Rajinikanth: கமல்-ரஜினி காம்போ உறுதி!’ - ஆனாலும் லோகேஷ் கனகராஜ் இல்லை? ரஜினிகாந்த் உடைத்த ரகசியம்
சென்னை: தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரண்டு தூண்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி, சினிமா உலகை உலுக்கியுள்ளது. ஆனால், அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை இன்னும் உறுதியாகவில்லை என்று ரஜினி அளித்த புதிய அப்டேட், ரசிகர்களை மகிழ்ச்சி கலந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகின் அசைக்க முடியாத தூண்கள்
எண்பதுகளின் தொடக்கத்தில், தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் ஆதிக்கம் ஆரம்பித்தது. ஆரம்ப காலங்களில் இருவரும் 16 வயதினிலே, மூன்று முடிச்சு, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் தனித்தனி பாதைகளில் பயணிக்கத் தொடங்கினர்.
கமல் தனது நடிப்பில் புதுமைகளைப் புகுத்தி, டெக்னாலஜியைப் பயன்படுத்திப் பயணித்தார். ரஜினி தனது ஸ்டைல் மற்றும் பன்ச் டயலாக்குகள் மூலம் கமர்சியல் பாதையில் வெற்றிபெற்றார். இருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உருவானாலும், ஒருவருக்கொருவர் எப்போதும் பரஸ்பர மரியாதையும், அன்பும் கொண்டவர்கள். "நான் ரஜினியின் ரசிகன்" என்று கமல் பலமுறை பெருமையாகக் கூறியிருக்கிறார். அதேபோல, ரஜினியும் கமலின் நடிப்பையும், அவருடைய அர்ப்பணிப்பையும் பலமுறை பாராட்டி பேசியுள்ளார்.
கூலியை விட பிரம்மாண்டம்
தங்கள் பாதையில் உச்சம் தொட்ட நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர். கடந்த சில மாதங்களாக, கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினி-கமல் இணைவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் என்றும், இது விக்ரம் மற்றும் கூலியை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்றும், தமிழ் சினிமாவின் முதல் ரூ.1000 கோடி படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வந்தனர்.
மௌனம் கலைத்த ரஜினி
சமீபத்தில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழாவில், அமரன் படத்திற்காகக் கமலுக்கு விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அவரிடம் ரஜினி-கமல் கூட்டணி குறித்துக் கேட்கப்பட்டபோது, "நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறோம்" என்று உறுதி செய்தார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்குச் சென்றனர். ஆனால், சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இந்த எதிர்பார்ப்புகளுக்குப் பதில் அளித்தார். அவர், "அடுத்ததாக நானும் கமலும் இணைந்து நடிக்க ரெடி ஆகிட்டோம். ஆனால் அதற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை. ரெண்டு பேரும் இணைந்து நடிக்கணும்னு ஆசை. அதற்கான சரியான கதை, கதாபாத்திரம் அமையணும். அமைந்தவுடன் நடிக்கிறேன். ஆனால் அந்த பிளான் இருக்கு. கதை, கதாபாத்திரம் இன்னும் ஃபிக்ஸ் ஆகவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.
ரஜினியின் இந்தப் பேச்சிலிருந்து, கூலி படத்திற்கு வந்த விமர்சனங்களால் அவர் லோகேஷ் கனகராஜை இயக்குநராகத் தேர்வு செய்வதில் இருந்து பின்வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், இந்த இரண்டு ஜாம்பவான்கள் மீண்டும் இணைந்து திரையில் தோன்றுவது உறுதி என்பது, ரசிகர்களின் நீண்ட கால கனவை நனவாக்குவதாகவே உள்ளது. சரியான கதை அமைந்து, அவர்களின் அற்புமான கூட்டணி திரையில் அரங்கேறினால், அது தமிழ் சினிமாவிற்கான ஒரு பொக்கிஷமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications