'சட்டமும் நீதியும்' விமர்சனம்: சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் யதார்த்தமான நீதிமன்றத் தொடர்!

Subscribe to Oneindia Tamil

"சட்டமும் நீதியும்" விமர்சனம்

மதிப்பீடு: 4.5/5
ஓடிடி தளம்: ZEE5
எழுத்து: சூரிய பிரதாப் எஸ்.
இயக்கம்: பாலாஜி செல்வராஜ்

நடிப்பு: சரவணன், நமிர்தா மற்றும் பலர்.

television sattamum neethiyum

கதைச் சுருக்கம்

"சட்டமும் நீதியும்" ஏழு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு வலைத் தொடராகும். இத்தொடரின் முதல் காட்சியிலேயே ஒரு பரபரப்பான காலைப் பொழுதில் நீதிமன்ற வாசலில் குப்புசாமி என்ற 60 வயது முதியவர், தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொள்கிறார். அவரைத் தடுக்க இயலாமல் வேடிக்கை பார்த்த மக்கள் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியுடன் கதை தொடங்குகிறது.

அதே நீதிமன்ற வளாகத்தில், நோட்டரி பப்ளிக் ஆகச் செயல்பட்டு, டைப்பிங் செய்து வாழ்க்கை நடத்தும் சரவணன் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அதே நீதிமன்றத்தில் வக்கீலுக்குப் படித்துவிட்டு, யாரிடமாவது ஜூனியராகச் சேர வேண்டும் என்ற துடிப்புடன் வலம் வருகிறார் நமிர்தா.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் சரவணனும் மேலும் இரு நபர்களும் உரையாடிக் கொண்டிருக்கும்போது, சரவணன் எடுத்துரைக்கும் சில முக்கிய சட்டத் திட்டங்களின் வரையறைகள், அவை எந்தச் சட்டப் பிரிவுகளின் கீழ் வருகின்றன என்பது குறித்த பேச்சை அருகில் இருந்து கேட்கும் நமிர்தா, தான் அவரின் ஜூனியராகச் சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்கிறார். அதற்கு சரவணன், "நான் டைப்பிஸ்ட் தான். என்னுடன் இருந்து உதவி செய்தால் சாப்பாடு மட்டும் தருகிறேன்; சம்பளம் எதுவும் எதிர்பார்க்காதே" என்று தனது நிலையைக் கூறுகிறார்.

சரவணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். மகன் எப்போது பார்த்தாலும் அப்பாவை இகழ்ந்து பேசுகிறான். காரணம், அவர் எந்த வழக்கிலும் வெற்றி பெற்றது கிடையாது என்று குத்திக் காட்டிப் பேசுவான். அதனாலேயே, தந்தை சொல்லியும் சட்டம் படிக்காமல் வேறு ஒரு படிப்பைப் படிக்கப் போகிறேன் என்ற சண்டை தினமும் வீட்டில் நடக்கிறது.

ஒரு கட்டத்தில் சரவணனுக்கு, நாம் ஏன் மீண்டும் ஒரு வழக்கைத் எடுத்து நடத்தக் கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த வழக்குதான், ஆரம்பக் காட்சியில் தீக்குளித்த குப்புசாமியின் தற்கொலை வழக்கு. இதை ஒரு பொதுநல வழக்காக அவர் தாக்கல் செய்கிறார். தனக்கு ஜூனியராக நமிர்தாவைச் சேர்த்துக் கொள்கிறார். பின்னர், இவர்கள் இருவரும் இந்த வழக்கைத் எடுத்து நடத்தும் போது பெரிய பெரிய எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வருகின்றன. அவற்றை எல்லாம் எப்படி சமாளித்து இந்த வழக்கில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதே கதை.

விமர்சனம்

சிறிய கதைதான். ஆனால், இதைத் திரைக்கதையாக வடிவமைத்த விதம் மிக மிக அற்புதமாக இருந்தது. குறிப்பாக, அனைத்துக் காட்சிகளும் யதார்த்தமாக இருந்ததால், நாம் கதைக்குள் ஒன்றிப் பயணிக்க முடிந்தது. அனைத்துக் கதாபாத்திரங்களும் அந்தந்தப் பாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தனர்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் எளிமையாகப் பார்வையாளர்களின் மனதில் பதியும்படி செதுக்கப்பட்டிருந்த விதம் அருமை. இந்தக் கதை, முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் இரு தரப்பு வக்கீல்களும், வாதாடும் காட்சிகளை முக்கியக் காட்சிகளாகக் கொண்டுள்ளது. அந்தக் காட்சிகள் அனைத்தும் எங்குமே யதார்த்த மீறல்கள் இல்லாமல், நடைமுறையில் எப்படி இருக்குமோ அப்படியே எடுக்கப்பட்டிருந்த விதம்தான் இந்தத் தொடரின் வெற்றி என்று சொல்லலாம்.

அதுவும் சரவணன் மற்றும் நமிர்தாவின் நடிப்பு என்று சொல்வதைவிட, அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். மேலும், குப்புசாமி, இவரின் மகளாக நடித்த வெண்ணிலா ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும், இவர்களின் நடிப்பு கதைக்கு பலமாக அமைந்தது.

ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் அனைத்துமே ஒரு புதிய காற்றைச் சுவாசித்த உணர்வைத் தந்தன. அதுவும் அந்தக் கடைசியில் வரும் பாடலின் வரிகள் எல்லாம் வாழ்க்கையில் நம்பிக்கையையும் எழுச்சியையும் எழுப்பும் அற்புதமான வரிகளைக் கொண்டு எழுதப்பட்டதை வெகுவாகப் பாராட்டலாம்.

மொத்தத்தில், இது அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு வலைத் தொடர். குறிப்பாக, நீதித்துறைக்கு எத்தகைய பலம் உள்ளது, சரியான வாதங்களை எடுத்து வைக்கும்போது எந்த வழக்கும் வெல்லும் என்ற கோணத்தில் காட்டிய விதமும், அதற்காக சரவணன் எடுத்து வைத்த வாதங்களும் உண்மையான நீதிமன்ற வாழ்க்கையைப் பார்த்த உணர்வைக் கொடுத்தது.

சட்டமும் நீதியும் வென்றது!

- குரு கிருஷ்ணன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+