நானும் என் அக்கா தேவயானியும் பிரிந்தது ஏன்? மனைவி ஸ்ருதி காரணமா? நகுல் ஓபன் டாக்!
சென்னை: தேவயானியும் நானும் பிரிய என் மனைவி காரணமா? என்று பரவும் தகவல் உண்மையா என்பது குறித்து நடிகர் நகுல் விளக்கமளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து நகுல் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் தேவயானியும் ஒருவர். பலருக்கு கனவுக்கன்னியாக இருந்தார். தொட்டாசிணுங்கியில் அறிமுகமானார். பின்னர் காதல் கோட்டையில் அவரை பார்த்த பலர், இது போல் நமக்கும் ஒரு காதலி கிடைக்கமாட்டாரா என ஏங்கிய காலமும் உண்டு. இந்த படத்திற்காக தேவயானிக்கு தமிழகத்தின் திரைப்பட விருதும் கிடைத்தது.

இவர் மும்பையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுஷ்மா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி, வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் வெளியான கோலங்கள் தொடரில் நடித்துள்ளார்.
நீ வருவாய் எனும் திரைப்படத்தில் பார்த்திபன், அஜித்துடன் தேவயானி நடித்திருந்தார். அப்போது அவருக்கும் அந்த படத்தின் இயக்குநர் ராஜகுமாரனுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு தேவயானியின் அம்மா ஒப்புக் கொள்ளவில்லை என சொல்லப்பட்டது.
இதனால் தேவயானி தனது வீட்டு கேட்டை விட்டு எகிறி குதித்து சென்று ராஜகுமாரனை திருமணம் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இவர்கள் 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இனியா, பிரியங்கா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இனியா தற்போது ஜீ தமிழ் சரிகமபவில் போட்டியாளராக பாடி வருகிறார். இவரது தனித்துவமான குரலை நடுவர்கள் பாராட்டி வருகிறார்கள். தனது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து தேவயானியும் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார். தேவயானிக்கு நகுல் என்ற தம்பி இருக்கிறார். இவர் மாசிலாமணி என்ற படத்தில் நடித்திருக்கிறார். சில ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக கலந்து கொண்டார்.
தனது அக்கா மகள் இனியா கலந்து கொள்ளும் சரிகமப நிகழ்ச்சிக்கும் நகுல் சென்றார். அங்கு இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பாடினர். இனியா கிடார் வாசித்துக் கொண்டே பாடினார். இந்த நிலையில் நகுல் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராஜகுமாரனை தேவயானி திருமணம் செய்து கொண்டது நகுலுக்கு பிடிக்கவில்லை என்பதால் அக்காவை ஒதுக்கி வைத்துவிட்டார் என்றெல்லாம் கமெண்ட் போடுவார்கள்.
அது மட்டுமல்லாமல் என் மனைவி ஸ்ருதிதான் என்னையும் அக்காவையும் பிரித்துவிட்டார் என சொல்வதை பார்த்தால் கோபமாக வரும். இப்போது இதை எல்லாம் கேட்டால் எனக்கு கோபமே வருவதில்லை. இவ்வாறு நகுல் தெரிவித்துள்ளார். அண்மையில் தேவயானி பிறந்தநாளுக்கு நகுல் சர்ப்ரைஸாக வந்து வாழ்த்தினார். அத்துடன் தனது மகள் தேவயானி போல் இருப்பதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications