வெளியானது காந்தாரா சாப்டர் 1 ட்ரைலர்.. மிரட்டும் ரிஷப் ஷெட்டி.. பாகுபலி ரேஞ்சில் கன்னட திரைப்படம்
சென்னை: 2022-ஆம் ஆண்டு கன்னட சினிமா உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிற்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த படம் என்றால் அது காந்தாரா தான்! வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி, உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸையே திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் படம், இப்போது, அதன் ப்ரீக்குவல் ஆக, காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் திரைக்கு வர இருக்கிறது. ரசிகர்களின் ஆவலை இன்னும் பல மடங்கு தூண்டும் விதமாக, இன்று படத்தின் டிரைலர் வெளியாகி, இணைய உலகை அதிர வைத்துள்ளது.

ஒரு உண்மைக் கதை
நடிகர், இயக்குனர், எழுத்தாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த ரிஷப் ஷெட்டி தான், இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், மற்றும் கதாநாயகன். கர்நாடகாவில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைத்தான், அவர் காந்தாரா படமாக எடுத்திருந்தார்.வன அதிகாரிக்கும், பழங்குடி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கோலா நடனம் எனப் பல விஷயங்கள் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுத்தன.
குறிப்பாக, கோல நடனம், படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. அது ஒரு வெறும் நடனம் என்பதைத் தாண்டி, அதில் இருந்த உணர்வுபூர்வமான விஷயங்கள், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

பொதுவாக ஒரு சில நடிகர்கள் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போன்று இருப்பார்கள்.அந்த நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கும் எந்த கேரக்டருக்கும் ஈசியாக செட்டாகி விடுவார்கள். அதுபோலத்தான் ரிஷப் ஷெட்டியும் காந்தாரா படத்தில் ஆரம்பத்தில் ஒருவிதமாகவும், பிறகு ஆக்ரோஷமாகவும் மாறி ரசிகர்களை மிரள வைத்திருந்தார். அவருடைய கண் அசைவு கூட பார்ப்பவர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியது. அதேபோல இப்போது ட்ரெய்லரிலும் மிரள வைக்கும் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது.
சாப்டர் 1 டிரைலரால் எகிறிய எதிர்பார்ப்பு
முதல் பாகத்திலேயே வில்லன் கொல்லப்பட்ட நிலையில், படத்தின் அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இது இரண்டாவது பாகம் அல்ல, இது முதல் பாகத்திற்கு முந்தைய கதை, அதாவது ப்ரீக்குவல் என அறிவித்தபோது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு முன்னதையும் விட அதிகமாகிவிட்டது.
இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும், படத்தின் பிரமாண்டத்தை உணர்த்துகிறது. படத்தின் ட்ரைலரை, ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அவதார் மாதிரியும், பாகுபலி மாதிரியும் உணர வைக்கிறது படத்தின் ட்ரைலர். கன்னட திரையுலகம் அடுத்த கட்டம் போயுள்ளது என்பதை காந்தாரா சாப்டர் 1 உறுதியாக அறிவிப்பதை போல டிரைலர் உள்ளது. இதிலும், காந்தாரா படத்தைப் போலவே, குலிகா தெய்வத்தின் ஓங்கார சத்தமிடும் காட்சியும், சாமியாடும் காட்சியும் இருப்பது கூஸ்பம்ப் தருகிறது. நிலத்தின் பூர்வ குடிகளை கொல்லும் மன்னனை அடக்கும் கதை என்பது டிரைலரில் புரிகிறது.
காந்தாரா சாப்டர் 1, அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படமும், முதல் பாகம் போல ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications