சைக்கிளில் போன கிரேசி மோகன்.. சுடுகாட்டில் தொடங்கிய கமல்ஹாசனின் நட்பு.. ரஜினியா இப்படி கேட்டார்?
சென்னை: சினிமாவில் அடுக்கு மொழிகளில் காமெடி வசனங்கள், டைமிங் காமெடி என்று தனக்கென்று தனி பாணியை உருவாக்கி, எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் காமெடி சீன்களை உருவாக்குவதில் கிரேசி மோகனுக்கு இணையாக யாரும் இருக்க முடியாது.
அந்த அளவிற்கு கதை வசனங்களை காமெடியாக எழுதுவதில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் அவர்.
கிரேசி மோகனின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியங்களை அவரது சகோதரர் மாது பாலாஜி பகிர்ந்துள்ள வீடியோ பலர் கவனத்தை பெற்று வருகிறது.
நடிகர் கமலஹாசன் நடிப்பு, இயக்கம்,நடனம் என அனைத்து துறையிலும் ஜீனியஸ் ஆக இருந்தாலும் கமலுடைய காமெடி உணர்விற்கும் நடிப்பிற்கும் புது ரத்தம் பாய்ச்சி தனி ஸ்டைலை அவருக்கு உருவாக்கி கொடுத்தவர் கிரேசி மோகன் தான். இவர்களுடைய அறிமுகமே சற்று வித்தியாசமானது தான்.

கிரேசி மோகன் எதேச்சையாக ஒருமுறை சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது அவரது வீடு அருகே சுடுகாட்டில் கூட்டமாக இருப்பதை கவனித்த கிரேசி மோகன் என்னவாக இருக்கும் என்று இறங்கி வேடிக்கை பார்க்க போயுள்ளார்.அப்பொழுது தூரத்தில் சற்று தாடியுடன் நன்கு ஒட்ட வெட்டிய முடியுடனும் இருந்த உருவம் இவரை அருகே வருமாறு அழைத்துள்ளது.
அருகே சென்று பார்த்த கிரேசி மோகனுக்கு ஒரே அதிர்ச்சி,அது வேறு யாரும் இல்லை சத்யா பட கெட்டப்பில் இருந்து கமல் தான் அது.ஆனந்த விகடன் பத்திரிக்கை நிருபராகவும், கே.பாலச்சந்தரின் நண்பராகவும் கிரேசி மோகனை தனக்குத் தெரியும் என்று கிரேசி மோகன் இடம் நன்கு பேச ஆரம்பித்துள்ளார் கமல்.கிரேசி மோகனின் கலகல பேச்சால் கவரப்பட்ட கமல் நாளை உங்கள் வீட்டிற்கு கார் அனுப்புகிறேன் என்னுடைய அலுவலகத்திற்கு வாருங்கள் இன்னும் நாம் நிறைய பேசலாம் என்று சொல்லி இருக்கிறார்.
கமலிடமிருந்து இவ்வளவு பெரிய அழைப்பை எதிர்பாராத கிரேசி மோகன் கமல் கூப்பிடுவாரா மாட்டாரா என்று சந்தேகத்துடனே இருந்திருக்கிறார். ஆனால் கமல் சொன்னபடியே கிரேசி மோகன் வீட்டிற்கு காரை அனுப்பி தனது அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார்.பல நாட்கள் தொடர்ந்து கமலின் அலுவலகத்திற்கு செல்வதும் படங்கள் பற்றி பேசுவதுமாக இருந்திருக்கிறார் கிரேசி.
அப்படி கிரேசி மோகன் ,கமல்,சங்கீதம் சீனிவாசன் மூன்று பேரும் அமர்ந்து டிஸ்கசன் செய்து 15 நாட்களில் உருவானது தான் அபூர்வ சகோதரர்கள் படம்.அபூர்வ சகோதரர்களின் படம் வெற்றியை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இன்றளவும் தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க்குகளில் ஒன்றாக இருக்கிறது. பல படங்களுக்கு கிரேசி மோகன் கதை வசனம் எழுதியிருந்தாலும் கமலுக்கு என்று அவர் எழுதிய படங்களில் காமெடிகளில் ஒரு வித்தியாசத்தை காட்டியிருப்பார்.
அபூர்வ சகோதரர்களுக்கு பின்பு மகளிர் மட்டும் சதிலீலாவதி, இந்திரன் சந்திரன், அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம்,தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ்,போன்ற படங்கள் அவர்களின் வெற்றிக் கூட்டணி படங்களாக மட்டுமல்ல காமெடியில் என்றும் நிலைத்திருக்கும் படங்களாக இருப்பது உதாரணமாகும்.
அவ்வை சண்முகி படத்தின் வெற்றியை பார்த்து ரஜினிகாந்த் கிரேசி மோகனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி தான் பேசுகிறார் என்பதை நம்பாத கிரேசி மோகன் சந்தேகத்துடனே நீங்கள் யார் பேசுகிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். ரஜினிகாந்தும் நான் ரஜினிகாந்த் தான் பேசுகிறேன் என்று பலமுறை சொன்ன பிறகு நம்பி இருக்கிறார். நாம் ஒரு படம் இணைந்து பண்ணுவோம் என்று கிரேசி மோகனை அழைத்துள்ளார்.
கமலிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் வருவேன் என்று நாசுக்காக சொன்ன கிரேசி மோகன் மறுநாள் கமலிடம் சென்று அனுமதி கேட்பதற்காக சென்று உள்ளார். கிரேசி மோகனை உற்சாகமாக வரவேற்ற கமல் கிரேசி மோகன் சொல்வதற்கு முன்பாக ரஜினியுடன் படம் பண்ண போகிறீர்களா வாழ்த்துக்கள் என்று கூறியதை கேட்டு மோகன் ஷாக்காகிவிட்டார்.
மோகன் வருவதற்கு முன்பே கமலிடம் ரஜினி பேசி இருக்கிறார் போலும். கமலின் விருப்பத்துடன் கிரேசி மோகன் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் அருணாச்சலம்.தன்னுடைய படங்கள் நகைச்சுவை மூலம் பலரை சிரிக்க வைத்த கிரேசி மோகன் என் வாழ்க்கை ஸ்விட்ச் ஆப் செய்தால் அணையும் லைட்டை போல எதிர்பாராமல் திடீரென்று அணைந்து விட்டதாக அவரது சகோதரர் மாது பாலாஜி வருத்தத்துடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications