உடைத்து பேசிய பிரபலம்.. "சதி விலகியது நன்றே".. அப்ப விஜய்க்கு அட்வைஸ்.. இப்ப விசிகவுக்கு சப்போர்ட்
சென்னை: "கட்சியிலிருந்து வெளியேறும் கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்" என்று ஆதவ் அர்ஜூனா தன்னுடைய விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா விலகியது குறித்து டைரக்டர் அமீர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.விசிக சார்பில் 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார். நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம் என திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார்.

கருத்து வேறுபாடு: அந்த கடிதத்தில், "விசிகவின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
விலகல்: இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல "அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்" என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன்" என்றெல்லாம் கூறி, விசிகவிலிருந்து விலகியிருக்கிறார்.
"நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம்" என்று அந்த கடிதத்தில் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், "கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்" என்றும் தெளிவுபடுத்தியிருப்பது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
அமீர் அதிரடி: இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து விலகியது தொடர்பாக இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் பதிவில், தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே" என்று பதிவிட்டிருக்கிறார் அமீர்.
அதேபோல, சமீபத்தில்கூட, அமீர் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் மற்றொரு பதிவை போட்டிருந்தார்.. அதில், 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வலிமை இழக்கச் செய்து திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது. மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் மக்களிடம் பிரசாரம் செய்ய போவதாக வீடியோ வெளியிடுகிறார். என்ன கொடுமை சார் இது" என்று பதிவிட்டிருந்தார்.
சினிமா இயக்குனராக இருந்தாலும், அரசியல் கருத்துக்களை துணிச்சலாக தெரிவித்து வருபவர் அமீர்.. அந்தவகையில், ஆதவ் அர்ஜுனா விவகாரம் எழுந்ததிலிருந்தே அதுகுறித்து விடாமல் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.
விஜய்க்கு அட்வைஸ்: நட்பு விஜய்யின் அரசியலுக்கு ஆதவ் அர்ஜூனாவின் நட்பு நல்லதல்ல என்றும் டைரக்டர் அமீர் கருத்து கூறியிருந்தார்.. "பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதல்-அமைச்சராகவே முடியாது. செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல" என்று சில நாட்களுக்கு முன்பே அறிவுறுத்தியிருந்ததும் இங்கு கவனித்தக்கது.












Click it and Unblock the Notifications