சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த படம் என்ன ஆச்சு? பிக் பாஸில் ஏஆர் முருகதாஸை அசிங்கப்படுத்திய சல்மான்கான்
சென்னை: தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் அதே பிரபலம், இந்தியிலும் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கிறது. பிக் பாஸ் மேடை எப்போதுமே பஞ்சாயத்துகளுக்கும், பிரபலங்களின் கருத்து மோதல்களுக்கும் பெயர் போனது. இந்த முறை, சல்மான் கான் நேரடியாகத் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸைப் பொதுவெளியில் கிண்டலடித்துப் பேசியது, இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். அவர், 'தீனா' (2001) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்தின் 'சந்திரமுகி' படத்துக்குக் கதை எழுதியது உட்பட, 'கஜினி', 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' போன்ற தொடர் அதிரடி மற்றும் மெசேஜ் படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளார். இவர் இயக்கிய பல படங்கள், கோலிவுட்டில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடித்தவை.

தமிழில் மட்டுமல்லாமல், அமீர்கான் நடிப்பில் வெளியான 'கஜினி' மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ஹாலிடே' (Holiday) போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டிலும் வெற்றியைப் பதிவு செய்தவர் முருகதாஸ். இத்தகைய பின்னணியைக் கொண்ட முருகதாஸ், சல்மான் கானை இயக்கியபோது சந்தித்த சவால்கள்தான் இப்போது பொதுவெளியில் விவாதமாக மாறியுள்ளது.
சிக்கந்தர் பற்றிய வாக்குவாதம்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் தோல்வியைச் சந்தித்தது. படத்தின் தோல்விக்குப் பிறகு, ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட முருகதாஸ், ஷூட்டிங் அனுபவங்கள் பற்றி மனம் திறந்து பேசினார்.
முருகதாஸ் கூறியது:
"ஒரு பெரிய நட்சத்திரத்துடன் ஷூட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அவர் (சல்மான் கான்) இரவு 8 மணிக்குத்தான் செட்டிற்கு வருவார். அதனால் பகல் காட்சிகளைக்கூட நாங்கள் இரவு நேரத்தில்தான் படமாக்க வேண்டியிருந்தது. தமிழ் திரையுலகில் அதிகாலையிலேயே படப்பிடிப்புகளைத் தொடங்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பாலிவுட்டில் நட்சத்திரங்களின் நேரத்திற்கு ஏற்ப ஷூட்டிங் அட்டவணை மாறும்."
இதன் காரணமாக, மற்ற நடிகர்களுக்கும், படக்குழுவுக்கும் சிரமம் ஏற்பட்டதாகவும், குறிப்பாக, பள்ளி முடிந்து வரும் காட்சியைக்கூட நள்ளிரவு 2 மணிக்குத்தான் படமாக்க வேண்டி வந்ததால், குழந்தைகள் சோர்வடைந்து தூங்கிவிட்டார்கள் என்றும் முருகதாஸ் வேதனையுடன் தெரிவித்தார். ஆனாலும், படத்தின் தோல்விக்குப் "நான்தான் முழு பொறுப்பு. நான் நினைத்த கதையைச் சரியாகத் திரையில் கொண்டு வரத் தவறிவிட்டேன்" என்றும் கூறி, பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பிக் பாஸ் மேடையில் சல்மான் கானின் கிண்டல்
முருகதாஸின் இந்தக் கருத்துகள் சல்மான் கானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது போலத் தெரிகிறது. பிக் பாஸ் மேடையில் பேசிய சல்மான் கான், முருகதாஸின் கருத்துக்குக் கிண்டலாகப் பதிலடி கொடுத்தார்: "சமீப காலங்களில் எந்தப் படத்திலும் நடித்ததற்கு வருத்தப்படவில்லை. மக்கள் 'சிக்கந்தர்' படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள், ஆனால் நான் அதை நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது. அப்படத்தின் இயக்குநர் நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன். அதுதான் பிரச்சனைகளை உருவாக்கியது என்றார்.
"ஆனால் அவர் 'மதராஸி' என்ற ஒரு படம் எடுத்தார். அதில் நடித்த ஹீரோ (சிவகார்த்திகேயன்) காலை 6 மணிக்கு எல்லாம் வந்துவிடுவார். அதான் அந்தப் படம் 'சிக்கந்தரை' விட பெரிய பிளாக் பஸ்டர் ஆகிவிட்டது" என்றார்.
உண்மையில், முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கிய 'மதராஸி' திரைப்படம், சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படமாகப் பார்க்கப்பட்டாலும், அது பெரும் தோல்வியை சந்தித்ததுதான் உண்மை. தோல்வி அடைந்த ஒரு படத்தைக் குறிப்பிட்டு, அது 'சிக்கந்தரை' விட பெரிய வெற்றி பெற்றது என்று சல்மான் கான் பேசியது, முருகதாஸைக் கிண்டலடிக்கும் நோக்குடன் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோல்விப் பழியை அடுத்தவர் மீது சுமத்துவதா
ஒரு படத்தின் தோல்விக்கு, இயக்குநர் தன் பங்களிப்பை ஏற்றுக்கொண்ட பிறகும், பொது மேடையில் அந்தத் தோல்விப் பழியை, இயக்குநரின் பணி நேரம், அல்லது மற்ற நடிகரின் பழக்கவழக்கம் மீது சுமத்துவது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது. சினிமா துறையில் ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கும் சல்மான் கான், பொதுவெளியில் சக கலைஞரின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடுவது, அவர் மீதான விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
திரைப்படத் துறையில் ஒரு பெரிய ஸ்டார் என்ற முறையில், சல்மான் கான் காட்டிய இந்த அணுகுமுறை, பாலிவுட்டில் உள்ள மற்ற நட்சத்திரங்களுக்கும், இயக்குநர்களுக்கும் இடையே இருக்கும் 'பவர் டைனமிக்ஸை' வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications