மகிழ்ச்சியில் சினிமா துறை.. 100 ஏக்கர் நிலம் குத்தகை.. ரூ.180 கோடியா .. இதை செய்தாலே போதுமே: பிரபலம்
சென்னை: "நடிகர் சங்கம், பெப்சி, சின்னத்திரை சங்கம், என எல்லாருமே பையனூரில் வீடு கட்டிக் கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை கட்டமைத்து கொண்டுபோய் வீடுகளை கட்ட போவது யார் என்பதுதான் கேள்விக்குறி... எனவே, பெப்சி, நடிகர் சங்கம், சின்னத்திரை சங்கம் என எல்லாரும் உட்கார்ந்து பேசினால், நல்ல முடிவு கிடைக்கும்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
சென்னையை அடுத்துள்ள பையனூரில் கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் திரைப்படத்துறையினருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டது. இருந்தாலும், அடுத்த 3 வருடங்களுக்குள் அங்கு வீடுகள் கட்டாததால் அதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து திரைத்துறையினர் மறுபடியும் அந்த அரசாணையைப் புதுப்பிக்க திமுக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
90 ஏக்கர்,180 கோடி ரூபாய்
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அனைத்து திரைப்பட கலைஞர்களும் பயன்பெறும் வகையில், சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் குத்தகைக்கு 99 ஆண்டுகளுக்குக் கலைஞரால் வழங்கப்பட்டது.
கலைஞர் குத்தகைக்கு வழங்கிய 90 ஏக்கர் இடத்தில் இன்றைய மார்க்கெட் மதிப்பு 180 கோடி ரூபாய் ஆகும். தற்போது அதே இடத்தை திரைப்படத்துறையினரின் நலன் கருதி மீண்டும் திரைப்படத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.. இதில் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தினர், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம். இதனால் 40 ஆயிரம் கலைஞர்கள் பயனடையவுள்ளனர்" என்று கூறியிருந்தார்.
அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
நேற்றைய தினம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.. பிறகு, செய்தியாளர்களிடம் பேசும்போது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள பையனூரில் 100 ஏக்கர் நிலத்தை 2010ம் ஆண்டு அன்றைய முதல்வர் மு. கருணாநிதி வழங்கினார். அரசாணையை ஏற்கனவே இருந்தது போலவே புதுப்பித்து தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.
இந்நிலையில், King 24x7 யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "திரைப்பட தொழிலாளர்களுக்கென்று வீடுகள் இல்லை.. ஆரம்பத்தில் வேளச்சேரியில் ஒதுக்கப்பட்டது.. ஆனால், வேளச்சேரி நீண்ட தூரத்தில் இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.. அந்த நேரத்தில், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்க தலைவர்களாக இருந்தனர்.
பையனூர் ஷூட்டிங் ஸ்பாட்
பிறகு, பையனூர் 90 ஏக்கர் நிலத்தை, அப்போதைய முதல்வர் டாக்டர் கலை திரைப்பட கலைஞர்களுக்காக வழங்கினார். அதற்கு பிறகும் அந்த இடம் சும்மாவே கிடந்தது. யாரும் அங்கு சென்று வீடுகள் கட்டவில்லை. ஏனென்றால், திரைப்பட தொழிலாளர்கள் அந்த இடத்தில் முதலீடு செய்வதற்கு விரும்பவில்லை. அதன்பிறகு ரூ.50 கோடியை, முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார்.
அந்த அடிப்படையில் பெப்சி தலைவர் செல்வமணி, பையனூரில் பிரம்மாண்டமான சினிமா செட் போட்டார்.. அந்த செட்டில் பல படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.. சமீபத்தில் விஜய்யின் படப்பிடிப்பும் அங்குதான் நடந்தது. அதே இடத்திலிருந்து சற்று தள்ளி குத்தகைக்கு வாங்கி, கலைப்புலி தாணு, ஒரு செட் போட்டிருக்கிறார்.. அவர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு, குத்தகையை பெப்சிக்கு தந்துவிடுகிறார்.
நிலம் குத்தகை புதுப்பிப்பு
இந்த சூழலில், பையனூர் நிலம் குத்தகை முடியும் தறுவாயில் இருந்தது. எனவே, பெப்சி செல்வமணி உட்பட அனைவரும் மாண்புமிகு முதல்வரைசந்தித்தன் அடிப்படையில், 90 ஏக்கர் நிலத்தை ஒரு வருடத்துக்கு 1000 ரூபாய் லீசுக்கு தமிழக அரசு, 99 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தந்துள்ளது. இந்த அறிவிப்பை மாண்புமிகு முதல்வர் சார்பாக உதயநிதி அறிவித்துள்ளார்.
நடிகர் சங்கம், பெப்சி, சின்னத்திரை சங்கம், என எல்லாருமே இங்கு வீடு கட்டிக் கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால், இதை கட்டமைத்து கொண்டுபோய் வீடுகளை கட்ட போவது யார் என்பதுதான் கேள்விக்குறி... எனவே, பெப்சி, நடிகர் சங்கம், சின்னத்திரை சங்கம் என எல்லாரும் உட்கார்ந்து பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications