நாய்களுக்காக குரல் கொடுக்கிறவங்க, இதை ஏன் பண்ணல? மக்கள் பிரச்சனையில் மௌனமா! டாக்டர் ஷர்மிளா ஆதங்கம்
சென்னை: சமீப காலமாகவே தெரு நாய் பற்றிய விவாதமும், பயமும் மக்கள் மனதில் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய் பற்றிய விவாதம் நடந்தது. அது இணையத்தில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் தெரு நாய் மற்றும் அதை ஆதரிப்பவர்கள் பற்றி டாக்டர் சர்மிளா பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
காலையில் வாக்கிங் போறதா இருந்தாலும் சரி, சாயங்காலம் குழந்தையை விளையாட அனுப்பறதா இருந்தாலும் சரி, இப்போ நம்ம மனசுல ஒரு பயம் வந்துட்டுப் போகுது. காரணம், தெருநாய்கள். பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத இந்த பிரச்சனை, இப்போ ஒரு இளம் உயிரைப் பறித்திருக்கிறது. சமீபத்தில், தெருநாய்கள் கடித்து ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தெருநாய்கள் தரும் தொல்லைகள்
தெருநாய்கள் தாக்குதல் என்பது வெறும் கடிப்பதோடு முடிந்து விடுவதில்லை. காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் பயப்படுவது, வயதானவர்கள் வாக்கிங் போகும்போது நாய்கள் துரத்துவது, இரு சக்கர வாகன ஓட்டிகள் திடீரென துரத்தப்படுவதால் விபத்தில் சிக்குவது என தினசரி வாழ்க்கையில் இந்த நாய்கள் மிகப்பெரிய தொல்லைகளைக் கொடுத்து வருகின்றன.
ஒருமுறை நாய் கடித்துவிட்டால், அதனால் ஏற்படும் காயங்கள் ஒருபக்கம் இருந்தாலும், ரேபிஸ் (Rabies) நோய் வந்துவிடுமோ என்ற பயம் மனதை வாட்டி எடுக்கும். அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் இலவச ஊசிகளும் கூட, பல நேரங்களில் கிடைப்பதில்லை. இதனால், சாதாரண மக்கள் படும் கஷ்டங்கள் ஏராளம்.
போராடும் மக்கள்
ஒரு உயிரே போன பிறகு, பொறுக்க முடியாத மக்கள், உடனடியாக சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். "எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரசாங்கம் உடனடியாக இதற்கு ஒரு தீர்வை சொல்ல வேண்டும்" என கோஷமிட்டனர். இந்த நேரத்தில், சிலர் "உங்களால தீர்வு சொல்ல முடியாதா? அப்படியென்றால், போராட்டம் எதற்காக?" எனப் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பேசியிருப்பது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷர்மிளா ஆதங்கம்
இந்தக் கருத்துக்குப் பதில் கொடுக்கும் விதமாக, நடிகையும் சமூகச் செயற்பாட்டாளருமான டாக்டர் ஷர்மிளா, தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் "நாய்களுக்கு சோறு போடுறீங்க சரி. ஆனா, அவங்க தெருவில் நடமாடி மனிதர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்துறாங்க. அதைத் தடுக்க நீங்க என்ன செய்யப் போறீங்க? தெரு நாய் கடியால் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண மக்கள் தான். துப்புரவு பணியாளர்கள், குழந்தைகள் மற்றும் உணவு சப்ளை பண்ணும் வேலை செய்பவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தானே தங்களுக்கு பாதுகாப்புக்காக முடிவெடுக்க முடியும். ஆனால் நாய் ஆதரவாளர்கள் அதை தடுப்பது சரி கிடையாது என்று பேசி இருக்கிறார்.
நாய்களுக்கு உணவு போடும் பல அமைப்புகளும், அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை. இந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் மௌனம் சாதிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீயா நானா விவாதம்
இந்தத் தெருநாய்கள் பிரச்சனை என்பது இப்போது வந்த ஒன்றல்ல. பல வருடங்களாகவே இந்த விவாதம் நடந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சியில் நடந்த 'நீயா நானா' நிகழ்ச்சியிலும், இந்த விவாதம் ஆழமாகப் பேசப்பட்டது. அதில், ஒருபக்கம் விலங்குகளின் உரிமைகளுக்காகப் பேசுபவர்களும், இன்னொரு பக்கம் மனிதர்களின் பாதுகாப்பிற்காகப் பேசுபவர்களும் காரசாரமாக விவாதித்தனர். ஆனாலும், எந்த ஒரு உறுதியான தீர்ப்பும் கிடைக்கவில்லை.
அரசாங்கம் இதுவரை இந்த பிரச்சனைக்கு எந்த ஒரு நிரந்தரத் தீர்வையும் வழங்காமல் இருப்பது, மக்கள் நம்பிக்கையில் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இப்போதாவது அரசாங்கம், மக்கள் போராட்டத்திற்கு செவிசாய்த்து, ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications