நான் இறந்தால் அதற்கு காரணம் அந்த குடும்பம் தான்! ஆர்த்தி ரவி பெயரை சொல்லாமல் ரவி மோகன் ஆதங்கம்
சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. மனைவி ஆர்த்தி ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை அமைதியாக இருந்த ரவி மோகன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து தனது மன வேதனைகளை வெளிப்படையாக பகிர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேட்டியில் வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், தற்போதைய மனநிலையால் சினிமாவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். "எனக்கு விவாகரத்து முடியும் வரைக்கும் இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை. மனரீதியாக நான் முற்றிலும் சோர்ந்துபோயிருக்கிறேன். நான் நடிகன் தான். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் நடிக்க முடியாது.

நடிகர் ரவி மோகன் வேதனை
கேமரா முன்னால் சந்தோஷமாக நடிப்பது போல காட்டிக்கொள்ள என்னால் முடியவில்லை. மனசுக்குள் இவ்வளவு வேதனை இருக்கும்போது நான் எப்படி வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியும்?" என்று வேதனையுடன் கூறினார். இதுவரை தன்னைப் பற்றிய பல விமர்சனங்கள் வந்தபோதும் அமைதியாக இருந்தது தான் தன்னுடைய தவறு என்றும் அவர் பேசி இரக்கிறார்.
"நான் அமைதியாக இருப்பதால்தான் எல்லோரும் என்னை வைத்து கேம் விளையாடினார்கள். நான் ரொம்ப சாதுவானவன், எதையும் தாங்கிக்கொள்வேன் என்று நினைத்தார்கள். ஆனால் நானும் ஒரு மனிதன் தான். எனக்கும் எல்லைகளிருக்கிறது," என்று கூறினார்.
ரவி மோகன் உருக்கம்
பேட்டியின் போது மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு விஷயத்தை ரவி மோகன் பேசினார், "நான் ஏற்கனவே ஒரு முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறேன். என் குழந்தைகளைப் பார்க்க முடியாத வேதனை என்னை அந்த நிலைக்கு கொண்டு சென்றது," என்றார்.
தொடர்ந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய அவர், "ஒருநாள் எல்லாரும் இறக்கவே போகிறோம். நானும் ஒருநாள் இறந்து போவேன். ஆனால் அதற்கு முன்பு என்னுடைய வாழ்க்கையை அழிக்க நினைத்தவர்கள் யார் என்பதை உலகத்துக்கு தெரியப்படுத்திவிட்டு தான் நான் போவேன்," என்று கோபத்துடன் தெரிவித்தார்.
கண் கலங்கிய ரவி மோகன்
அதோடு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், "எனக்கோ அல்லது சைபர் புல்லிங் காரணமாக சென்னையை விட்டே போன கெனிஷாவுக்கோ ஏதாவது ஆகிவிட்டால், அதற்குப் பொறுப்பு யார் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்," என்ற வகையில் மறைமுக குற்றச்சாட்டையும் முன்வைத்ததாக பேசப்படுகிறது.
பெயரை நேரடியாக சொல்லாத போதிலும், இந்த கருத்து ஆர்த்தி ரவியின் குடும்பத்தை நோக்கி இருந்ததாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. கெனிஷா தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கும் அவர் விளக்கம் அளித்தார். "என்னை சரியாக புரிந்து கொண்டவர் அவர். நான் ஏன் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வர விரும்பினேன் என்பதை புரிந்து கொண்டு மனிதநேயத்துடன் நடந்துகொண்டார்.
ஆனால் அந்த உறவையே கேவலமாக பேசிவிட்டு அவரை சென்னையை விட்டு கிளம்பும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்," என்று ஆதங்கத்துடன் கூறினார். தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய அவர், "அந்த உறவை காப்பாற்ற நான் எவ்வளவு முயற்சி செய்தேன் என்பது யாருக்கும் தெரியாது. என் முன்னாள் மனைவியின் குடும்ப மரியாதைக்காக ஒரு மனிதரின் காலில் விழுந்தேன். அந்த வீட்டில் இன்னொரு விவாகரத்து நடக்கக்கூடாது என்று நான் நினைத்தேன். ஆனால் இறுதியில் நான் மட்டுமே காயமடைந்தேன்," என்று கண்ணீருடன் கூறினார்.
குழந்தைகள் பற்றி வருத்தம்
அதேபோல் தனது குழந்தைகள் குறித்து பேசும்போது ரவி மோகன் முற்றிலும் உடைந்து போனார். "என் பசங்களைக் கூட பார்க்க முடியவில்லை. போனில் பேச முடியவில்லை. ஸ்கூலுக்கு போய் பார்க்க முயற்சித்தாலும் தடுக்கிறார்கள். என் உலகமே என் பசங்கதான். அவர்களுக்காக 50 லட்சம் ரூபாய் கட்டி படிக்க வைக்கிறேன். இதையெல்லாம் பாசம் இல்லாமல் செய்வேனா?" என்று கண்கலங்கினார்.
மேலும், "எனக்கு 45 வயதாகிறது. நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. இந்த வயதில் ஒரு பெண்ணின் அழகைப் பார்த்து பின்னால் போகும் மனிதனா நான்? அப்படி இருந்தால் சினிமாவில் வேலை செய்த இந்த பல வருடங்களில் ஏன் அப்படி செய்யவில்லை?" என்று தன்மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்தார்.
ரவி மோகனின் இந்த கண்ணீரும் கோபமும் கலந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த அவர் தற்போது தன்னுடைய தரப்பை முழுமையாக வெளிப்படையாக சொல்லத் தொடங்கியிருப்பதால், இந்த குடும்ப சர்ச்சை இன்னும் எத்தனை புதிய திருப்பங்களை எடுக்கப் போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications