Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெருநாய் குறித்து விஜய் டிவி நீயா நானா விவாதத்தை தொடர்ந்து! ஜேம்ஸ் வசந்தன் போட்ட முக்கிய பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெருவில் நாய்கள் அதிகம் இருக்கும் பட்சத்தில் அவற்றிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த 8 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். தெரு நாய்கள் கடிப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உயிரிழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தெருநாய்களை காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீங்கள் வசிக்கும் பகுதியில் / தெருவில் நாய்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றிடம் நடந்து கொள்ள சில அடிப்படை உத்திகள்:

television james vasanthan

1. ஒன்றிரண்டு முறை அவற்றுக்கு பிஸ்கட் வாங்கிப் போடுங்கள். மூன்று/நான்கு பாக்கெட் வாங்கி எடுத்துச் செல்லுங்கள். அதற்குப் பிறகு உங்களைத் தொலைவில் பார்த்தவுடனே வாலை ஆட்டிக் கொண்டு ஓடிவரும்; நட்பு பாராட்டும்.

பாதுகாப்புக்காக பிஸ்கட் கொடுத்து, பின்பு அவை காட்டும் அன்பின் காரணமாக நீங்களே தொடர்ந்து போட ஆரம்பித்து விடுவீர்கள். அது உங்கள் விருப்பம்.

பழைய செய்தித்தாள் மற்றும் பழைய பொருட்கள் விலைக்கு வாங்குகிற ஒரு இளைஞன் பல ஆண்டுகளாக எங்கள் தெருவுக்கு வருகிறான். ஒரு மூன்று சக்கர வண்டியில் மணியடித்துக் கொண்டே வருவான்.

அந்த மணிச் சத்தம் கேட்டவுடன் பல திசைகளிலிருந்தும் நாய்கள் ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொஞ்சி விளையாடும். பிறகு அவற்றுக்கு பிஸ்கட் போடுவான்.
இந்தப் பழக்கம் அவன் தன் பாதுகாப்பு கருதி தொடங்கியிருப்பான் என்று நாங்கள் நினைக்கிறோம். இன்று அவனுக்கு அது வாடிக்கையாகி விட்டது. இதற்காக தினந்தோறும் 100 ரூபாய்க்கு மேல் அவன் செலவழிக்கிறான்.

2. கூடியவரை அவை உங்களையோ, உங்கள் பிள்ளைகளையோ நக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் அவர்கள் மொழி. அப்படித்தான் அன்பைக் காட்டும். ஆனால் அவற்றுக்கு ரேபீஸ் தொற்று இருந்தால் அது ஆபத்து.
அவைகளைத் தொட்டாலோ, அவை நக்கினாலோ உடனே கை கால்களை சுத்தமாகக் கழுவிவிடுதல் அவசியம்.

3. புதிய தெருப் பக்கம் பைக்கில் செல்லும்போது கொஞ்சம் கவனம் அவசியம். வேகம் அவற்றின் முதல் எதிரி. அதற்கு சில காரணங்கள் இருக்கலாம். நமக்கு அது தேவையில்லை. நம் பாதுகாப்புதான் முக்கியம்.
அவற்றைத் தாண்டும் வரை வேகத்தைக் குறைக்கலாம் அல்லது இறங்கி தள்ளிக் கொண்டு செல்லலாம்.

4. லுங்கி கட்டிக் கொண்டு செல்பவர், வெளுப்பான வெளிநாட்டவர், கருப்பு வேட்டி, சட்டை போட்டவரைப் பார்த்து எல்லா நாய்களும் குரைத்துக் கொண்டே இருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். நாம் இவற்றைக் கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

5. ஒரு நாய் நம்மை நோக்கி விரட்டி ஓடி வருவதைக் கண்டால் அப்படியே நின்று விட வேண்டும். ஓடினால் கடி நிச்சயம். இது விலங்கின் இயல்பு; நாம் அதை மாற்ற முடியாது. நாம்தான் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

இதைச் சொல்வது எளிது; நடைமுறையில் கொஞ்சம் கடினம்தான். நாம் நின்றுவிட்டாலும் அது பக்கத்தில் வரும்போது இதயம் படபடக்கும்; உடல் நடுங்கும். ஆனால் நாய்கள் நின்று கொண்டிருப்பவரைக் கடிக்காது. அதற்கு சவால் விட்டால்தான் எகிறும். கொஞ்ச நேரம் நில்லுங்கள். அதைத் தாக்க முயலாதீர்கள்.

ஒரேயொரு நாய்தான் என்றால் அதனைச் சமாளிப்பது கொஞ்சம் எளிது. சற்று தொலைவில் வரும்போதே கீழே குனிந்து கல்லை எடுப்பது போல சைகை செய்தால் நின்றுவிடும். ஓடிவிடும். எட்டநின்று குரைக்கும். ஒரு கல்லை அதன் மேல் போட்டாலும் பரவாயில்லை.

பொதுவாக ஒரு நாய் குரைக்க, விரட்டத் தொடங்கினால் அங்கங்கு இருக்கிற எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துவிடும். கூட்டமாக வந்தால் சமாளிப்பது கொஞ்சம் கடினந்தான். கையில் பிஸ்கட் இருந்தால் தப்பித்து விடலாம். சில பிஸ்கட்டுகளைத் தூக்கியெறிந்தால் ஒரு நாய் அதை உண்ண வந்தால் கூட நிலைமை அப்படியே மாறிவிடும். மற்றவை வந்த வேலையை மறந்து பிஸ்கட்டைத்தான் எதிர்பார்க்கும்.

6. பழகிய நாயோ, தெருநாயோ எந்த நாயையும் கொஞ்ச முதலில் கையை நீட்டக் கூடாது. இதில் வீட்டு நாய்கள் ரொம்ப மோசம். டபக்கென்று நீட்டிய கையைக் கடித்துவிடும். தெருநாய்கள் சந்தேகத்துடன் பின்வாங்கும்.

7. பல வீட்டு நாய்கள்தான் உண்மையிலேயே ஆபத்து. அவற்றிடம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் எசமானருக்கு நன்றியைக் காட்ட, பாதுகாப்பைத் தர எண்ணி, வீட்டுக்கு வருபவரை எதிரியாகப் பார்க்கும்.

ஆனால், அந்த வீட்டிலிருப்பவர்கள் "இது ரொம்ப சாது; எதுவுமே செய்யாது; ரொம்ப நல்லவன்" அப்படின்னு நெறய சொல்வாங்க. அதை நம்பி அதைத் தடவிக் கொடுக்க முயற்சி செய்யாதிங்க. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உண்மையிலேயே சாது என்றால் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கே தெரிந்துவிடும். வந்து தடவிக் கொடுக்கச் சொல்லி உங்கள் மேல் உரசும். குழைவாக இருக்கும்.

8. கீழ்மட்டத்திலிருப்பவர்தான் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை. அந்த நாய்களை ஓட ஓட விரட்டி விளையாடுவதும், கல்லால் அடித்து துன்புறுத்தி மகிழ்வதும், தகர டப்பாக்களையும், பட்டாசுகளையும் அவற்றின் வால்களில் கட்டி அவை மிரண்டு கத்திக் கொண்டே ஓடுவதைப் பார்த்து சிரிப்பதும் இந்த மட்டத்தினுடைய பொழுபோக்கு.
நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகள் தேடுவதைப் போல, அவையும் தற்காப்பாகத்தான் பல தாக்குதல்களைச் செய்கின்றன.

நாம் கீழே குனிந்தவுடன் கல்லையெடுத்து அடிக்கத்தான் முயல்கிறோம் என்கிற சிந்தனை அதற்கு எங்கிருந்து வந்தது?
ஆனால், வெறிபிடித்த நாய்களை உடனே அப்புறப்படுத்துவது / கருணைக்கொலை செய்வது மிகமிக அவசியம். ரேபீஸ் கடிக்கு மருந்து இல்லை, மரணம் மட்டுமே முடிவு. மனித உயிர் மேன்மையானது.
அதைப் பாதுகாப்பதுதான் முதல் தேவை. அதற்குப் பிறகுதான் விலங்குகளின் நலன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+