பாலாவை பற்றி பேசி தான் நான் சாப்பிடுறேனா? ஆதாரத்தை காட்டட்டும்! அப்படி பேசலாமா? நடிகர் ஆதங்கம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கே.பி.ஒய் பாலா. குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு, அவருடைய புகழ் பல மடங்கு உயர்ந்தது. அந்த நிகழ்ச்சியில், தன்னையே கேலி செய்தும், மற்றவர்களைப் பற்றி கிண்டலாகப் பேசியும் ரசிகர்களின் மனதில் ஒரு நீங்கா இடத்தைப் பிடித்தார். ஆனால், அவருடைய புகழ் ஒரு பக்கம் உயர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவருக்குப் பல பிரச்சனைகளும் வரத் தொடங்கின. சமீபத்தில் பாலாவுக்கு எதிராக பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஆதவன் பாலா பற்றி பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமூக சேவை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றி, பாலாவிற்குப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பையும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த பாலா, காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
திரைப்படங்களில் கிடைத்த வருமானம் மற்றும் நிகழ்ச்சிகளில் வாங்கிய சம்பளத்தை வைத்து, சின்னச் சின்ன உதவிகளைச் செய்யத் தொடங்கினார் பாலா. குறிப்பாக, புயல், வெள்ளம் போன்ற சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வந்தார். பிறகு, ஆங்காங்கே இருக்கும் வறுமையான மக்களுக்கு ஓடிச் சென்று, ஆம்புலன்ஸ், மிதிவண்டி, ஊனமுற்றோருக்கான வண்டிகள் எனப் பல உதவிகளைச் செய்து அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால், அவருடைய வருமானம் மிகக் குறைவு. இருப்பினும், அவர் செய்த உதவிகள் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது.
பூகம்பத்தை கிளப்பிய உமாபதி
பாலாவின் இந்த சமூக சேவைதான் அவருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியது. பத்திரிகையாளர் உமாபதி, ஒரு பேட்டியில், பாலாவின் பின்னணியில் யாரோ ஒருவர் இருக்கிறார் என்றும், பாலா ஒரு இணைய கூலியாக செயல்படுகிறார் என்றும் ஒரு பெரிய பூகம்பத்தைக் கிளப்பினார். மேலும், அவர் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களை நன்கொடையாகக் கொடுத்திருந்தாலும், அதற்கான ஆர்.சி. புத்தகம் வேறு யாரோ பெயரில் இருப்பதாகவும், இருசக்கர வாகனங்கள் பழைய வண்டிகள்தான் என்றும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த பாலா, ஒரு வீடியோ வெளியிட்டு, "நான் இணைய கூலி இல்லை, தினக்கூலி" என்று கூறினார். அதன் பிறகு அவர் இதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் சந்தேகம் வலுப்பெற்றது. பாலாவிடம் உதவி பெற்றவர்களும், இந்தச் சூழ்நிலையில் அவருக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை. இதனால், இது ஒரு பப்ளிசிட்டிக்காக மட்டுமே செய்யப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்தது.
நண்பனின் உருக்கமான பேட்டி
இந்த விவகாரத்தில், பாலாவுடன் விஜய் டிவியில் ஒன்றாகப் பணியாற்றிய நடிகர் ஆதவன், ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பாலா தெரிந்து செய்கிறாரா தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை. அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் 30 வருடங்களுக்கு மேலே உள்ள வண்டியாக இருக்கிறது. அந்த வண்டியை கொடுத்தால் அது பொது சேவைக்கு பயன்படுமா? என்று தெரியவில்லை. அதுபோல இன்னொரு வண்டி நம்பரை செக் பண்ணி பார்க்கும்போது அது 2016 இல் வாங்கிய வண்டியாக இருக்கிறது. அதில் இன்னொரு ஓனரின் பெயர் இருக்கிறது. பாலா பணத்தை கொடுத்து வாங்கி இருந்தால் அப்பெயர் மாற்றப்பட்டு இருக்கும் ஆனால் பெயர் இன்னும் மாறாமல் இருக்கிறது. இதனால் பாலா இதை கவனிக்க வேண்டும், இது குறித்து விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
மேலும் "நான் உன் மேல இருக்கிற அக்கறையில கால் பண்ணி, இதில் இருந்து வெளியே வந்துடுனு சொன்னா, நீ வந்து 'என்னை வச்சு பேசி சம்பாதிக்கிறீர்கள்' என்று சொல்ற. நான் ஏதோ உன்னை வச்சுதான் சாப்பிடுற மாதிரி பேசுறே. உன்னைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லுப்பான்னு சொன்னா நீ இப்படிப் பேசுற" என்று மிகுந்த ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, குக் வித் கோமாளி பாலா ஒரு மர்மமான மௌனத்தைக் கடைப்பிடித்துவருகிறார். இந்த விவகாரம் குறித்து பாலா வாய் திறக்கும் வரை, இது போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் வந்துகொண்டேதான் இருக்கும்.












Click it and Unblock the Notifications