KPY Bala: ‘நான் சாகும் வரை உதவி செய்வதை நிறுத்த மாட்டேன்!’ ஆதாரத்தோடு பேசுகிறேன்.. KPY பாலா ஆவேசம்
சென்னை: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், காமெடியனாகத் தனது பயணத்தைத் தொடங்கி, பிறகு மிகப் பெரிய பிரபலமாக மாறியவர் கே.பி.ஒய். பாலா. கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அவர் பிரபலமானார். தனது தனித்துவமான நகைச்சுவையால், ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்த பாலா, தனது புகழ் உயர உயர, தான் செய்த சமூக சேவையால் சர்ச்சைகளுக்கு உள்ளானார். ஆனால், அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், தற்போது ஒரு ஆவேசமான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

சமூக சேவை
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு, கே.பி.ஒய். பாலா கிடைத்த வருமானத்தை வைத்து பலருக்கும் உதவிகளைச் செய்யத் தொடங்கினார். அவர் தனது உதவிக்காக ஆம்புலன்ஸ், சைக்கிள், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டிகள் என பலவற்றை வழங்கினார். ஆனால், அவருடைய வருமானம் மிகக் குறைவாக இருந்தபோதிலும், அவர் இவ்வளவு பெரிய உதவிகளைச் செய்வது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
பாலா கொடுத்த விளக்கம்
பாலாவின் இந்த உதவிகளின் பின்னணியில் ஒரு திட்டம் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்களை வைத்தனர். குறிப்பாக, அவர் வழங்கிய ஆம்புலன்ஸ்களின் நம்பர் பிளேட் காலாவதி தேதி எண், உதவி பெறுபவர்களின் தேர்வு, அவர்களை பீலிங்காக பேச வைத்து வீடியோ பதிவு செய்வது எனப் பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக பாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "நான் சர்வதேச கைகூலி இல்லை. நான் தினக்கூலிதான். எனக்கு எந்தவிதமான சர்வதேச தொடர்பும் இல்லை" என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். பாலா இப்படிப் பேசியதற்குப் பிறகு, அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்தன.
சீமானின் ஆதரவு
இந்த விவகாரம் சூடுபிடித்த நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கே.பி.ஒய். பாலாவுக்கு ஆதரவாகப் பேசினார். "அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி. எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்?" என்று சீமான் கேள்வி எழுப்பி, தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இது குறித்து விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று தெரிவித்த கே.பி.ஒய். பாலா, "நான் செய்து வரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன். என்னுடைய வேலையே, என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இல்லை. என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் கொடுப்பேன்" என்று ஒரு உறுதியான பதிலைக் கொடுத்திருக்கிறார்.
கே.பி.ஒய். பாலா தொடர்ந்து தனது சமூக சேவையைச் செய்துகொண்டிருப்பாரா? அல்லது தனது விளக்கத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications