‘நீயா நானா’வில் நெகிழ வைத்த தர்மதுரை மருத்துவர்கள்! சோசியல் மீடியாவை கலக்கும் காரைக்குடி டாக்டர் குமரேசன்!
சென்னை: (Neeya Naana latest episode) விஜய் டிவியில் இந்த வாரம் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சி, வழக்கமான விவாதங்களைத் தாண்டி, சமூகத்தில் மௌனமாக சேவை செய்து வரும் மருத்துவர்களின் மனிதநேயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு சிறப்பு எபிசோடாக மாறியுள்ளது. "தர்மதுரை மருத்துவர்கள் மற்றும் பயனடைந்த மக்கள்" என்ற தலைப்பில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, ஒளிபரப்பான பிறகு சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்களில் காரைக்குடி மருத்துவர் டாக்டர் குமரேசன் குறித்து தான் அதிகமான பதிவுகள், பாராட்டுகள், நெகிழ்ச்சியான கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

டாக்டர் குமரேசனின் அடையாளம்
டாக்டர் குமரேசன் பற்றி பேசும் பலரும், அவரின் மருத்துவ அறிவை விட, எளிமையான குடும்ப பின்னணி மற்றும் தந்தை மீது அவர் வைத்திருக்கும் மரியாதை குறித்து அதிகமாக குறிப்பிடுகிறார்கள். தந்தையின் வழிகாட்டுதலை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்து, இன்று வரை ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை தொடர்ந்து செய்து வருவது தான் அவரை தனித்துவமாக காட்டுகிறது.
நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்த அனுபவங்கள், மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல; அது ஒரு சமூக பொறுப்பு என்பதையே உறுதிப்படுத்துவதாக இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனிதநேயத்துடன் சேவை செய்யும் அவரது அணுகுமுறை பார்வையாளர்களை ஆழமாக நெகிழ வைத்துள்ளது.
மற்ற மருத்துவர்களின் சேவை
இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த டாக்டர் பயாஸ் பாட்சா, இரவு நேரங்களில் வீட்டிற்கே சென்று வயதானவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போன்ற கடினமான சேவைகள் குறித்து பகிர்ந்தது பலரையும் பாதித்தது. வயது முதிர்ந்தவர்களை இரவிலும் தேடி சென்று சிகிச்சை அளிப்பது எவ்வளவு சவாலானது என்பதை அவர் சொன்ன விதம், மருத்துவர்களின் அர்ப்பணிப்பை உணர வைத்தது.
அதேபோல், வாழைப்பாடி டாக்டர் கமலக்கண்ணன், மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களின் சூழலை புரிந்து கொண்டு, அவர்களுக்காக நேரடியாக ரயில் நிலையம் வரை சென்று உதவிய அனுபவம் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும், சிவகங்கை பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஃபாரூக் அப்துல்லா, ஒரு சிறு குழந்தையின் வாழ்க்கையும், குடும்பத்தின் மரியாதையும் பாதிக்கப்படாத வகையில் ஒரு கடினமான சூழலை மிக நேர்த்தியாக கையாண்ட விதம் பாராட்டுகளை பெற்றது.
நிகழ்ச்சி ஒளிபரப்பானதும், "இன்னும் இப்படியான மருத்துவர்கள் நம்ம சமூகத்தில் இருக்கிறார்கள்" என்ற நம்பிக்கையை இந்த எபிசோட் கொடுத்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக டாக்டர் குமரேசன் குறித்த பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டு, அவருக்கு "ராயல் சல்யூட்" என ரசிகர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கோபிநாத்தின் கருத்து
நிகழ்ச்சியின் இறுதியில் தொகுப்பாளர் கோபிநாத் கூறிய ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது."தமிழகத்தில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சங்கிலித் தொடர் மெல்லியதாகி வருகிறது. அதை இன்னும் உறுதியாக்கவும், பாதுகாக்கவும் நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்" என்ற அவரது வார்த்தைகள், இந்த எபிசோடின் மைய கருத்தாக பலரால் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications