Ronth Review: போலீசுடன் ஒரு நாள் இரவு முழுக்க பயணிக்கும் அனுபவம்! ரோந்து ஓடிடி விமர்சனம்
சென்னை: ஹாட்ஸ்டாரில் (Hotstar) தற்போது தமிழ் டப்பிங்கில் ஒளிபரப்பாகும் "ரோந்து" (Ronth) மலையாள திரைப்படம், ஒரு மிகச்சிறந்த மற்றும் உணர்வுப்பூர்வமான போலீஸ் டிராமா எனப் பலராலும் பாராட்டப்படுகிறது. இரு போலீசார் ஒரு இரவு முழுக்க தங்களது ரோந்து பணியில் சந்திக்கும் நிகழ்வுகள்தான் கதை என்று கேட்கும்போது சாதாரணமாகத் தெரியலாம், ஆனால் அவர்கள் கூடவே அந்த இரவு முழுக்க ஜீப்பில் பயணித்த அனுபவத்தை கடத்தியதுதான் படத்தின் பக்கா சக்சசுக்கு காரணம்.

கதையின் கரு மற்றும் இயக்கம்
இயக்குநர் ஷாஹி கபீர், ஒரு முன்னாள் காவல் அதிகாரியாக இருந்ததால், காவல் துறையின் உண்மையான உலகத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். இத்திரைப்படம் ஒரு மூத்த காவல் அதிகாரி யோஹானன் (திலீஷ் போத்தன்) மற்றும் ஒரு புதிய இளம் காவலர் தீனநாத் (ரோஷன் மேத்யூ) ஆகியோரின் ஒரு இரவு ரோந்துப் பணியைச் சுற்றி நிகழ்கிறது. போலீஸ் ஸ்டோரி என்றதும் வழக்கமான மலையாள த்ரில்லர் போல என நினைத்துவிட வேண்டாம். இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர் அல்லது ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல், காவல்துறையினரின் அன்றாடப் பணிச்சுமை, சவால்கள் மற்றும் மனப் போராட்டங்களை யதார்த்தமாக ரசித்து பார்க்குப்படி இப்படம் காட்டுகிறது.

நடிகர்களின் சிறப்பான நடிப்பு
திலீஷ் போத்தன் மற்றும் ரோஷன் மேத்யூ ஆகிய இருவரின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். அனுபவமிக்க சப் இன்ஸ்பெக்டராக திலீஷ் போத்தனும், நேர்மையான, உணர்ச்சிவசப்படக்கூடிய இளம் கான்ஸ்டபிளாக ரோஷன் மேத்யூவும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர். இவர்களின் நடிப்பு, காவல் அதிகாரிகளின் உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறது. படம் பல விஷயங்களை போகிற போக்கில் பகடி செய்கிறது. கிறிஸ்தவ மதமாற்றம், கம்யூனிஸ்ட் மற்றும் போலீஸ் இடையே கேரளாவில் உள்ள உரசல் ஆகியவற்றை பகடி செய்யும் பாணியில் காட்சிக்கு உள்ளே நுழைத்துள்ளார் இயக்குநர்.
படத்தின் சிறப்பம்சங்கள்
- யதார்த்தமான சித்தரிப்பு: மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமல், ஒரு காவல் அதிகாரியின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டியிருப்பது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
- உணர்வுப்பூர்வமான கதைக்களம்: வெறும் குற்றப் பின்னணிக் கதையாக மட்டும் இல்லாமல், மனிதம், கடமை, மற்றும் மனசாட்சி போன்ற விஷயங்களை ஆழமாக அலசுகிறது.
- தொழில்நுட்ப நேர்த்தி: இரவு நேரத்தின் சூழலை நேர்த்தியாகப் படம்பிடித்த ஒளிப்பதிவும், கதைக்கு வலு சேர்க்கும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், "ரோந்து" திரைப்படம் வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமல்ல, காவல் துறையினரின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள வைக்கும் ஒரு சிந்தனைக்குரிய படைப்பாகும். காவல்துறை என்றால் ஏதோ எதிரி அல்ல, அவர்களும் பிற அரசு ஊழியர்களைப் போலத்தான் பல சிரமங்களை சந்திக்கிறார்கள், ஒருவரிடம் பணத்தை வாங்கினால் கூட அது போலீஸ் வண்டியை சரி செய்ய அரசு பணம் கொடுக்காததன் விளைவாகத்தான் இருக்கும் என்பது போன்ற பல யதார்த்தங்களை படம் படம்பிடித்துக் காட்டுகிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படத்தில் ஒன்று.












Click it and Unblock the Notifications