Parimala And Co Review: பரிமளா அண்ட் கோ படம் எப்படி இருக்கு? ரசிகர்கள், பிரபலங்கள் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் என்றாலே குடும்பம், உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கலந்த திரைக்கதைதான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். ஆனால் இந்த முறை தனது வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி, காமெடி, குடும்பம் மற்றும் கிரைம் சஸ்பென்ஸை ஒன்றாக கலந்து 'பரிமளா & கோ' திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, சாண்டி மாஸ்டர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் படத்தை பற்றி தங்களது கருத்துகளை (Parimala And Co Review) பகிர்ந்துள்ளனர்.

பாண்டிராஜ் இந்த முறை வேறு ரூட்டில்
'பசங்க', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை' போன்ற குடும்ப படங்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பாண்டிராஜ், இந்த முறை முற்றிலும் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்திருப்பதாக முதல் காட்சியை பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு சாதாரண குடும்ப கதையாக தொடங்கும் படம், போகப் போக எதிர்பாராத திருப்பங்களுடன் கிரைம் சஸ்பென்ஸ் கதையாக மாறுகிறதாம். குறிப்பாக ஒரு கொலை மர்மத்தை மையமாக வைத்து நகரும் திரைக்கதை, இறுதிவரை பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது என்கிறார்கள்.
சிரிக்க வைக்கும் படம்
படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முதலில் குறிப்பிட்டது அதன் நகைச்சுவை பற்றித்தான். ஒரு ரசிகை கூறுகையில், "வழக்கமான பாண்டிராஜ் படம் மாதிரி இல்லை. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை காமெடி இருக்கு. சிரித்துக்கொண்டே இருந்தேன். அதே நேரத்தில் சஸ்பென்ஸையும் கடைசிவரை காப்பாற்றியிருக்கிறார்" என்று பாராட்டியுள்ளார்.
மற்றொரு ரசிகை, "குடும்ப படம் என்று நினைத்து வந்தோம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. அந்த ட்விஸ்ட் கடைசி வரை தெரியவில்லை. அதுதான் படத்தின் பெரிய பலம்" என தெரிவித்துள்ளார்.

படத்தின் ஹைலைட்
படத்தின் மிகப்பெரிய பலமாக ஜெயராம் மற்றும் ஊர்வசியின் நடிப்பு பார்க்கப்படுகிறது. இருவரும் கணவன்-மனைவி கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருப்பதோடு, அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் அரங்கையே சிரிப்பில் ஆழ்த்துவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி திரையில் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளது.

சாண்டி மாஸ்டர் கொடுத்த சர்ப்ரைஸ்
இதுவரை நடன இயக்குநராகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் பார்த்த சாண்டி மாஸ்டர், இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது கேரக்டர் படம் முழுவதும் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், ரசிகர்களுக்கு எதிர்பாராத அனுபவத்தை கொடுக்கும் என்றும் முதல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
பாபநாசம் இல்லை
சில ரசிகர்கள் இந்த படத்தை 'பாபநாசம்' போன்ற திரில்லர் படங்களுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் குடும்ப பின்னணியில் நகரும் கதைக்குள் சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் அம்சங்களை இணைத்த விதம் பாராட்டுக்குரியது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாண்டிராஜுக்கு கம்பேக் கொடுக்குமா?
சமீப காலமாக கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்த பாண்டிராஜுக்கு, 'பரிமளா & கோ' முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.
முதல் காட்சியை பார்த்தவர்களின் கருத்துகளை பார்க்கும்போது, படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக குடும்ப ரசிகர்களையும், சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தும் முயற்சியாக இந்த படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், "குடும்ப படம் பார்க்க போன ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் விருந்து கொடுக்கிறார் பாண்டிராஜ்" என்பதே 'பரிமளா & கோ' படத்தின் முதல் காட்சியை பார்த்தவர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
இப்போது ப்ரீவ்யூ ஷோவில் கிடைத்த இந்த பாசிட்டிவ் விமர்சனங்கள், நாளை திரையரங்குகளிலும் தொடருமா என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications