யாரோ கூடவே வருவா..? யாரு பாதியில் போவா? மேடையில் லிங்குசாமி செய்த செயல்! வைரலாகும் போட்டோஸ்
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் வரும் 'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல' பாடலைக் கேட்டாலே பலருக்கும் பழைய காதல் நினைவுகள் வந்துவிடும். அந்தப் பாடலுக்கு இப்போது இயக்குநர் லிங்குசாமி மேடையில் நடனமாடியிருப்பதுதான் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருக்கிறது. அவர் ஆடிய விதத்தைப் பார்த்ததும், அட நம்ம லிங்குசாமியா இது என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அழைப்பின் பேரில் லிங்குசாமி கலந்துகொண்டிருக்கிறார். அப்போது மேடையில் நடனமாடச் சொன்னதும், பெரிதாக யோசிக்காமல் களத்தில் இறங்கிவிட்டார். நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோரும் அவருடன் மேடையில் இருந்தனர். இவர்கள் முன்னிலையில் 'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல' பாடலுக்கு லிங்குசாமி ஆடிய வீடியோ இப்போது இணையத்தில் சுற்றி வருகிறது.
லிங்குசாமியின் டான்ஸ்
இது என்ன பெரிய நடன நிகழ்ச்சியா, ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பாராட்ட வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். ஆனால், இங்கே விஷயம் அதுவல்ல. சினிமாவில் இயக்குநராக பல நடிகர்களை வைத்து வேலை பார்த்தவரை, இப்படி மேடையில் ஜாலியாக ஆடுவதைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த சிலர் அவரது உற்சாகத்தை பாராட்ட, இன்னும் சிலர் டான்சே விமர்சித்தும் கருத்து சொல்லி வருகின்றனர். இதற்குப் பதிலளித்த லிங்குசாமி, தான் நடனப் பயிற்சி பெற்றவர் இல்லை என்றும், அந்த நிகழ்ச்சியில் ஜாலியாக ஆடினேன் என்றும் கூறியிருக்கிறார். அதாவது, இதை ஒரு பெரிய நடன போட்டி மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதுதான் அவரது பதிலின் சாரம்.

லிங்குசாமி ஸ்பெஷல்
லிங்குசாமியைப் பொறுத்தவரை, தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளையும் காதலையும் அதிரடியையும் கலந்து படங்களைக் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர். அவரது முதல் படமான ஆனந்தம் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை. அதன்பிறகு மாதவன் நடித்த ரன் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. விஷால் நடித்த சண்டக்கோழி படத்தை எடுத்துக்கொண்டால், கிராமத்து பின்னணியில் குடும் பாசத்தையும் அதிரடியையும் கலந்து கொடுத்திருப்பார். அந்தப் படத்தில் விஷாலின் கதாபாத்திரமும், எதிரிகளை எதிர்கொள்ளும் விதமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன.
தொடர்ந்து கார்த்தி நடித்த பையா படத்தின் மூலம் காதல், பயணம், பாடல்கள் என வேறொரு பாணியிலும் கவனம் ஈர்த்தார். இதனால் லிங்குசாமி படங்கள் என்றாலே ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருந்தது. கதையில் வேகம் இருக்க வேண்டும், காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்க வேண்டும், பாடல்களும் மனதில் நிற்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்திய படங்கள் பலருக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன.
வாரணம் ஆயிரம் பாடல்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் இன்றைக்கும் பலருடைய ஃபேவரிட் லிஸ்டில் இருக்கின்றன. அதில் 'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல' பாடலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அஞ்சல பாட்டுக்கு ஆட்டம்
கார்த்திக் குரலில், காதலில் விழுந்த ஒருவரின் மனநிலையைச் சொல்லும் இந்த பாடல், படத்தில் சூர்யா மற்றும் சமீரா ரெட்டியின் காதல் காட்சிகளுடன் இடம்பெற்றது. பாடலின் இசையும், வரிகளும், காட்சிகளும் சேர்ந்து இன்றைக்கும் அதை ரசிக்க வைக்கின்றன. வாரணம் ஆயிரம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், அதன் பாடல்களை இப்போதும் பலரும் கேட்டு ரசிக்கிறார்கள். அந்தப் பாடலுக்கு ஒருவர் நடனமாடினாலே பழைய காட்சிகளும் நினைவுகளும் மனதில் ஓடத் தொடங்கிவிடும். இப்போது லிங்குசாமி ஆடியிருப்பதும் அந்தப் பாடலின் பழைய வரவேற்பை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறது.




Click it and Unblock the Notifications
