துடிதுடிக்க போன உயிர்.. முதுகெல்லாம் கொப்புளம்.. ஏமாற்றி தப்பிச்சி ஓடி வந்தேன்! மதுரை முத்து எமோஷனல்
சென்னை: சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி டயலாக் மூலம் பிரபலம் அடைந்த மதுரை முத்து தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான தருணங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் தனது திறமையை வெளிப்படுத்தினால் எப்படியாவது வாழ்க்கையில் சாதித்து முன்னுக்கு வரலாம் என்பதற்கு பல பேரை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் பலருக்கும் பரிச்சயமான மதுரை முத்துவும் இருக்கிறார். நகைச்சுவை பேச்சாளராக இருக்கும் மதுரை முத்து மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார்.

டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டிருக்கும் மதுரை முத்து திருமண நிகழ்வுகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அது தவிர பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக மதுரை முத்து கலந்து கொள்ளும் நிலையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் மேடைகளில் ஒரு மணி நேரம் பேசினார் என்றால் அதில் எப்படியும் 25 முதல் 30 முறையாவது பார்வையாளர்களை தன்னுடைய காமெடியால் சிரிக்க வைத்து விடுகிறார். பலர் பேசும் மொக்கை காமெடிகளுக்கு கூட மதுரை முத்து தான் அடையாளமாக இருக்கிறார். அதனாலேயே மதுரை முத்து ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
மதுரை முத்து வெளியே சிரித்தபடி பலருடைய மனதை மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டிருந்தாலும் அவருடைய மனதிற்குள் பெரிய வருத்தமும் வேதனைகளும் மறைந்து இருப்பதாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் மதுரை முத்து பேசுகையில் என்னுடைய முதல் மனைவி இறந்து போனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நாங்க காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நான் வெளிநாட்டில் ஒரு ஈவண்டில் கலந்து கொள்வதற்காக போயிருந்தேன். அப்போது என்னுடைய மனைவி ஊருக்கு போய்க்கொண்டிருக்கும் போது கார் விபத்தில் மரணமடைந்து விட்டார். இந்த தகவல் எனக்கு தெரிய வந்ததும், என்னால் உடனடியாக அங்கிருந்து வர முடியாமல் இருந்தது.
என்னை கூட்டிட்டு போனவருக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்.. அப்போது எனக்கு அம்மை போட்டிருந்தது. முதுகெல்லாம் கொப்புளங்கள் இருந்தது. நல்ல வேலையாக முகத்தில் இல்லை, எனக்கு அம்மை போட்டு இருக்கிறது என்று சொன்னால் விமானத்தில் டிக்கெட்டு கிடைக்காது என்று அதை மறைத்து தான் நான் விமானத்தில் டிக்கெட் எடுத்து வந்தேன். 24 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்தேன்.
அந்த நேரத்தில் வீட்டில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எதுவும் தெரியாமல் நான் விமானத்தில் தவித்துக் கொண்டே இருந்தேன். அந்த மாதிரி வேதனையான நிமிடங்கள் யாருக்கும் வரவே கூடாது. இங்கே வந்து என்னுடைய மனைவியின் உடலைப் பார்த்து நான் வேதனையில் இருக்கும் போது என்னுடைய குழந்தைகளின் நிலை தான் எனக்கு பயமாக இருந்தது.
எப்படி இனி நான் இதிலிருந்து மீண்டு வர போகிறேன் என்ற ஒரு பயத்தில் தான் இருந்தேன். என்னுடைய மனைவிக்கு இறுதி நிகழ்வுகள் செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் சுடுகாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அங்கு ஒரு ஆக்சிடெண்ட் நடந்திருந்தது. அதில் சம்பவ இடத்திலேயே அம்மாவும் அப்பாவும் இறந்து போய்விட குழந்தைகள் மட்டும் இருந்தனர்.
எனக்கு அதை பார்க்கும்போது இதற்கு நம்முடைய நிலைமை எவ்வளவோ பெருசு.. நம்ம குழந்தைகளுக்கு அப்பா என்று நாமாவது இருக்கிறோம். ஆனால் அந்த குழந்தைகளுக்கு அப்பா கூட இல்லை என்று என்னுடைய மனதை தேற்றிக் கொண்டேன். அதுவரைக்கும் இந்த உலகத்திலேயே நமக்குத்தான் ரொம்ப கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு தான் நம்மை விட இந்த உலகத்தில் அதிகமானோர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்று அந்த பேட்டியில் எமோஷனலாக மதுரை முத்து பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications