முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவின் சர்ச்சைக்குரிய ராப் பாடகராகவும், அதே நேரத்தில் இளைஞர்களின் குரலாகவும் பிரபலமான வேடன் மீண்டும் செய்தித் தலைப்புகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவை நேரில் சந்தித்து தனது வேதனைகளை பகிர்ந்த வேடன், தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருத்துகளால் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

பாடல்களை பாடியதற்காகவே தொடர்ந்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், கலைஞர்களின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி வன்னி அரசுவிடம் நேரில் முறையிட்டிருந்தார் வேடன். அந்த சந்திப்பின்போது அமைச்சர் அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு, அவருடன் வந்த நண்பர்களுக்கும் சிற்றுண்டி வழங்கி நீண்ட நேரம் கலந்துரையாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

Vedan Vijay Tamil Nadu Politics Vanni Arasu

முதல்வர் விஜய் பற்றி கருத்து

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேடனிடம், "முதல்வர் விஜய்யின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

"விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் சமத்துவத்தையும் மக்களின் உரிமைகளையும் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. அவருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் அவரது ஆட்சியை மதிப்பிட முடியும்" என்று அவர் தெரிவித்தார். வேடனின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாட்டுக்கறி சாப்பிடுவேன்

அதே செய்தியாளர் சந்திப்பில் நடந்த மற்றொரு சம்பவமும் கவனம் ஈர்த்தது. பேட்டி முடிந்ததும், "நான் சாப்பிட போகிறேன்" என்று வேடன் கூறினார். உடனே செய்தியாளர்கள், "என்ன சாப்பிட போறீங்க?" என்று கேட்டனர். அதற்கு அவர், "நான் காலையிலும் மாலையிலும் மாட்டுக்கறி சாப்பிடுவேன். எனக்கு அது பிடிக்கும். அதனால் சாப்பிடுவேன்" என்று வெளிப்படையாக கூறினார்.

சில மாநிலங்களில் மாட்டிறைச்சி தொடர்பாக கட்டுப்பாடுகள் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "நான் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறேன். எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை சாப்பிடுவேன். அதை மற்றவர்கள் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன். அதேபோல் மற்றவர்கள் சொல்வதற்காக என் உரிமையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்.

இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை உருவாக்கியுள்ளது.

சந்திப்பு காரணம்?

வேடன் தனது வன்னி அரசு சந்திப்பு குறித்து மேலும் விளக்கம் அளிக்கும்போது, இலங்கையில் சமீபத்தில் ஒரு பாடகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாக கூறினார்.

"பாடல்களை பாடியதற்காகவே கலைஞர்கள் கைது செய்யப்படுவது கவலை அளிக்கிறது. அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகவே நான் இந்த விஷயத்தை வன்னி அரசுவிடம் எடுத்துச் சொன்னேன்" என்றார்.

சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல வேடன்

வேடன் இன்று பேசப்படும் பெயராக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைகளின் மையமாக இருந்து வருகிறார். முன்னதாக ஒரு பெண் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அவரது பெயர் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அவர் அணிந்திருந்த செயினில் சிறுத்தை பல் இருந்ததாகவும் மற்றொரு சர்ச்சையும் எழுந்தது.

இந்த சம்பவங்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தாலும், வேடன் தொடர்ந்து தனது இசை மற்றும் சமூக கருத்துக்களின் மூலம் கவனம் பெற்று வருகிறார்.

ஆதரவா? எதிர்ப்பா?

வேடனின் சமீபத்திய கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் கிடைத்து வருகின்றன. ஒரு தரப்பினர், "கருத்து சுதந்திரம் குறித்து அவர் பேசுவது சரிதான்" என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், "எப்போதும் சர்ச்சையான விஷயங்களில்தான் வேடன் பேசுகிறார்" என்று விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் ஆதரவு, எதிர்ப்பு எதுவாக இருந்தாலும், கேரளாவைச் சேர்ந்த இந்த ராப் பாடகர் தற்போது தமிழக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

வன்னி அரசு சந்திப்பு, விஜய் குறித்து கூறிய கருத்து, மாட்டிறைச்சி விவாதம், கருத்துச் சுதந்திரம் குறித்த பேச்சு என ஒரே பேட்டியில் பல்வேறு விவாதங்களை கிளப்பிய வேடன், மீண்டும் இணையத்தின் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+