விஜய் மட்டுமல்ல, அஜித், ரஜினி, கமல் இப்படித்தான்! எல்லாரையும் இழுத்து பேசிய சிவகார்த்திகேயன்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தனது பேச்சு மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

வெற்றி கூட்டணி: சிவகார்த்திகேயன் - அனிருத்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ₹300 கோடி வசூலித்து, ஒரு பெரிய சாதனையைப் படைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் நடித்துள்ள 'மதராஸி' படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். இது, அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் எட்டாவது படமாகும். இந்த கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாகவே அமைந்திருக்கிறது. அவர்களின் கூட்டணியின் வெற்றி, 'மதராஸி' படத்திற்கும் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்த தளபதி' சர்ச்சைக்கான முற்றுப்புள்ளி
கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் 'GOAT' திரைப்படத்தில், நடிகர் விஜய் ஒரு துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிகழ்வு குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன், "அமரன் படம் ₹300 கோடி வசூல் செய்தது. அதற்காக எனக்கு எந்த தலைக்கனமும் ஏறவில்லை. சிலர், என்னை 'அடுத்த தளபதி', 'குட்டித் தளபதி' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நான் அப்படிச் செய்தால், விஜய் சார் எனக்குத் துப்பாக்கியைக் கொடுத்திருக்கவே மாட்டார்" என்று கூறினார்.
அண்ணன் அண்ணன் தான்
மேலும், "என்னைக்குமே அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். நான் அதை ஒரு நல்ல அனுபவமாக மட்டுமே பார்க்கிறேன்" என்று பேசி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.விஜய்யின் ரசிகர் பட்டாளம் பற்றிப் பேசிய சிவகார்த்திகேயன், "விஜய் சார் தனது கடைசி படம் 'ஜனநாயகன்' என்று சொல்லிவிட்டு அரசியலுக்குப் போறேன் என்று சொன்னாலும், அவரது ரசிகர்கள் அரசியல் தொண்டர்களாக மாறி அவருடன் செல்கின்றனர்" என்று கூறினார்.
அஜித்தின் ரசிகர்கள்
அதேபோல், அஜித்தின் ரசிகர்கள் குறித்துப் பேசும்போது, "அஜித் சார் ரசிகர் மன்றத்தைக் கலைத்து பல வருடங்கள் ஆகியும், அவர் கார் ரேஸிற்குப் போனாலும், அவருக்கு ஒரு கூட்டம் வருகிறது. அவருக்கு அப்படியொரு கூட்டம் இன்றும் உயிராக இருக்கிறது" என்று பாராட்டினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என தனக்கு முன்னாள் திரையுலகில் சாதித்த அனைத்து நடிகர்களிடமிருந்தும் தான் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும், அவர்களது உழைப்பால் அவர்கள் ரசிகர்களைச் சம்பாதித்திருப்பதாகவும் பேசி, அனைத்து நடிகர்களின் ரசிகர்களையும் கவரும் விதத்தில் பேசினார்.
இந்த பேச்சு, சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும், அவர் தனது பழைய இயல்பு மாறாமல் இருப்பதை உணர்த்துவதாக இருந்தது. 'மதராஸி' படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல படமாக அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications