தூறல் நின்னு போச்சு படத்தில் புரட்சி! பாக்யராஜ் செய்த சின்னஞ்சிறு காரியம்! சோபிக்காமல் போன சங்கிலி
சென்னை: நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், தனது தூறல் நின்னு போச்சு படத்தில் ஒரு புரட்சியையே செய்தார் என சொல்லும் அளவுக்கு அவரது கலைத் திறமை இருந்தது. 16 வயதினிலே பரட்டையை மறக்க முடியுமா என்ன? ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் மீது பாக்யராஜுக்கு வருத்தம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சில நேரம் ஒரு சினிமாவில் ஹீரோ இருப்பார். ஆனா நாலே காட்சிகள் வந்து எதிர்பாராமல் ஹீரோவையே அடித்து சாப்பிட்டு விடும் சில கேரக்டர்கள்... நான் வாழ வைப்பேன் மைக்கேல் டிசூஸா ரஜினி, தேவர் மகன் பெரியத்தேவர் சிவாஜி, முதல் மரியாதை மயில் வாகனம் சத்யராஜ், சங்கிலி ராஜாளி பிரபு, மௌனராகம் மனோகர் கார்த்திக் போன்றவையெல்லாம் அப்படித்தான் நாயக கதாபாத்திரத்தை விட கை தட்டல் பெற்றவை.

பாக்யராஜ் சார் அப்படி கவனித்தது பதினாறு வயதினிலே ரஜினிகாந்தைத் தான். திரைக்கதையில் அவரே ஆச்சர்யப்படும்படி அமைந்தது ரஜினியின் 'பரட்டை' கதாபாத்திரம். பரட்டை தான் ஒரு கதையின் வெற்றிக்கு ஹீரோ மட்டுமல்ல. இரண்டாம் நாயகனும்! சரியாக சொல்லப்பட்டால் வெல்வான் என்று பாக்யராஜுக்கு உணர்த்திய பாத்திரம்..
அதனாலேயே பாக்யராஜ் ஹீரோவாக நடித்தாலும் இரண்டாவது கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைப்பது அவரது ஸ்பெஷாலிட்டி. ஹீரோ டைரக்டர்கள் யாருமே செய்ய துணியாத விஷயம் பாக்யராஜ் செய்வது. செய்ததுவும்...
அப்படித்தான் அவரது 'ஒரு கை ஓசை' படத்தின் சங்கிலி. சங்கிலி என்கிற அந்த கேரக்டர் படத்தில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பாத்திரம். 'பரட்டை ரஜினி'யின் முழு தாக்கத்திலிருந்த பாக்யராஜ் அதனாலேயே சங்கிலி கையில் வைத்திருக்கும் தடியில் தீக்குச்சியை பற்ற வைத்து பீடி குடிப்பது போல் அமைத்திருப்பார்.
அவர் எதிர்பார்த்தது போலவே சங்கிலி கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டு பொதும்பு M.V.முருகன் அடுத்தப் படத்திலிருந்து 'சங்கிலி' முருகனானார். பாக்யராஜ் கதாபாத்திரம் கொஞ்சம் எப்பவுமே கோழை டைப்பில் இருப்பதால் படத்தில் இந்த கேரக்டர் அடித்து துவைத்து விடும். சங்கிலி முருகனே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இது அமைந்தது. சங்கிலி முருகன் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு மிகப்பெரிய வில்லனாக வளைய வந்தார்.
சிலப் படங்களைத் தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். ஒரு கை ஓசை ஹீரோ பாக்யராஜை விட 'சங்கிலி' முருகன் சந்தோஷமான, அமைதியான முதுமையைப் பெற்றிருக்கிறார். பாக்யராஜ் பரட்டை ரஜினியின் முழு தாக்கத்திலிருந்ததாலோ என்னவோ ரஜினியை ஒத்த சூர்யகாந்த்தை தூறல் நின்னு போச்சு, இன்று போய் நாளை வா போன்ற படங்களில் பயன் படுத்தினார். அச்சு அசல் ரஜினி போலிருந்த நளினிகாந்த்தை வில்லனாக பாக்யராஜ் முந்தானை முடிச்சுவில் கொண்டு வரவில்லையென்றால் நளினிகாந்த் பற்றி அதிகம் யாருக்கும் தெரியாது.
பரட்டை ரஜினிக்கு பதிலாக பாக்யராஜ் நளினிகாந்துக்கு தன் படங்களில் வாய்ப்பளித்தார். முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி போன்ற படங்களில் நளினிகாந்த் நடித்தார். பாக்யராஜின் இந்த இரண்டாம் நாயகன் வெற்றி பெற எழுதும் திரைக்கதையில் தான் அது வரை கெட்டவனாக இருந்த நம்பியார் தூறல் நின்னு போச்சு படத்தின் மூலம் நல்லவனாக மாறிப் போனார்.
ராசுக்குட்டி செம்புலி ஜெகன், எங்க சின்ன ராசா மண்ணாங்கட்டி சுப்ரமண்யம், இது நம்ம ஆளு கலைஞானம், சுந்தரகாண்டம் நந்தகோபால் இவர்களெல்லாம் பாக்யராஜின் ஹீரோ அல்லாது மற்றொரு கேரக்டர் வெல்ல வேண்டும் என்கிற சித்தாந்தத்தால் வென்றவர்கள் தான். பாக்யராஜை விட்டு வெளியே சென்று சோபிக்காதது அவர்களின் துரதிர்ஷ்டம். இதில் வென்றது சங்கிலி முருகன் மட்டுமே. மேலும் நம்பியாருக்கு வயதானதால் அந்த இடத்துக்கு ஒரு வில்லன் தேவைப்பட்டது.
அந்த தேவையை அழகாக சங்கிலி முருகனை நுழைத்து, அங்கிருந்த நம்பியாரை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக்கி சமன் செய்தது பாக்யராஜ் மட்டுமே. அவர் செய்த இது போன்ற சிறிய காரியங்கள் பெரிதாக வெளியே தெரியாமல் போனது அவர் துரதிஷ்டம். அதைப்போன்ற ஒரு வெயிட்டான கேரக்டர் என்பதாலேயே பாக்யராஜ் 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் சின்ன சேலம் சிங்காரம் என்கிற பாத்திரத்தில் தைரியமாக நடித்தார்.
அவருக்கு தெரியாதா சில நேரங்களில் சப்பாணியை விட பரட்டை தான் கை தட்டல் பெறுவான் என்று.... (பி.கு: இதில் நடித்த ஒரே காரணத்துக்காக தன் வேட்டியை மடிச்சுக்கட்டு படத்தில் ரஜினிக்காக 'மதுரை முத்துப்பாண்டி' என்கிற கேரக்டரை எழுதி வைத்து விட்டு ரஜினியை அழைக்க ரஜினி கௌரவ வேடத்தில் நடிக்க மறுக்க அதற்காக ரஜினி மீது வருத்தப்பட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...) இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications