை சத்யநாராயணாவால் கூட திருத்த முடியவில்லை. ஆனால் லதா ரஜினிதான் இந்த முரட்டுக் காளையை அடக்கினார் என சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரஜினி.... அவரை பிடிக்காத கூட்டம் நல்ல விஷயங்களை தவறான போக்கில் இங்கு அவரை விமர்சித்துக் கொண்டு தான் இருக்கும். குடிப்பது, சிகரெட் பிடிப்பது, மாமிசம் அதீதமாக சாப்பிடுவது என்பதைத் தாண்டி அவரை "அன்பாக சொல்லி திருத்துவது" என்கிற விஷயமும் ரஜினி சொன்னது தான். மனைவி சொன்னால் இங்கு யார் கேட்கிறார்கள். இப்போதைய ஜோடிகள் இருவருமே தனித்துவமாக நிற்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். குடிக்காதே என மனைவி சொன்னால் கூட தன் தனித்துவத்தின் மீது கேள்வி கேட்பதாக நினைக்கிறார்கள். மனைவி கூட அப்படித்தான்.

ரஜினி ஒரு காட்டாறு. நடிக்க வருவதற்கு முன்பே வாலிபப் பருவத்தில் அவர் யார் பேச்சையும் கேட்கமாட்டார். 9 வயதில் தாய் இறந்ததால் அவர் தன்னிஷ்டத்துக்கு வளர்ந்தவர். அண்ணன் சத்யநாராயணராவ் மீது மட்டும் பயம். லாரி ஷெட் ஒன்றில் மூட்டை தூக்குபவர்களுக்கு தூக்கி விட்டால் மூட்டைக்கு இவ்வளவு எனக் கொடுப்பார்கள். தினமும் ஆறு ரூபாய் சம்பாதித்து விடுவார். பின் குடி, கும்மாளம் தான். வழியில் போகும் பெண்களோடு கலாட்டா செய்வார். ஒரு அழகான பெண்ணை கிண்டல் செய்ய அவள் போய் அவளுடைய அண்ணன்களிடம் சொல்லி விட்டாள்.
அண்ணன்கள் நேரே ரஜினியை தேடி வீட்டுக்குப் போக அங்கு ரஜினி இல்லாததால் இரண்டாவது அண்ணனிடம் கணக்கை தீர்த்திடுவோம் எனச் சொல்ல ரஜினி (அன்று சிவாஜி ராவ்) கேட்டதும் சைக்கிள் செயின் எடுத்துக் கொண்டு நேரே அவர்கள் வீட்டுக்கே போய்விட்டார். அவர்கள் திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்க தூங்குபவர்களை அடிக்கக் கூடாது என எழுப்பி ஒரு ஒரு ஆளாக சைக்கிள் செயினால் விளாச அவர்கள் ஓடி இருக்கிறார்கள்.
அவர்கள் ஓடிப் போய் அந்த ஊர் தாதா நாராயணன் என்பவரிடம் சொல்ல நாராயணன் நேரே வந்து ரஜினியின் வீட்டுக்கு வர எதிரே ரஜினியின் சின்ன அண்ணனை நாராயணன் அடித்து விடுகிறான். சின்ன அண்ணன் முகத்தை தடவிக் கொண்டே வந்து "சிவாஜி...நாராயணன் என்னை அடிச்சிட்டான்டா"ன்னு சொல்ல ரஜினிக்கு முகம் சிவந்துடுச்சு. நாராயணன் பெங்களூர் மார்க்கெட் பகுதியில் பெரிய ரௌடி. ஊரே அவன் பெயரை கேட்டா நடுங்கும்.
அவன் மார்க்கெட்டுக்கு வெளியே சேர் போட்டு மாலை நேரங்களில் கூட்டமாக பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பது ரஜினிக்கு தெரியும். நேரே நான்கு கிளாஸ் ஏற்றிக் கொண்டு "டேய் நாராயணா....எங்கண்ணனையாடா அடிச்சே"ன்னு சைக்கிள் செயினை சுழற்ற நாராயணனின் சகாக்கள் ஓடி ஒளிந்து கொள்ள நாராயணன் ஓட ஆரம்பிச்சிட்டான். ரஜினி துரத்திக் கொண்டே ஓட பக்கத்துல இருந்த பெரிய குஜிலி மார்க்கெட்டுக்குள் புகுந்து நாராயணன் தப்பிச்சிடுறான்.
இப்படிப்பட்டவரை அண்ணன் சத்யநாராயணன் திருத்த நினைத்தும், கண்டித்தும், தண்டனை கொடுத்தும் அடக்க முடியாதவராக இருந்தவர் தான் சிவாஜி ராவ் என்கிற ரஜினி. சென்னைக்கு வந்து நடிகரானாலும் கூட அவருடைய அந்த முரட்டுத்தனம் அப்பப்போ தலை தூக்கும். அப்படித்தான் ஏர்போர்ட் க்ளாஸ் உடைத்தது, நிருபரை மிரட்டியதெல்லாம் நடந்தது. பூவிலங்குன்னு ஒரு படம். அதில் நாயகன் செம முரட்டுத்தனமானவன். நாயகி அவன் கையை கட்டி தலைக்கு வைத்திருக்கும் பூச்சரத்தை கைகளில் விலங்காக சுற்றி அவனை திருத்துவாள்.
பூவிலங்கு சுலபமாக அவிழ்க்கக் கூடியது. ஆனாலும் அவன் அவிழ்க்காதது அவள் இட்டதால் தான். ரஜினியின் சுபாவத்தை தன் பூவிலங்கால் அடக்கியவர் லதா ரஜினி. அது ஒரு பெரிய விஷயம். ரஜினியின் பேட்டியால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் மனைவி அன்பால் எந்த முரட்டுக் கணவனையும் திருத்த முடியும். அது அவளின் கடமையும் கூட. லதா ரஜினி நல்ல ஆசிரியை தான்.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications