சாதாரண ஆள் கிடையாது சௌபின் சாஹிர்.. மனுஷன் மிரட்டறாரு! விருந்துக்கு பதிலா படையலை போட்ட கூலி லோகேஷ்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நேற்று முன்தினம் வெளியான படம் கூலி.. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு பிறகு இந்த படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, கூலி படம் குறித்த தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார். அதில், சூப்பர் ஸ்டார்களை கட்டி ஆண்ட லோகேஷ் கனகராஜை பாராட்டியிருக்கிறார்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ரஜினி சார் மெகா சூப்பர் ஸ்டார்.. ஸ்கிரீன் பிளேயில் லோகேஷை அடித்து கொள்ளவே முடியாது,.. அனிருத்தை பொறுத்தவரை, ரஜினி படம் என்றாலே கூடுதலாக கேர் எடுக்கக்கூடியவர்..
இதுபோக சன் பிக்சர்ஸ்.. சுத்தமான 100 சதவீத வியாபாரிகள்.. இந்த நாலு விஷயம் விஷயங்களையும் தாண்டி, அந்தந்த மாநிலங்களின் சூப்பர் ஸ்டார்களும் இணைந்துள்ளனர்.. இப்படி அனைத்து விஷயங்களையும் சேர்த்து படத்தை எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.. விருந்து வைக்க சொன்னால் படையலே போட்டுவிட்டார்.

டூரிங் டாக்கிஸ் உணர்வு
அரசியலுக்கு வருவது குறித்தும், அம்பானி குடும்பத்தில் டான்ஸ் ஆடியது குறித்தும் பல்வேறு விமர்சனங்களை நான் ரஜினி சார் மீது வைத்திருக்கிறேன்..அதேசமயம், சூப்பர் ஸ்டாராக அவரது உழைப்பை நாம் அனைவருமே மதிக்க வேண்டும்.. இந்த 75 வயதில் 172 படங்களையும் கடந்து, இந்த படத்தில் சம்பவம் செய்வார் என்று பார்த்தால், படம் முழுக்கவே சம்பவமாக இருக்கிறது.
சிலருக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், கூலி படம் நிறைவாகவே உள்ளது.. அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, ஆடு புலி ஆட்டம் படங்களில் பார்த்த நம்முடைய ரஜினியையே கண்முன் நிறுத்திவிட்டார்கள்.. இதுவும் பிளாக் & ஒயிட்டில் பார்த்தபோது, நாங்கள் அந்த காலத்தில் டூரிங் டாக்கிஸில் படம் பார்த்த உணர்வை தந்துள்ளது.
இந்த படத்தில் லாஜிக் இடிக்கிறது, சில இடங்களில் தொய்வு இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.. லாஜிக் என்று பார்த்தால், இன்றைய காலகட்டத்தில் எந்த படமும் நம்மால் பார்க்க முடியாது.. அந்த லாஜிக்குகளை எல்லாம், சூப்பர் ஸ்டார் சமன் செய்துவிட்டார்.
தெறிக்கவில்லை ரத்தம்
ரஜினிக்கு வேண்டாதவர்கள், அவருக்கு புகழ் கிடைக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் திட்டமிட்டு, காழ்ப்புணர்ச்சியால் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்..
ஆபாசம் என்பது சிறிதும் கிடையாது.A சர்ட்டிபிகேட் தரப்பட்டுள்ளது.. பொதுவாக வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தால், ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்தால், A சர்ட்டிபிகேட் தருவது வழக்கம்.. இந்த கூலி படத்தில் ரத்தம் தெறிப்பது போல வன்முறை காட்சிகள் ஒன்றிரண்டு இருக்கிறது.. ஆனால், அந்தளவுக்கு ரத்தம் தெறிக்கவில்லை.
கட்டி ஆண்ட லோகேஷ் கனகராஜ்
சௌபின், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என பெரிய பட்டாளங்களை இந்த படத்தில் நடிக்க வைத்து, கட்டி ஆண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்..உண்மையிலேயே பாராட்டக்கூடிய அற்புதமான இளைஞர். இந்த படத்தில் கடுமையாக உழைத்துள்ளார் லோகேஷ்.. இத்தனை பேரை நடிக்க வைத்தாலும், எந்த வகையிலும் ரஜினி ரசிகர்களை ஏமாற்றவில்லை.. ரூ.200 தந்து படத்தை பார்க்கக்கூடியவர்களையும் லோகேஷ் ஏமாற்றவில்லை.
சாதாரண ஆள் கிடையாது
படம் விறுவிறுப்பாக, திரைக்கதை வேகமாக இருக்கிறது.. சௌபின் நடிப்பை சொல்லியே ஆக வேண்டும்.. அவரை பார்த்து ரஜினிகாந்த்தே வியந்துள்ளார்..
"சாதாரண ஆள் கிடையாது" என்று படத்தில் 2 இடங்களில் சௌபினை பற்றி ரஜினி சொல்கிறார்.. இதை உண்மையிலேயே உணர்ந்து சொல்லியிருக்கிறார் ரஜினி.அப்படியொரு எனர்ஜி சௌபினிடம் உள்ளது.. அவரது உருவத்துக்கும், நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை. மனுஷன் எனர்ஜியில் ரஜினியையும் சேர்த்து மிரட்டுகிறார்.. ரஜினிக்கு நிகராக செளபினுக்கு நடிக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது..
ரஜினிகாந்த்தும் நாகார்ஜுனாவும் மோதும் சண்டை காட்சிகள் பவர்ஃபுல்லாக இருக்கிறது.. இந்த கூலி படத்தில் ரஜினிக்கு டூப் போட்டிருப்பார்கள் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், டூப் கிடையாது.. சண்டை காட்சி உட்பட நேரடியாக ரஜினியின் முகத்தை காட்டியே எடுக்கப்பட்டுள்ளது" என்றெல்லாம் பாராட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications