2064-ல் உலகம் எப்படி இருக்கும்? 'கலியுகம்' தரும் அதிர்ச்சி பார்வை!
கலியுகம் 2064
நடித்த கலைஞர்கள்: ஹாரி, மாஸ்டர் ரோனித், அஸ்மல், கிஷோர் குமார் ஜி, பயர் கார்த்திக், ஆர்யா லட்சுமி, மிதுன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இனியன் சுப்பிரமணி.

இயக்குனர்: பிரமோத் சுந்தர்
எழுத்தாளர்கள்: ஆத்ரேய, கார்த்திக், குணசேகரன், கார்கவி
கதைச் சுருக்கம்
கலியுகம் 2064-ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாகியுள்ள திரைப்படம் இது. ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
2064ஆம் ஆண்டில் உலகம் பஞ்சம், பசி இவற்றால் பெரும் பாதிப்புக்குள்ளாகும்; மக்கள் ஒருவருக்கொருவர் கொன்று உண்பார்கள். பலம் வாய்ந்தவர்கள் தங்களுக்கான உணவையும் தண்ணீரையும் மற்றவர்களுக்குக் கொடுக்காமல் சேமித்து வைப்பார்கள். வலுவற்றவர்கள் வஞ்சிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாக நடக்கும் என்பதைத்தான் இப்படம் சொல்ல வருகிறது.
இப்படம் ஏழ்மையில் வாடும் மக்களுக்கும், ஆதிக்கம் செலுத்தும் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைக் காட்சிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் சில மக்கள் (லிபரேட்டர்ஸ் என்ற குழு) அதிகார வர்க்கத்திடமிருந்து தப்பித்து ஓடுகின்றனர். அக்குழுவின் மைய நாயகனாக நடித்த கிஷோர் குமார் ஜியின் துருதுருப்பான சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தன.
அவர் ஒரு கட்டத்தில் எதிரியின் பிடியில் சிக்கி இறந்து விடுகிறார். அதன்பின் நாயகி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) வருகிறார். இவர் வந்த பிறகு, அந்த எதிரிக் கோட்டையின் சுரங்க அறையில் நாயகிக்கும் வில்லனுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகளும் சண்டைகளும் விறுவிறுப்பாக நகர்கின்றன. இறுதியில் நாயகி தப்பினாரா, அந்த ஏழை மக்களின் நிலை என்ன என்பதே படத்தின் கதை.
விமர்சனம்
படம் ஏதோ சொல்ல வந்து, ஆனால் அதை முழுமையாகச் சொல்லாமல் சென்ற உணர்வைத் தருகிறது. காரணம், காட்சிகளின் அமைப்பு, உரையாடல்கள், கதாபாத்திரங்களின் ஆழம் ஆகியவை படத்தில் சிறப்பாகச் செதுக்கப்படவில்லை என்பதுதான். கதை ஒரு நேர்கோட்டில் சொல்லப்படாமல், அவ்வப்போது சில கதாபாத்திரங்கள் தோன்றி மறைவதால், பார்வையாளர்களுக்குப் படம் எதை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வி எழத் தொடங்கிவிடுகிறது. மேலும், நடுப்பகுதியில் படம் மிகவும் மெதுவாக நகர்கிறது. இதனால், யார் இறந்தால் என்ன, யார் உயிர் தப்பினால் என்ன என்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.
ஒளிப்பதிவு, கலை இயக்கம் (செட்), இசை என எல்லாமே சுமாராக இருந்தன. குறைந்த பட்ஜெட் படமாக இருந்ததாலோ என்னவோ இந்த நிலை என்று தெரியவில்லை. எந்தக் கதாபாத்திரமும் வலுவாக அமைக்கப்படாததால், எந்த இடத்திலும் மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் இல்லை.
மொத்தத்தில், இப்படம் பார்க்கும் அளவுக்கு உள்ளது. மிக அதிகமாக எதிர்பார்த்துப் பார்ப்பதைவிட, ஏதோ புதிதாகச் சொல்ல வருகிறார்கள் என்ற கோணத்தில் பார்ப்பவர்களுக்கு ஓரளவு படம் பிடிக்கும்.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications