டாக்ஸிக் படத்தை டார் டார்ராக கிழித்த கோபி- சுதாகர்.. ஒரு வரம் கழித்து இப்படியா? அப்போ நோட்டீஸ் வருமா?
சென்னை: ஒரு படத்தை விமர்சகர் எவ்வளவுதான் கலாய்ப்பார்கள்? என்று ஒரு எல்லை இருக்கும் ஆனால் யாஷின் டாக்ஸிக் படம் வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் நடந்ததை பார்த்தால், படத்தை அடித்து துவைத்து காயப்போட்டு கிளிப் மாட்டிவிட்டு போன குறை தான் என்று சொல்லும் அளவுக்கு விமர்சனங்களும் ட்ரோல்களும் வந்து குவிந்தன. படம் நல்லா இருக்கு என்று ஒரு தரப்பினர் ஆதரித்தாலும் கதை, திரைக்கதை, சில கதாபாத்திரங்கள், கையாளப்பட்ட விதம் என இன்னொரு பக்கம் கடுமையான விமர்சனங்களும் இருந்தன.
இனி இந்த படத்தை இனி கலாய்க்க என்ன இருக்கப் போகிறது என்று நினைத்த நேரத்தில் தான் ஒரு வாரம் கடந்து களத்தில் இறங்கி இருக்கிறார்கள் கோபி சுதாகரின் பரிதாபங்கள் டீம். அதுவும் சும்மா ஒரு நான்கு வசனம் சொல்லிட்டு போகிற கலாய் கிடையாது. படம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ஒவ்வொரு சீனையும் பிடித்து இதையெல்லாம் நீங்க விட்டுட்டீங்களே நாங்க கவனிக்காமல் போயிருவோமா என்கிற ரேஞ்சில் நிமிடத்திற்கு நிமிடம் மரண கலாய் கொடுத்து இருக்கிறார்கள்.
ரசிகர்களின் கருத்து
டாக்ஸிக் பார்த்துவிட்டு வெளியே வந்த சில ரசிகர்கள் இதுக்காடா டிக்கெட் எடுத்தோம் என்று சோசியல் மீடியாவில் புலம்பி இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போது பரிதாபங்கள் வீடியோ ஒரு இலவச ஆறுதல் பரிசு மாதிரி இருக்கிறது. ஏனென்றால் ஒரிஜினல் படத்தை பார்த்தபோது சீரியஸாக இருந்த காட்சிகளையே கோபி, சுதாகர் தங்களுடைய பாணியில் திருப்பி போட்டதும் வேற மாதிரி தெரிகிறது. படம் ஆரம்பிக்கும் போது வரும் மது மற்றும் புகைப்பழக்கம் தொடர்பான எச்சரிக்கை கார்டிலேயே இவர்களுடைய சேட்டையை ஆரம்பமாகி விடுகிறது.
கோபி சுதாகர் வீடியோ
அதற்குப் பிறகு யாஷ் கதாபாத்திரத்தையும் சுதாகர் கையில் எடுத்ததும் அவ்வளவுதான். கும்பகோணத்துக்கு பஸ் வருமா என்று காத்திருப்பவர், இடியாப்பம் விற்பவர், தனக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாமல் அந்த பக்கமாக வேடிக்கை பார்ப்பவர் என்று கண்ணில் படுகிறவர்களை எல்லாம் போட்டுத் தள்ளிக் கொண்டே போகும் அளவுக்கு யாஷின் ஆக்சன் காட்சிகளை மிகைப்படுத்தி கலாய்த்து இருக்கிறார்கள்.

பரிதாபங்கள் டாக்ஸிக் வீடியோ
ஹீரோவுக்கு எதிரி யாருன்னு தேடுவதெல்லாம் பழைய ஸ்டைல் கண்ணுல பட்டாலே போதும் என்ற ரேஞ்சில் அவங்க கலாய் போகிறது. யாஷ் மட்டும் இல்ல யாஷின் சகோதரியாக வரும் நயன்தாரா கேரக்டரும் இவர்களிடம் தப்பவில்லை. ஒரிஜினல் படத்திலிருந்து மிகவும் சீரியஸாகவும் ஸ்டைலாகவும் காட்டப்பட்ட பல விஷயங்களை இவர்களுடைய வெர்ஷனில் பார்த்தால் சிரிப்பு அடக்க முடியாத அளவுக்கு மாற்றி இருக்கிறார்கள்.
படம் பார்த்தவர்களுக்கு ஒரு வசனம் சொன்னாலே அந்த காட்சி நினைவுக்கு வந்துவிடும். அதுபோல இடத்தில் சரியாக ஒரு கவுண்டர் வைத்து விட்டால் ரசிகர்களே கனெக்ட் செய்து கொள்வார்கள். அந்த வேலையைத்தான் இப்போ சுதாகர் டீம் செய்திருக்கிறார்கள். பரிதாபங்கள் வீடியோவை பார்த்து சிரித்த ரசிகர்களுக்கு அடுத்ததாக நினைவுக்கு வந்திருப்பது டாக்ஸிக் படத்தை சுற்றி கடந்த சில நாட்களாக நடக்கும் லீகல் நோட்டீஸ் விவாகாரம்.
லீகல் நோட்டிஸ் வருமா?
படம் வெளியான பிறகு அந்த படத்தைப் பற்றி சிலர் நெகட்டிவாக ரிவ்யூ செய்து கொடுத்திருக்கிறார்கள் என சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது அதிலும் டாக்ஸிக் முரட்டு ரோஸ்ட் என்ற பெயரில் கடுமையாக விமர்சனம் செய்த ரிவியூவர் பிரசாந்துக்கு சட்ட நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது அது மட்டுமல்லாமல் புக் மை ஷோ ரேட்டிங் தொடர்பாக பதிவு செய்த X பயனாளர் ஒருவரும் தனக்கு லீகல் நோட்டீஸ் வந்ததாக செப்டம்பர் 2ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
டாக்ஸிக் பட ப்ரொமோஷனில் ஏற்பட்ட பெரிய விபத்து.. 2 மாணவர்களுக்கு காயம்! யஷ் முன்பு என்ன நடந்தது?
இதையெல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்திருப்பதால் பரிதாபங்கள் வீடியோ வந்ததும் அடுத்து உங்களுக்கு தான் நோட்டீஸ் வருமா? என்று ரசிகர்கள் அவர்களை கலாய்த்து வருகிறார்கள். டாக்ஸிக் படத்தை விமர்சனங்கள் ஏற்கனவே துவைத்து காய போட்டு விட்டார்கள் என்று நினைத்தால் ஒரு வாரம் கழித்து வந்த கோபி சுதாகர் இன்னும் கொஞ்சம் தண்ணி இருக்குப்பா என்று மறுபடியும் வாஷிங்மெஷினுக்குள் போட்டு விட்டார்கள்.


Click it and Unblock the Notifications
