ரோபோ சங்கர் தாத்தா சுபாஷ் சந்திரபோஸ் படையில் பதக்கம் வாங்கியவர்! மாமியாரும் இவ்வளவு பெரிய பிரபலமாம்!
சென்னை: தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். சில நாட்களுக்கு முன்பு அவர் உடல்நிலை குறைபாடு காரணமாக திடீரென காலமானார். அது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், அவரது அண்ணன் சிவகாசி சிவா ஒரு பேட்டியில், ரோபோ சங்கர் பற்றியும் அவரது குடும்ப பின்னணி பற்றியும் இதுவரை வெளிவராத பல தகவல்களைக் கூறியுள்ளார்.
பல்லாயிரம் உணர்வுகளை வெளிப்படுத்திய மனிதன்
சிறுசிறு வேடங்களில் பல படங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், அதன்பிறகு காமெடி கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். நடிகர் தனுஷுடன் மாரி, விஷ்ணு விஷாலுடன் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், அஜித்துடன் விஸ்வாசம் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். மாரி மற்றும் மாரி 2 ஆகிய படங்களில், நாயகன் தனுஷை விடவும் அதிகமாக ஸ்கோர் செய்தவர் ரோபோ சங்கர். அதற்கான சுதந்திரத்தை தனுஷ் அவருக்குக் கொடுத்திருந்தார். அதேபோல், வாய் மூடி பேசவும் திரைப்படத்தில் ஒரு குடிகாரராக நடித்து அசத்தியிருப்பார்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இருந்தே ரோபோ சங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று அவரது அண்ணன் கூறியுள்ளார். ஆளவந்தான் படத்தில் வரும் "கடவுள் பாதி மிருகம் பாதி" பாடலுக்கு மேடையில் நடனமாடுவதற்காக மொட்டை அடித்துக்கொண்டு நடித்தார். இதுவே, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கக் காரணமாக அமைந்தது.
ரோபோ சங்கர் குடும்ப பின்னணி
ரோபோ சங்கரின் அண்ணன் சிவகாசி சிவா அவர்களின் குடும்ப பின்னணி பற்றிப் பேசியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. "எங்களது பூர்வீகம் காரைக்குடி அருகில் உள்ள ஒரு கிராமம். 70-களில் நாங்கள் மதுரைக்கு வந்துவிட்டோம். அங்குதான் சங்கர் பிறந்தான். சங்கராந்தி அன்று பிறந்ததால், என் தாத்தா அவனுக்கு சங்கர் என்று பெயர் வைத்தார். சங்கருக்கு 6 வயது இருக்கும்போது என் அப்பா இறந்துவிட்டார்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
மேலும், அவர்களின் குடும்பத்தில் இருக்கும் சினிமா திறமை குறித்தும் கூறியுள்ளார். "எங்கள் தாத்தா மிக பெரிய மேடை நாடகக் கலைஞர் மற்றும் பாடகர். அவர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி, தாமரைப்பட்டயம் வாங்கியவர்" என்று சொன்னது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த திறமைகள்தான் ரோபோ சங்கர் மூலமாக வெளி வந்துள்ளன.
அதேபோல், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் குடும்பமும் சினிமா துறையுடன் தொடர்புடையது. "பிரியங்காவின் அப்பா இளையராஜாவின் அண்ணன் பாவலருடன் இருந்தவர். அதேபோல், அவரது அம்மா சினிமாத்துறையில் காஸ்டியூம் டிசைனராக பல நடிகைகளுடன் பணிபுரிந்தவர். எனது அத்தை கே.பி.சுந்தராம்பாளுடன் பணியாற்றியவர்" என்று சிவகாசி சிவா கூறியுள்ளார்.
அந்தக் குடும்பம் படும் துயரம்
நடிகர் ரோபோ சங்கர் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காலமானார். அதற்குப் பிறகு அவரது குடும்பம் படும் துயரம் மிகவும் உருக்கமானது. ஒரு கலைஞனாக அவர் பலரையும் சிரிக்க வைத்தார். ஆனால், இப்போது அவருடைய குடும்பம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கிறது. குறிப்பாக, அவரது மனைவி பிரியங்கா பல இடங்களிலும் ரோபோ சங்கர் மீது தனக்கு இருக்கும் காதலை தெரியப்படுத்தி இருக்கிறார். ஆனால் இப்போது ரோபோ சங்கர் உயிரோடு இல்லாமல் இருக்கும் நிலையில் பிரியங்காவின் நிலைமையை நினைத்துதான் பலரும் வேதனைப்படுகிறார்கள்.
ரோபோ சங்கரின் வாழ்க்கை ஒரு சாதாரண மனிதனின் வெற்றிக் கதை. அவர் ஒரு பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து வரவில்லை. தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இந்த உயரத்திற்கு வந்தவர். அவரது குடும்பம் தந்த கலை ஆர்வமும், பாரம்பரியமும் அவரை ஒரு சிறந்த கலைஞராக மாற்றி இருந்தது. ஆனாலும் இப்போது அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் விரைவில் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications