காந்தாரா பட நடிகர் திடீர் மரணம்.. அடுத்தடுத்த உயிர் பலியால் அதிர்ச்சியில் படக்குழு!
பெங்களுர்: 'காந்தாரா' திரைப்படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகர் ராகேஷ் புஜாரி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமண விழா ஒன்றின் போது டான்ஸ் ஆடியுள்ளார் ராகேஷ். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
அண்மையில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த இன்னொரு இளம் நடிகரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசையமைத்தார்.
காந்தாரா திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.400 கோடி வசூலை பெற்று மிரட்டியது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
காந்தாரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ராகேஷ் பூஜாரி (33). இவர் காமெடி கில்லாடி சீசன் 3 ஷோவின் வெற்றியாளர். காந்தாரா படத்தின் 2 ஆம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், உடுப்பியில் திருமண விழா ஒன்றில் ராகேஷ் பூஜாரி கலந்து கொண்டிருந்தார். திருமண விழாவில் தமது நண்பர்களுடன் அவர் மேடையில் உற்சாகம் பொங்க, நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நெஞ்சை பிடித்தபடியே சரிந்து விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இளம் நடிகர் ராகேஷ் பூஜாரி மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமாவில் வளர்ந்து வந்த நடிகரான ராகேஷ் பூஜாரியின் மறைவை அறிந்த கன்னட சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் 'காந்தாரா சாப்டர் 1' என பெயரில் உருவாகி வருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று இருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் MF கபில் என்பவர் அண்மையில் ஆற்றில் நீச்சல் அடித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், மற்றொரு காந்தாரா பட நடிகரும் பலியானது கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications